திருமணம் ஒப்பந்தமா - புனிதமான சடங்கா?

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் சசிகுமாருக்கும் அவரது வாழ்விணையர் இந்துமதிக்கும் இடையிலான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பமை நீதிபதி எஸ். வைத்தியநாதன் அவர்கள் "திருமணம் என்பது ஒப்பந்தம் அல்ல; ஒரு புனிதமான சடங்கு என்பதை இப்போதைய தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும்" என்று ஒரு கருத்தாகக் கூறி இருக்கிறார். ('தினமணி' 2.6.2021 பக்கம் 5).

உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கக் கூடியவரது கருத்து என்பதால் சமூக மாற்றத்திற்கான சிந்தனையுடையோர் என்ற தன்மையில் இது பற்றிய கருத்தைக் கூற வேண்டியது அவசியமாகி விட்டது - இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால்.

திருமணம் என்பது ஒரு கால கட்டத்தில் தாரா முகூர்த்தமாக இருந்தது. பெண்ணைத் தானமாகத் தாரை வார்த்துக் கொடுப்பது ஆகும்.

அக்னி ஹோத்ரம் ராமனுஜ தாத்தாச்சாரியாரின் 'இந்து மதம் எங்கே போகிறது?' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளதாவது:

'திருமணப் பத்திரிகைகளுக்கு விவாஹ சுபமுகூர்த்த பத்திரிகை எனப் பெயரிட்டு அடிக்கிறார்கள். விவாஹம் என்றால் Tribal வார்த்தை - அதாவது மலைப்பிரதேசத்தில் பழங்குடியினர் வார்த்தை. இதற்கு, தூக்கிக் கொண்டு ஓடுதல் என்று அர்த்தம். இந்த அர்த்தத்தை நியாயப்படுத்தவேண்டும் என்பதற்காகவே திருமணங்களில் உறவினர்கள் பெண்ணைத் தூக்கிக் கொண்டு போவது என்ற ஒரு சடங்கைத் திணித்திருக்கிறார்கள்" என்று அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதுகிறார்.

பழைய சாஸ்திரங்கள்படி திருமணம் எட்டு வகை என்று கூறப்படுகிறது. 1. பிரமம், 2. பிரசாபத்தியம், 3. ஆருஷமணம், 4. தெய்வ மணம், 5. காந்தர்வ விவாஹம், 6. ஆகர மணம், 7. இராக்ஷத மணம், 8. பைசாச மணம் - இவை எல்லாம் கால ஓட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாமலும் சட்டத்திற்கு விரோதமாகவும் ஆக்கப்பட்டு விட்டன.

பெண்களுக்கான திருமண வயது பிரச்சினையில் சாஸ்திரங் களைத் தாண்டி அவற்றைத் தூக்கித் தூற வைத்து விட்டுதான் பெண்ணின் திருமண வயது 18 என்று சட்டம் வரையறுத்துள்ளது. மேலும் வயது கூடக் கூடும் என்பதுதான் தற்போதைய நிலைமை.

சாத்திரங்கள் என்ன கூறுகின்றன? பராசரஸ்மிருதி பிராய சித்த காண்டம் நான்காவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டு இருப்பதாவது: எட்டு வயதுடையவள் கவுரி, ஒன்பது வயதுடையவள் ரோகிணி, 10 வயதுடையவள் கன்னிகை, 10 வயதுக்கும் மேற்பட்டவள் ரஜஸ்வலை என்று கூறப்படுகிறது.

இவற்றுள் கவுரி, ரோகிணி, கன்னிகை ஆகிய மூவரும்தான் விவாகத்திற்குத் தகுந்தவர்கள்.  ரஜஸ் வலையானவள் விவாகத் திற்குத் தகாதவள். அவளைத் தானம் செய்கிறவன் நரகத்தை அடைகிறான். இப்பெண்ணுடைய தாய், தந்தை, மூத்த சகோதரன் ஆகிய மூவரும் நரகத்தை அடைவார்கள்.

இவற்றை எல்லாம் இன்று ஏற்க முடியுமா? வைதிகக் கல்யாணத்தில் சடங்குகள் என்ற வகையில் ஒரு நீண்ட பட்டியலே உண்டு. ஓமகுண்டம் நிர்மாணித்தல், சிகை கழித்தல், நலங்கிடுதல், பிதிர் தேவதா பூஜை, அட்டதிக்கு பாலர்கள் சாட்சியம், இந்திரன் அல்லது கிளை விளக்கு, அக்னிதேவன் சாட்சியம், எமன் அல்லது புரோகிதர், வாயு பகவான் அல்லது மாப்பிள்ளைத் தோழன், குபேரன் அல்லது பாக்கியவான், ஈசானமூர்த்தி அல்லது அம்மியும், குழவியும், பாலிகை தெளித்தல், சப்தகலசம்,  அரசாணிக்கால் நாட்டல், கால் மெட்டியணிவது, கங்கணம் தரித்தல், தாரை வார்த்தல்; திருமாங்கலிய தாரணம் என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

இந்தச் சடங்குகளில் பழுத்த- கொழுத்த வைதிகர்கள் வீடுகளில் இவற்றில் இப்பொழுது எத்தனை இடம் பெறுகின்றன என்பது கேள்விக்குறியே!

சப்தபதி வைத்து நடக்காததால் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னதுண்டு.

அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது (குடியரசுத் தலைவர் ஒப்புதல் 17.1.1968).

சுயமரியாதை திருமணத்திற்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் என்றுதான் தந்தை பெரியார் அவர்களால் பெயர் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். (திருக்குறளிலும் வாழ்க்கைத் துணை நலம் என்று ஓர் அதிகாரம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது).

இந்தச் சட்டப்படி, தாலி அணிவிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை - இப்படியாக காலம் காலமாக இருந்து வந்த சடங்குகள் எல்லாம் இருந்த இடம் இல்லாமல் போய்விட்டன!

இதே சென்னை உயர்நீதிமன்றம் திருமணம் ஓர் ஒப்பந்தமே என்ற கருத்தை நீதிபதி கர்ணன் பதிவு செய்ததும் உண்டு.

சடங்கு என்பது அரசமைப்புச் சட்டம்  51A(h) என்பதன் முன் நிற்க முடியுமா என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாகும்.

பெண்ணைத் தாரை வார்ப்பது என்ற சடங்காச்சாரமான சிந்தனைகள் காலத்தைத் தாண்டி எப்படி நிற்க முடியும் என்பதும் முக்கிய கேள்வியாகும்.

இக்கால கட்டத்திலும் இனியும் திருமணம் ஒப்பந்தமே தவிர, சடங்கு அல்ல.

இருவரின் இணைந்த வாழ்வு என்பது வெறும் சடங்குதானா? என்பது சிந்தனை விருந்துக்கான கேள்வியாகும்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image