ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 3, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி: கரோனா வைரசை எதிர்கொள்ளும் நடவடிக்கையை பொறுத்தமட்டில் 1980-களில் எச்.அய்.வி. எய்ட்ஸ் நெருக்கடியின்போது செய்த அதே தவறை உலக நாடுகள் இப்போதும் செய்கின்றன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேஸ் அவர்கள் பேசியிருப்பது சரியா?

        - கு.இராஜேஸ்வரி, கடப்பாக்கம்.

பதில்: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேஸ் அப்படி கருத்துச் சொல்ல தகுதியும், உரிமையும் உடையவர் என்பதால், அவர் கருத்துரிமையை யாரும் பறிக்கக் கூடாது.

- - - - -

கேள்வி:  ஜப்பானில் நூறு சதவீதம் காதல் திருமணம் நடைபெறும்போது இந்திய ஒன்றியத்தில் அவை சாத்தியப்படாதது ஏன்? குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளும் அரசு அவர்களுக்குரிய பாதுகாப்பும், சலுகைகளும் அளித்து ஊக்குவித்தால் சாத்தியப்படும் அல்லவா?

                  - கண்மணி, காஞ்சிபுரம்.

பதில்: காதல் திருமணங்களுக்கு இங்கு இருப்பது போல படிக்கட்டு ஜாதி வர்ண முறையும், 3000க்கும் மேற்பட்ட ஜாதிப் பிரிவுகளும் அங்கு இல்லை! புரோக்குமின் பிரச்சினை இருந்தாலும் பரவலாகக் காதல் திருமணங்கள் அங்கே நடைபெற எந்தத் தடையும் இல்லை!

- - - - -

கேள்வி:   நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்என்று கூறுவதை தேசவிரோதக் குரல் என்றும், அதனை ஒடுக்க கடும் சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது விந்தையாக உள்ளதே!

          - . அருள்ஜோதி, மேட்டுக்குப்பம்.

பதில்: தமிழ்நாட்டில் பா... வளரவே வளராமல்¢ பார்த்துக் கொள்ளும் வேலையை எதிர்க்கட்சிகளைவிட, அக்கட்சியே இப்படித் தங்கள் கட்சிக்கு நன்கு குழி தோண்டும் வேலையைத் திறம்படச் செய்கின்றது - இதன் மூலம் தொடரட்டும் அவர்களதுதிருப்பணி!”

- - - - -

கேள்வி:    மேற்குவங்க சட்டப் பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரை இல்லாமல் தொடங்கப்பட்டதாமே! இது எப்படி சாத்தியமானது?

            - சு.மோகன்ராஜ், தாம்பரம்.

பதில்: முதலமைச்சர் மம்தாவின் மன உறுதி, மக்கள் ஆதரவு, ஆளுமை, துணிவுடைமை! இப்படி ஓர்அமைதிப் புரட்சிபோலும்!

- - - - -

கேள்வி: மாநில அரசு ஒரு குறிப்பிட்ட தேர்வுமுறையின் நன்மை தீமைகள் குறித்துக் கருத்து அறிய குழு நியமிப்பது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படுமா?

                  - திராவிட விஷ்ணு, வீராக்கன்.



பதில்: நீதி மன்ற அவமதிப்பு என்ற மிரட்டல் நியாயப்படியும், சட்டப்படியும் தவறு. அதனால்தான் தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள், இயக்கங்கள் ஓரணியில் நின்று, உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில் தனித்தனியாக இணைத்துக் கொள்ளும் (Implead) முடிவை எடுத்துள்ளனர்.

- - - - -

கேள்வி:  புதுச்சேரி மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் ஒன்றிய அரசு என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்துள்ளனரே!

- சு.ரேவதி, புதுச்சேரி.

பதில்: அவர்கள் மட்டும் தேச பக்தர்கள்,,, மற்றவர்கள் தேச விரோதிகளா இந்த இரட்டைப் போக்கைப் புரிந்துகொள்வீர்!

- - - - -

கேள்வி:  மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்வதாக புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் ஜான் ட்ரீஸ் கருத்து அளித்திருப்பது அய்ம்பது ஆண்டுக்கால திராவிடக் கட்சிகளின் சாதனை என்று எடுத்துக் கொள்ளலாமா?

               - கே.எம். மோகன், கொளத்தூர்.

பதில்: ஆம். நூற்றுக்கு நூறு உண்மைதான் அது!

- - - - -

கேள்வி: பிறப்பால் மக்களை இழிவுப்படுத்தும் மனுதர்மத்தை எதிர்த்துப் போராட வேண்டும், பகுத்தறிவு - சுயமரியாதைப் பெரும்புரட்சியில் உங்கள் பங்களிப்பைக் கொடுத்து சமூகநீதி பெற்றே ஆக வேண்டும் என தங்களைச் சிந்திக்கச் செய்த  நிகழ்வு என்று ஏதேனும் உள்ளதா அய்யா?

- .தாட்சாயினி, பெரியாரியல் பயிற்சி பட்டறை மாணவி, மதுரை.

பதில்: 1944 ஜூலையில் தந்தை பெரியாரை கடலூரில் முதன் முதலில் பார்த்து, அவர் தம் உரையை கேட்டதிலிருந்து, இந்த உறுதி எனது மனதில் தானே ஏறி நிலைத்து விட்டதே!

- - - - -

கேள்வி:  பொதுத்துறை நிறுவனங்களில் இயக்குநர் களாக பாஜகவை சேர்ந்த பொறுப்பாளர்களை நியமித்து அதன் மூலம் வேகவேகமாக பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப் படுகின்றன என்று சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளாரே!

-அய்ன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி.

பதில்: உண்மை சுடுகிறது; ஆனால் பா... வெட்கப் படவோ, அதிகார அத்துமீறல் பற்றிய சிந்தனையோ இல்லாமல் கூச்சநாச்சமின்றி செயல்படுகிறார்களே!

- - - - -

கேள்வி:  ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர எந்த மாநில அரசும் முயற்சி எடுக்க முன் முன்வரவில்லையே?

- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை.

பதில்: இப்போதுதான் நாம் ஊட்டிய உணர்வு சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. கொஞ்சக் காலத்தில் நல்ல பலன் விளையும் என்று நம்புவோமாக.

No comments:

Post a Comment