ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 5, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி:   உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான  'விடுதலை' நாளேட்டின் 87 - ஆம் ஆண்டு பிறந்தநாளை (01.06.2021) முன்னிட்டு  இளைஞர்களுக்கும் மாணவர் களுக்கும் தாங்கள் விடுக்கும் செய்தி என்ன?

- இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்

பதில்: 'உடல் நலத்தையும் உள்ள வளத்தையும் பாதுகாத்தும் பலப்படுத்தியும் பகுத்தறிவாளர்களாக வாழ்வதும், மானமும் அறிவும் என்றும் நம் வாழ்க்கை முறை என்பதை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பரப்பியும், அனைவரும் உறவினர் என்பது திராவிடத் தின் ஜாதியற்ற மத மாச்சர்யம் அற்ற பாலின வேற்றுமை பாராத திராவிடத்தின் தாக்கம் என்ற வாழ்வின் விளக்குகளாக இருந்து வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டே இருங்கள் - பெரியார் என்ற பேராயுதத்  துணையுடன்" என்பதே.

- - - - -

கேள்வி: மத்திய அரசு! ஒன்றிய அரசு!! அரசமைப்பு சட்டப்படி எது சரியானது ?

-சு.கிருஷ்ண மூர்த்தி, திருத்துறைப்பூண்டி

பதில்: கூட்டரசு என்பதே சரியானது!  மாநிலங்கள் இணைந்த கூட்டமைப்பின் அரசு அரசியல் சட்ட கருத்துப்படி  விரிந்த பொருள் பெறும் தமிழாக்கம் இதுவே.

'ஒன்றியம்' என்பது இன்று பல ஏடுகள் பயன்படுத்தும் சொல்லாகும். மத்திய அரசு என்பதை விட கூட்டரசு என்ற சொல்லே பயன்பாட்டுக்கு, தத்துவரீதியாக சரியாக இருக்கக் கூடும் என்பது இந்த எளியவனின் கருத்தாகும்.

- - - - -

கேள்வி: சமூகநீதிக் காவலர்  வி.பி.சிங் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான  'தி லோன்லி புரொபட் '  எனும் நூலை தமிழில் மொழி பெயர்க்க  ஆவன செய்வீர்களா?

                  - சீதாலட்சுமி, திண்டிவனம்.

பதில்: நல்ல யோசனை; அந்த நூலை அடிப்படை யாகக் கொண்டு, திராவிடர் இயக்கம், தமிழ்நாட்டு மக்கள் நேசிப்பு இவற்றை மய்யப்படுத்தி, அவரது சிறப் பியல்புகள் பற்றிய ஒரு தனி நூலே கொண்டு வரப்படுதல் அவசியம் ஆகும். தமிழ்நாட்டுடன் ஒன்றியவர் அவர்; நியாயவான் - நேர்மையாளர்.

- - - - -

கேள்வி: பார்ப்பனர்களுக்கு ஆதரவாக நான் துணை நிற்பேன் என்று தமிழக பாஜக தலைவர்  எல். முருகன் கூறினாலும், பார்ப்பனர்கள் இவரை ஏற்றுக் கொள்வார்களா?

                  - . சாந்தி, நாமக்கல்.

பதில்: அது வெறும் கற்பனை ஆசையாகவே - கானல் நீர் வேட்டையாகவே முடியக்கூடும்.

- - - - -

கேள்வி: அய்ரோப்பியப் பயணம் மேற்கொண்ட தந்தை பெரியார் தன்னுடன் பயணித்த எஸ்.இராம நாதனை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டார் என்று கூறுகிறார்களே - உண்மையா?

- அயன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி

பதில்: இது ஒரு தவறான கருத்து. அக்கால அக்கிரகாரத்தால் திட்டமிட்டு பரப்பப்பட்ட அவதூறு. இதுபற்றிய முழு விவரங்களை "அய்ரோப்பாவில் பெரியார்" என்ற ரஷ்ய சுற்றுப் பயண விவரங்கள் அடங்கிய நூலில் அய்யாவே தெளிவுபடுத்திய பகுதிகளைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- - - - -

கேள்வி: இலட்சத்தீவில் ஒன்றிய அரசு தம் பிரதி நிதிமூலம் செய்து வரும் அடாவடித்தனத்தை கண்டித்து கேரள சட்டமன்றம் தனித்தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது சட்டப்படி சரியா?

