மத்திய அரசின் கல்வி தரவரிசை குறியீட்டில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் முன்னிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 7, 2021

மத்திய அரசின் கல்வி தரவரிசை குறியீட்டில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் முன்னிலை

புதுடில்லி, ஜூன் 7 மத்திய கல்வி துறை சார்பில் கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு நேற்று வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், அந்தமான் நிகோபர் தீவுகள், சண்டிகர் ஆகியவை முன்னிலை பெற்றுள்ளன.

நாடு முழுவதும் அரசு, தனியார் துறைகளை சேர்ந்த 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. சுமார் 97 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 25 கோடிக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மதிப்பிட்டு கல்வி செயல்திறன் தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. கடந்த 2017-2018ஆம் ஆண்டில் இந்த தரவரிசைக் குறியீடு முதல்முறையாக வெளியிடப்பட்டது.

அதன்படி 2019-2020ஆம் ஆண்டுக் கான கல்வி செயல்திறன் தரவரிசைக் குறியீட்டை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. பள்ளிகளின் கல்வி கற்பிக்கும் நடைமுறை, அடிப் படை கட்டமைப்பு வசதிகள், மதிய உணவு திட்டம் உள்ளிட்ட 70 பிரிவுகளின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தரவரிசை படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி 951 முதல் 1,000 மதிப்பெண்கள் பெறும் மாநிலங்களுக்கு தரவரிசையில் முதலிடம் வழங்கப்படுகிறது. 2019-2020 கல்வியாண்டில் இந்தப் பிரிவில் எந்தவொரு மாநிலமும் இடம்பெறவில்லை. 901 முதல் 950 மதிப்பெண்கள் பெறும் மாநிலங்களுக்கு 2ஆம் இடம் அளிக் கப்படுகிறது. இதில் அந்தமான் நிகோபர் தீவு, சண்டிகர், கேரளா, பஞ்சாப், தமிழகம் ஆகியவை இடம்பிடித்துள்ளன. 851 முதல் 900 வரை மதிப்பெண்கள் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தாத்ரா-நாகர் ஹவேலி, குஜராத், அரியானா, மகாராஷ்டிரா, டில்லி, புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

801 முதல் 850 மதிப்பெண்கள் பெற்ற பிரிவில் ஆந்திரா, மேற்கு வங்கம், டையூ-டாமன், இமாச்சல பிரதேசம், கருநாடகா, ஒடிசா, திரிபுரா, உத்தர பிரதேசம் ஆகியவையும், 751 முதல் 800 மதிப்பெண்கள் பெற்ற பிரிவில் கோவா, உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், லட்சத் தீவுகள், மணிப்பூர், சிக்கிம், தெலங்கானா ஆகியவையும், 701 முதல் 750 மதிப்பெண்கள் பிரிவில் அசாம், பீகார், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகியவையும், 651 முதல் 700 மதிப்பெண்கள் பிரிவில் அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. மேகாலயா, லடாக் ஆகியவை பின்தங்கிய நிலையில் உள்ளன.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் அனைத்து மாநிலங்களும் அதிக பட்ச மதிப்பெண்களை பெற வேண்டும் என்பதே மத்திய கல்வித் துறையின் விருப்பம்என்று தெரிவித்துள்ளார். 


No comments:

Post a Comment