காணொலியில் கழகத் தலைவர் நீதிமன்றங்களின் எல்லை எதுவரை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

காணொலியில் கழகத் தலைவர் நீதிமன்றங்களின் எல்லை எதுவரை?

கவிஞர் கலி.பூங்குன்றன்

13.5.2021 மாலை காணொலி மூலம் திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிய உரையில் 5.5.2021 அன்று உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு குறித்து முக்கியமாகக் குறிப்பிட்டார்.

அந்தத் தீர்ப்பில் மகாராட்டிர மாநிலத்தில்மராத்தா' பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 16 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லாது என்று கூறப்பட்டது. அத்தீர்ப்பில் 50 விழுக் காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு செல்லாது என்றும், பிற்படுத் தப்பட்டோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் உரிமை மத்திய அரசுக்குத்தான் உண்டே தவிர, மாநில அரசுக்குக் கிடையாது என்றும் கூறப்பட்டது. இதற்கு ஆதாரமாக 102ஆம் அரசமைப்புச் சட்டத் திருத் தத்தின் போது (தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட வலிமை தொடர்பானது) நடைபெற்ற நிகழ்வுகளைக் கழகத் தலைவர் எடுத்து விளக்கினார்.

இந்த சட்டம் கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற வில்லை. “செலக்ட்" கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பூபேந்திர யாதவ் எம்.பி. ஆவார். அந்தக் கமிட்டியில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி (திமுக), டி.கே.ரங்கராஜன் (சிபிஎம்), நவநீதிகிருஷ்ணன் (அஇஅதிமுக) மற்றும் பிற மாநிலத்தினரும் இடம் பெற்றிருந்தனர். அந்தக் கமிட்டியில் கருத்துச் சொல்ல திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். எழுத்துப்பூர்வமாகவே கழகத்தின் கருத்துகளை எடுத்துக் கூறி நேரிலும் விளக்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் யார் என்று தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது. மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்ற சட்டத்தின் பிரிவு (342A) மாநில உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது என்று முதன் முதலில் ஆணி அடித்ததுபோல் கூறியவர் திராவிடர் கழகத் தலைவர் தான். ஆனாலும் இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

மகாராட்டிரத்தில் மராத்தா பிரிவினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லாது என்ற தீர்ப்பு - இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பற்றிச் சொல்லும்போது யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்று சொல்லுவதை ஒன்றியம் என்று சொல்லக் கூடாது. அதற்கு வேறு பொருள்; மாநிலங்களின் கூட்டாட்சி என்பதுதான் சரியானது என்று மிக சரியாகவே காணொலி உரையில் குறிப்பிட்டார் நமது கழகத் தலைவர்.

50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திரா சகானி வழக்கில் கூறப்பட்டதையும் மகாராட்டிரா வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டிய கழகத் தலைவர் மண்டல் குழு வழக்கை - ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியபோது, ஜஸ்டிஸ் திரு.இரத்தினவேல் பாண்டியன் தனித்தன்மையாக தனித்த தீர்ப்பை எழுதியிருப்பதில் சுட்டிக் காட்டிய முக்கிய பகுதிகளை எடுத்துக் கூறினார்.

பாலாஜி எதிர் மாநில அரசு வழக்கில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் ஜெத்மலானி கூறியது என்ன? 50 சதவீதத்திற்கு மேல் போகக் கூடாது என்று நீதிமன்றம் சொன்னது தீர்ப்பின் வரிகள் அல்ல. வெறும் கருத்துதான் (Obiter- Dicta) இதற்குச் சட்ட வலிமை கிடையாது என்றாரே! என்று ஜஸ்டிஸ் இரத்தின வேல் பாண்டியன் தன் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜஸ்டிஸ் .சின்னப்ப ரெட்டி என்ன கூறியுள்ளார்? (வசந்த குமார் வழக்கில்), 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியதற்கு என்ன அளவுகோல்? விஞ்ஞானபூர்வமானதா? புள்ளி விவர தரவுகள் உண்டா? என்று கேட்டாரே! ஜஸ்டிஸ் இரத்தினவேல் பாண்டியன் தன் தீர்ப்பில் இவற்றை யெல்லாம் குறிப் பிட்டுள்ளதை கழகத் தலைவர் கூறினார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 12ஆம் பிரிவு என்ன கூறுகிறது? ஸ்டேட்ஸ் என்றால் மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அரசு மூன்றையும் தான் குறிக்கும்.

