ராணுவப் பணியில் கணவனைப் பின்தொடரும் நிகிதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 20, 2021

ராணுவப் பணியில் கணவனைப் பின்தொடரும் நிகிதா

ராணுவ வீரர் என்றாலே நம் நினைவுக்கு வருவது சீருடை அணிந்து கட்டுக்கோப்பான உடலமைப்பும் கூரான மீசையும்கொண்ட ஆண்களின் உருவம்தான்.  ஆனால், இந்திய ராணுவத்தில் பெண்களும் இருந்துவருகிறார்கள். அண்மையில் காஷ்மீரைச் சேர்ந்த நிகிதா (29) ராணுவத்தில் இணைந்திருக்கிறார். நிகிதாவின் கணவரும் உத்தராகண்டைச் சேர்ந்தவருமான மேஜர் விபூதிசங்கர், இந்திய ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்காக உயிர்நீத்தவர்.

2019 பிப்ரவரி 18 அன்று ஜெய்ஷ்--முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த மூன்று ராணுவ வீரர்களில் ஒருவர் மேஜர் விபூதிசங்கர். இதில் கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளில் இருவர் 2019 பிப்ரவரி 14 அன்று தெற்கு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த 40 மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்களைக் கொன்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்கள்.

விபூதிசங்கர் மறைந்த பிறகு அவருக்கு ஷௌர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது. அவருடைய மரணத்தால் நிகிதாவின் திருமண வாழ்க்கை ஒன்பது மாதங்களில் முடிவுக்கு வந்தது. இதனால் துவண்டுவிடாத நிகிதா, கணவனைப் போலவே தானும் தேசப் பாதுகாப்புப் பணியில் இணையத் தீர்மானித்தார்.

இதற்காக டில்லியில் பன்னாட்டு நிறுவனப் பணியை நிகிதா துறந்தார். தேர்வில் தேர்ச்சிபெற்று சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு பயிற்சியை நிறைவுசெய்தார். கடந்த மே 29 அன்று இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர் லெஃப்டினென்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி, ராணுவ வீராங்கனையாக நிகிதா இணைக்கப்படுவதன் அடையாளமாகத் தோள்பட்டையில் நட்சத்திரங்களைப் பதித்தார். கணவனை இழந்த இரண்டே ஆண்டுகளில் நாட்டைப் பாதுகாப்பதில் அவருடைய பணியைத் தொடர்வதற்காக ராணுவத்தில் இணைந்திருக்கிறார் நிகிதா.

No comments:

Post a Comment