குத்துச்சண்டையில் ஜொலிக்கும் சுபாஷினி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 20, 2021

குத்துச்சண்டையில் ஜொலிக்கும் சுபாஷினி

கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணத்தைச் சேர்ந்த ஏழை மாணவி சுபாஷினி, குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

கடலூர் மாவட்டம், சிறீமுஷ்ணத்தைச் சேர்ந்த சுரேஷ் - மணிமொழி தம்பதியின் மகள் சுபாஷினி (16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது தந்தை கட்டிடத் தொழிலாளி. தாயார் தெருவோரத்தில் இட்லி கடை நடத்தி வருகிறார். குடும்ப வறுமைச் சூழலிலும், பள்ளிப் படிப்பை தாண்டி சுபாஷினி விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனை அறிந்த பள்ளி தலைமைஆசிரியர் வடிவேல் இதற்கான உதவிகளைச் செய்ய, பள்ளியின் பயிற்சியாளர் சத்தியராஜ் மாணவியை ஊக்கப்படுத்தி தொடர்ந்து பல்வேறு உடற்திறன் பயிற்சிகளை அளித்து வந்தார்.

சுபாஷினியின் திறமையை வளர்க்கும் பொருட்டு கராத்தே கிராண்ட் மாஸ்டர்சென்சாய் ரங்கநாதன், விளையாட்டு மற்றும் உடற்திறன் சிறப்பு பயிற்சியாளர்கள் இளவரசன், பிரித்திவி ஆகியோர் சுபாஷினியை குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுத்தினார்கள்.

ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்ட சுபாஷினி, பள்ளி மாணவிகள் அளவில் இளையோருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 2016ஆம் ஆண்டு மாநில அளவில் முதல் இடத்தில் வென்றார். பின்னர் 2017, 2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்து பள்ளிக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.ஏழ்மை நிலையின் காரணமாக சரியானசத்தான உணவு கிடைக்காத நிலையிலும், குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சியில் பயன்படுத்தப்படும் பல பொருட்களை சிலரிடம் உதவியாகப் பெற்று, மன உறுதியால் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதிதமிழ்நாடு பாக்ஸிங் ஃபெடரேஷன் சார்பில் சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற 52 - 54 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் கடலூர் மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அரியானாவில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு சுபாஷினி தேர்வு பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியானது வரும் 25ஆம் தேதி அரியானா மாநிலத்தில் சோனேபட் டில்லி பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற சுபாஷினி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பள்ளித்தலைமையாசிரியர், பயிற்சியாளர்கள் அளித்த வழிகாட்டுதலும், ஊக்கமும் என்னை வெற்றி பெற வைக்கிறது. வருங்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நம்பிக்கையோடுபேசுகிறார் சுபாஷினி. நற்திறனுடன் சாதிக்கத் துடிக்கும் சுபாஷினியை தமிழ்நாடு அரசு தத்தெடுக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அன்பு வேண்டுகோள்.

No comments:

Post a Comment