- இளவரசன், சுத்தமல்லி

பதில்: சட்டப்படியும் சரி, நியாயப்படியும் சரியே! லட்சத்தீவு, கேரளாவிற்கு (நமக்கு புதுவை போல) அண்டை மாநிலப் பகுதியாகும் - யூனியன் பிரதேசம் என்றாலும் கலாச்சாரப் பிணைப்பும் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

- - - - -

கேள்வி: தமிழ்நாடு என்று சொல்லாமல் "தமிழகம்"  என்று எழுதவேண்டும் என்னும் மாலனின் சிந்தனை எங்கிருந்து பிறக்கிறது.?

- சு.அறிவன், வீராக்கன்

பதில்: அறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசே ஏற்றுக்கொண்டதற்கு மாறாக, இப்படி தங்களுடைய அதிதீவிர தேச பக்தியின் வெளிப்பாடு போல காட்டிக் கொள்ள முயல்கிறது.  உமீன் சந்த் பரம்பரை  அது அரசியல் சட்டப்படி உரிமை பெற்றது. அதைத்தான் 'பளிச்' என்று தமிழ்நாடே என்றே அழைப்பதே சரியானது - பூணூல்கள் இதன் மூலம் எங்கே செல்கிறது என்பது புரிக!   'நாகாலாந்து' என்பதையும் மாற்றி விடுவார்களா?

- - - - -

கேள்வி: ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் நடவடிக்கை சரியா?

- தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு ஊழல் சாம்ராஜ்யமாகியதால்  வெளியான தகவல்கள் 

அதிர்ச்சியூட்டக் கூடிய நிலைமை. இப்படி ஒரு

ஏற்பாடு காலத்தின் கட்டாயம். முன்பு  தமிழ்நாடு தேர்வாணையம் தான் அப்பணி செய்தது. மீண்டும் அதை செய்வதன் மூலம் அதன் பயன் முழுமையாக அமைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் இந்த ஏற்பாடு என்பதால் வரவேற்கலாம்.

- - - - -

கேள்வி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீடு-உள்ஒதுக்கீடு பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா?

- செ.பாக்கியா, விருத்தாச்சலம்

பதில்: ஏற்கெனவே அச்சட்டத்தின்போதே முன்னாள் முதல்வர் தந்த விளக்கம் என்ன?. இடஒதுக்கீடு சம் பந்தமான ஒரு சட்டம் தற்காலிகமானது - ஜாதி வாரிக் கணக்கெடுப்பு முடிந்தவுடன் தெளிவாகும் என்பது தானே அப்போது தரப்பட்ட விளக்கம்; அதற்கென ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியும் நியமிக்கப்பட்டாரே அதெல் லாம் ஏன் இப்போது வசதியாக மறந்து விட்டது?

69 சதவிகித இடஒதுக்கீடுகள் செய்யப்படும் நிலையில், 69 சதவிகித இடஒதுக்கீட்டையே ஒழிக்க எண்ணுபவர்களை முறியடித்து மற்ற ஒதுக்கீடுகள் நிலைக்க, தொடர வழி ஏற்படும் என்பது விஞ்ஞான உண்மையாகும்.

- - - - -

கேள்வி: சமூக சீர்திருத்தப் பணிகளை மேற் கொள்ளும் துறை எது? அதற்கென சட்ட வலிமை கொண்ட ஆணையம் அமைத்தால் என்ன?

- கலைமகள், அரியலூர்

பதில்: சமூக சீர்திருத்தம் - அப்படி ஒரு தனித்துறை இன்னும் அமையவில்லை; அமைக்கப்பட வேண்டும். மகாராட்டிர மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் போல நிறைவேற்ற வேண்டும் என்றும் - அத்துறை குழந்தை மணம், நரபலி, மூடத்தன நடவடிக்கைகளை சட்ட விரோத மாக்கி தடுக்க வழி ஏற்படுத்தலாம். அக்காரி யத்தை திமுக அரசு செய்யும் என்று நம்புகிறோம்.

No comments:

Post a Comment