1928ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோரை முடிவு செய்தது மாநில அரசுதான் - மாநிலத்துக்கு மாநிலம் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையும், தன்மையும் மாறுபடுகிறது. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோரை மாநில அரசு தானே முடிவு செய்ய முடியும் - மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்று வருகிற போது அந்தந்த மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் அடிப்படையில்தானே இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இங்கே மத்திய அரசு எங்கே இருக்கிறது? இன்னும் சொல்லப் போனால் மாநில அரசுக்குத்தான் மக்கள் உண்டு; மத்திய அரசுக்கு நேரிடையாக மக்கள் கிடையாதே.

மகாராட்டிரத்தில் தானே நடந்திருக்கிறது - நமக்கு என்ன என்று அலட்சியமாக இருக்க முடியுமா? கடைசி வீட்டில்தானே தீ பிடித்திருக்கிறது - நம் வீட்டுக்கு ஆபத்தில்லையே என்று கைகட்டி நிற்க முடியுமா? அந்தத் தீ நம் வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் பிடிக்கும்?

அதுவும் உச்சநீதிமன்ற தீர்ப்பு என்றால் எல்லா மாநிலங்களையும் கட்டுப்படுத்தத்தானே செய்யும்!

எனவே மகாராட்டிர மாநில இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் பட்ட வேண்டும் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

(தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளுள் ஒருவரான நாகேஸ்வர ராவ் - அதிமுக அரசு சார்பில் 69 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் ஆவார்).

தமிழ்நாட்டில் முசுலிம்களுக்கும், அருந்ததியர்க்கும், உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாருக்கோ வந்தது என்று அலட்சியமாக இல்லாமல் சமூக நீதி களத்தில் - பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் சிறுபான்மையினர் ஒன்றிணைந்து, நாம் தான் வெகு மக்கள் - ஜனநாயகம் என்பது பெரும்பாலோரால் ஆளப்படுவது என்பதைக் கணக்கில் கொண்டு களத்தில் நிற்க வேண்டும்.

திராவிடர் கழகத்தின் முயற்சியால் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வினைத் திட்பத்தால் 69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டுள்ளது. ஒன்பதாவது அட்டவணையை வைத்துப் பாதுகாக்கவும் படுகிறது.

கருநாடக மாநிலத்தில் உள்ள 73 விழுக்காடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா மற்றும் நீதிபதி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் வழங்கிய தீர்ப்பு என்ன கூறுகிறது?

"தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் அரசுப் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டு சட்டம் (தமிழ்நாடு அரசு) 1993இன்படி வழங்கி வருகிறது. இது அரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணையின் கீழ் கொண்டு வந்துள்ளதால், இது நீதிமன்ற முறு ஆய்விற்கு அப்பாற்பட்டது ஆகும் (ஜூலை 2010) என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது."

இதனையும் கழகத் தலைவர் தன் உரையில் எடுத்துக் கூறினார்.

மேலும் ஒரு முக்கியமான வினாவை எழுப்பினார் கழகத் தலைவர். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு இத்தனை சதவீதம்தான் - இத்தனை சதவீதத்துக்குள் தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு என்ன பதில்? (ஒரு முறை ராம் ஜெத்மலானி இடஒதுக்கீட்டுக்காக வாதாடியபோது நீதிபதி 100 சதவீதம் கூட இடஒதுக்கீடு கேட்பீர்களா என்று கேட்டபோது "Why Not?" என்று பதிலடி கொடுத்ததுண்டே!).

அரசமைப்புச் சட்டம் 15(4), 16(4) என்பது அடிப்படை உரிமையாகும். இதில் கை வைக்க எந்த நீதிமன்றத்துக்கும் உரிமை கிடையாது. ஆனால் நீதிமன்றங்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இப்பொழுது எந்த அளவுக்கு நீதிமன்றம் சென்றுள்ளது? நீதிமன்றம் தலையிட முடியாது - கூடாது என்பதற்காகவே அரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணை உருவாக்கப்பட்டது. இப்போது அதிலும் தலையிடுவோம் என்று உச்சநீதிமன்றம் சொல்லுகிறது என்றால் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டாமா?

நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டபோது, உச்சநீதிமன்றம் செல்லாது என்று கூறியது. நீதிமன்றத்தின் இத்தகைய தலையீட்டைத் தவிர்க்கவே ஒன்பதாவது அட்டவணை கொண்டு வரப்பட்டது. இந்த அட்டவணையின் கீழ் 284 சட்டங்கள் உண்டு. ஆனால் சமூக நீதியும் இதில் முதன் முதல் இடம் பெற்றுள்ளது என்றால் அதற்குக் காரணம் திராவிடர் கழகமே! இதுவரை இந்த சட்டங்களுக்கு எதிர் வினை என்பது வந்ததே கிடையாது.

9ஆம் அட்டவணை நீதிமன்ற அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது. அதிலும் தலையிட முடியும் என்று கூறியுள்ள நிலையில் மற்றொரு அட்டவணை கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (2.12.2009).

80 சதவீத மக்களுக்கு - 69 சதவீத இடஒதுக்கீடு என்பதற்கு ஆதாரம் உண்டு. ஆனால் 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்பதற்கு ஆதாரங்களோ - தரவுகளோ கிடையாது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 16(4) என்ன கூறுகிறது? மற்ற (முன்னேறியவர்களோடு சமமான நிலை அடையும் அளவுக்கு) (Adequately) இடஒதுக்கீட்டின் அளவு இருக்கலாம் என்று கூறுகிறது. இதனைக் கண்டறியும் உரிமை அரசுகளுக்கு உரியதேத் தவிர நீதிமன்றங்களுக்கு அறவே கிடையாதுAdequate என்ற இலத்தீன் சொல்லுக்கு Till it is equalised மற்றவர்களோடு சமநிலை அடைகிற அளவுக்கு என்று பொருள். இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்குரிய இடஒதுக்கீடு விகிதாசாரம் அளவுக்கு இடங்கள் இதுவரை பூர்த்தியாக வில்லை என்பது கவனத்துக்குத் தக்கதாகும்.

இடஒதுக்கீடு குறித்து நீதிபதிகள் தெரிவித்து வரும் கருத்து குறித்து நோபல் அறிஞர் அமர்த்தியா சென் கூறி இருப்பது கவனிக்கத்தக்கது.

"இடஒதுக்கீடு அளித்தால் தகுதி, திறமை குறைந்துவிடும் என்ற கருத்தை எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும். தகுதி அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்பட்ட மாணவரையும், இடஒதுக்கீடு அடிப் படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவரையும் ஒருக்கால் ஒப்பிட்டுப் பார்த்தால், அதை எப்படிப் பார்க்க வேண்டும்? ஒரு நதியின் வளைவை மட்டும் பார்க்கக் கூடாது. நதியின் ஒட்டு மொத்த போக் கினையும் பார்க்க வேண்டும். அதுபோல்தான் நீண்ட கால கண்ணோட்டத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கை யால் சமூகத்திற்குக் கிடைக்கும் பலன்களை நோக்க வேண்டும். நீதிமன்ற அடிப்படையில் இதற்கு மிக எளிதான பதிலை எட்டிவிட முடியாது. நியாயத்தின் அடிப்படையில் நீண்ட கால நோக்கில் இதைப் பார்க்கவேண்டும்" என்று நோபல் அறிஞர் அமர்த் தியா சென் சொன்னார். அதுவும் எங்கு எந்த இடத் தில் சொன்னார் என்பதுதான் கைதட்டி சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். சென்னை அய்.அய்.டி.யில் (22.12.2009) தான் சொன்னார் என்பது நினை விருக்கட்டும்!

மக்கள் நலனுக்காக தந்தை பெரியார் நீதிமன் றங்களை விமர்சித்ததுண்டு - திராவிடர் கழகம் நீதிமன்ற தீர்ப்புகளைக் கூட எரித்ததுண்டு.

மக்களுக்குத் தேவையானவற்றை முடிவு செய்வது அரசுகளே - நீதிமன்றங்கள் அல்ல.

இப்பொழுது சமூகநீதிக்கு எதிராக ஏற்பட்டி ருக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்றங்களும், இத்திசையில் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண் டும். மக்களிடம் எழுச்சியை உண்டாக்க வேண்டும்.

பாதுகாப்போம்! பாதுகாப்போம்!! சமூக நீதியைப் பாதுகாப்போம்! - உயர்த்திப் பிடிப்போம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

No comments:

Post a Comment