தமிழ்நாட்டில் மீதம் உள்ள பகுதிகளில் செப்.15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 16, 2021

தமிழ்நாட்டில் மீதம் உள்ள பகுதிகளில் செப்.15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்

சென்னை, ஜூலை 16 திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்று (15.7.2021) ஆய்வு செய்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. திமுக நீதிமன்றத்தை நாடியதால் ஒருசில இடங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. வரும் செப்டம்பர் 15-க்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மீத முள்ள பகுதிகளில் செப்டம்பர் 15-க்குள் உள்ளாட்சித் தேர் தலை நடத்த அரசும், ஊரக வளர்ச்சித் துறையும் பணிகளை தொடங்கிவிட்டன.

குறிப்பிட்ட காலத்துக்குள் தொகுதி மறுவரை செய்யப் பட்டாலும், செய்யப்படாவிட்டாலும் நீதிமன்றம் கூறியுள்ள தேதிக்குள் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்கான தகுந்த ஏற்பாடுகளை அரசும், உள்ளாட்சித் துறையும் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பரிகாரம் செய்வதாக கூறி சிறுமியிடம் பாலியல் வன்முறை பூசாரிக்கு சாகும் வரை சிறைத்தண்டனை

இராமநாதபுரம், ஜூலை 16- தூத்துக்குடி மாவட்டம் முக்கானி யைச் சேர்ந்த மாசானமுத்து (57), சுடலைமாட சுவாமி கோயில் பூசாரியாக உள்ளார். 2019இல் ஒரு பெண்ணிடம், அவரது 15 வயது மகளை இராமேசுவரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று பரிகாரம் செய்தால் உடல்நிலை சரியாகும் என கூறியுள்ளார்.

பின்னர், சிறுமியை அழைத்துச் சென்று இராமேசுவரம் விடுதியில் தங்க வைத்த மாசானமுத்து, பாலியல் வன்முறை செய்துள்ளார். சிறுமி அங்கிருந்து தப்பி, இராமேசுவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாசானமுத்துவை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த இராமநாதபுரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, மாசான முத்துவை உயிர்போகும் வரை சிறையில் அடைக்கவும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

இயற்கையை அழித்து வளர்ச்சி

திட்டங்கள் மேற்கொள்ளக் கூடாது

உயர்நீதிமன்றம் அறிவுரை

சென்னை, ஜூலை 16 இயற்கையை அழித்து வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் படூரில் ஏரியை மணலால் நிரப்பி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிறீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு இயற்கையை அழித்து வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது.  மாநில அரசே நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது எனவும், நீர் நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதில் எந்த வித பாதிப்பும் இல்லாத வகையில் நீர்நிலைகள் மேல் பாலம் அமைத்து சாலை அமைக்கலாம் என நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர்.

மேலும், நீர்நிலைகளை தமிழ்நாடு அரசு ஆக்கிரமிக்கக் கூடாது என உத்தரவிட்டு, இது குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என கூறி  வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment