வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை உலகத்தமிழர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய திமுக ஆட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 8, 2021

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை உலகத்தமிழர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய திமுக ஆட்சி

10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி மலர்ந்துள்ளதை உலகத்தமிழர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

 திமுக ஆட்சி அமைய இருப்பது மலேசியாவில் உள்ள தமிழர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல்  வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அடுத்தடுத்து வெளிவந்த தேர்தல் தொடர்பான தகவல்கள், முடிவுகளை மலேசியத் தமிழ் ஊடகங்கள் நேரலையில் வெளியிட்டன.

தமிழகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட தேர்தல் கண்ணோட்ட நிகழ்ச்சிகளும் மலேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தமிழக தேர்தல் முடிவுகளை அதிகம் பார்த்ததில் தமிழகம், கருநாடகாவை அடுத்து மலேசியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது, இலங்கை, சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் குறித்த செய்தியை அதிகம் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் புதிய அரசிடம் இருந்து  தங்களின் எதிர்பார்ப்புகள் குறித்து மலேசியத் தமிழர்கள்  தெரிவித்த கருத்துகளை பிபிசி தமிழ் வெளியிட்டுள்ளது.

தமிழக மக்கள் மு..ஸ்டாலினை தங்கள் முதல்வராக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுவதாகச் கோலாலம்பூரைச் சேர்ந்த கணினி வடிவமைப்பாளர் இராம சரஸ்வதி பெருமை படக் கூறியுள்ளார்..

தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான கட்சிகள் அதிகம் பேசிய வாரிசு அரசியல் என்ற பரப்புரையை மக்கள் ஏற்கவில்லை  என்று அவர் கூறினார்

உதயநிதியைப் பொறுத்தவரையில் சினிமாவில் கலகலப்பான, ஜனரஞ்சகமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களுக்கு நன்கு அறிமுகமாகி உள்ளார். இளம் வயதிலேயே கட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர், அடுத்து சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்ற மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர்.”

இந்த வெற்றியை திமுக நன்கு பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். மலேசியத் தமிழர்களின் வேர்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. எனவே தமிழகத்தில் அமையும் புதிய அரசு எங்களுக்குப் பயனளிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்தால் நன்றாக இருக்கும்,” என்கிறார் இராம சரஸ்வதி.

திமுகதான் இம்முறை வெற்றி பெற மலேசியத் தமிழர்கள் விரும்பியதாகவும் அவ்வாறே நடந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கேமரன் மலை நகரில் ஓட்டுனராக பணிபுரியும் கணேசன் என்பவர் கூறினார்.

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்து செல்ல நீண்ட கால விசா கிடைப்பதற்கு திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மங்கள நிகழ்வுகள், ஆன்மீகப் பயணங்கள், மருத்துவச் சிகிச்சை எனப் பல்வேறு காரணங்களுக்காக மலேசியத் தமிழர்கள் இந்தியாவுக்கு வருகிறோம். இதற்கான விசாவைப் பெறவும் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தவும் சிரமப்படுகிறோம்.”

எங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் விசா கிடைத்தால் நன்றாக இருக்கும். விசா கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டால் மேலும் உதவியாக இருக்கும். இது தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் புதிதாக அமைய உள்ள தமிழக அரசு பேச வேண்டும்.

குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கலாம். சிகிச்சைக் கட்டணத்தில் தள்ளுபடி, விசா நீட்டிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் உதவியாக இருக்கும்,” என்கிறார் கணேசன்.

மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங் களில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைப்பதில் புதிய திமுக அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும் என விரும்புவதாக மூத்த செய்தியாளரும் மலேசியத் தமிழ் செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவருமான கு.தேவேந்திரன் கூறுகிறார்.

மேலும், மலேசிய தமிழ் படைப் பாளிகளுக்கும் செய்தியாளர்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் விருதும் உதவியும் வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.

மலேசியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே இருப்பது தொப்புள் கொடி உறவாகும். மலேசியத் தமிழர்கள் இதை என்றும் மறக்க மாட்டார்கள். கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு வெற்றிடம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை தனது உழைப்பால் நிரப்பியுள்ளார் மு..ஸ்டாலின்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனியே ஒரு துறை அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்திருந்தது, அதன் படியே செஞ்சி மஸ்தான் அவர்களை வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சராக அறிவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார்.

தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மலேசியாவில் வேலை பார்க்க வருகிறார்கள். அவர்களில் சிலர் தமிழகத்தில் உள்ள போலி முகவர்களால் ஏமாற்றப்படுவதும், மலேசியா வந்த பிறகு வேலை கிடைக்காமல் அகதிகளைப் போல் வாழ்வதாக வெளிவரும் செய்திகளும் வேதனை அளிக்கிறது. இவ்வாறு நிகழாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முறையான ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்பவர்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டால் இந்தச் சிக்கலுக்கு முடிவு கிடைக்கும்,” என்கிறார் கு.தேவேந்திரன்.

கரோனா விவகாரத்தால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் நிலைமை அப்படித்தான் இருப்பதாக கேள்விப்படுகிறேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து திமுக அரசு மக்கள் மீண்டுவர உதவ வேண்டும்,” என்கிறார் ராஜேந்திரன்.

மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் தொழிலாளர் நலன் சார்ந்த சில சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. தமிழகத்திலும் இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களைக் கொண்ட ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழகத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.

குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த காரணங்களைத் தவிர மலேசியத் தமிழர்கள் ஆன்மிக சுற்றுப் பயணத்துக்காகத்தான் அதிகளவில் தமிழகம் செல்கிறார்கள். இவர்கள் தமிழக கோவில்களை, ஆன்மிகத் தலங்களைச் சுற்றிப்பார்க்கவும் தரிசிக்கவும் சிறப்புச் சலுகைகளுடன் கூடிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கைஎன்கின்றனர்.

தங்களுக்காக தனி அமைச்சு அமைக்கப்படும் என்பதால் திமுகவின் வெற்றி வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது எனலாம். காரணம் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கை நிச்சயம் உதவும். மேலும் தமிழர்கள் வருகையும் அதிகரிக்கும்.

பல நாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கென தனி இருக்கையை நிறுவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களில் தமிழக ஆட்சியாளர்கள் இத்தகைய முயற்சிக்கு ஆதரவு அளித்து வந்தனர். குறிப்பாக திமுக ஆட்சியில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கம். இம்முறையும் திமுக மொழி வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என நம்பலாம் என்று தெரிவிக்கிறது அச்செய்திக் கட்டுரை.

No comments:

Post a Comment