61 விழுக்காடு மக்களின் நிலைப்பாடு என்ன?

"கரோனா தொற்று அபாயம் மற்றும் ஊரடங்கு காரணமாக, இந்தியர்கள் தீவிர மனச்சோர்வுக்கு ஆளாகி இருப்பதாகவும், சுமார் 61 சதவிகிதம் பேர் கவலை மற்றும் கோபத்துடன் இருப்பதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஜன்சத்தாஎன்ற ஹிந்தி நாளிதழ் இதுதொடர்பாக உள்ளூர் மட்டத்தில் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில், கரோனா தொற்றின் இரண்டாவது  அலை இந்தியா முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் 4 லட்சத்திற்கும் அதிகமான கரோனா தொற்று பாதிப்க்கள் பதிவு ஆவதும், மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன், படுக்கைகள் இல்லாததும் மக்கள்மீது கடுமையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கரோனா அலைகளில் சிக்கி மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனநிலையை அறியும் வகையில், 8 ஆயிரத்து 141 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 23 சதவிகிதம் பேர் ‘‘மிகவும் கவலை''யாக இருப்பதாகக் கூறினர். எட்டு சதவிகிதம் பேர் தாங்கள் ‘‘மனச்சோர்வு அடைந்துள்ளோம்'' என்று தெரிவித்தனர். சுமார் 20 சதவிகிதம் பேர் தாங்கள் ‘‘வருத்தமாகவும், கோபமாகவும்'' இருப்பதாகவும், 10 சதவிகிதம் பேர் ‘‘கடும் கோபமாக'' இருப்பதாகவும், சுமார் 28 சதவிகிதம் பேர் ‘‘நம்பிக்கைதான் எல்லாம்'' என்று தங்களைத் தாங்கள் ஆறுதல்படுத்திக் கொண்டனர் என்றுஜன்சத்தா' குறிப்பிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 61 சதவிகித இந்தியர்கள் கோபம், பதற்றம் மற்றும் மனச்சோர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.

கரோனா நெருக்கடியைச் சமாளிப்பதில் மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்றும் 8 ஆயிரத்து 367 பேரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன." (தீக்கதிர், 7.5.2021)

மக்களின் மனப்பான்மையின் இன்றைய யதார்த்த நிலையை இந்தப் புள்ளிவிவரம் எடுத்துக்காட்டுகிறது.

மத்திய பா... அரசைப் பொருத்தவரை உண் மைகளை மூடி மறைப்பதில்தான் முழுக் கவனம் செலுத்துகிறதே தவிர, யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு, அதன்மீது நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

கரோனாவின் முதல் அலைவீச்சு சற்றுத் தணிந்தபோது, மத்திய பா... அரசு என்ன நினைத்தது என்றால், கரோனாவை ஒழிப்பதில் வெற்றி கண்டுவிட்டோம் என்ற மனப்போதையில் மிதந்தது.

ஆனால், அந்தக் காலகட்டத்திலேயே உலகளவில் இரண்டாவது அலைபற்றி எச்சரித்திருந்ததை இந்திய அரசு அலட்சியப்படுத்தியதன் கோர விளைவை நாடு இன்று அனுபவித்துக் கொண்டுள்ளது.

தடுப்பூசிப் பிரச்சினையில் இந்தியாவுக்குத் தேவை யின் அளவு மிக அதிகமாக இருந்த நிலையில், வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தடுப்பூசியை ஏற்றுமதி செய்து உலகளவில் இந்தியாவின் கித்தாப்பைப் பறைசாற்றியதுதான் எத்தனைக் கொடூரமானது!

மத்திய அரசுத் துறைகளுக்கு என்று அமைச்சர்கள் ஏராளமாக இருந்தாலும், அவையெல்லாம் பெயரளவுக்குத் தான் - எல்லாம் பிரதமர் அலுவலகம்தான். அதன் கைகளில்தான் சகல அதிகாரங்களும் என்ற ஒற்றை அதிகாரம் கோலோச்சியதும் இந்தக் கரோனா சிக்கலுக்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.

ஒரு கட்டத்தில் மிகமோசமான நிலையை அடைந்தபோது - இனி மாநில அரசுகள்தான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கைவிரித்து விட்டது மத்திய அரசு.

பொதுவாக தடுப்பூசிகள் - குழந்தைகள் முதல் போடுவது என்பது தேசிய அளவிலான திட்டமாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது.

உலக நாடுகளிலும்கூட கரோனாவுக்கான தடுப்பூசியை அரசுகளே இலவசமாகப் போட்டு வருகின்றன. இந்தியாவிலோ தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்துப் போடும் நிலை! அரசு மருத்துவமனைகளில் கையிருப்பு இல்லாத காரணத்தால், தனியார் மருத்துவ மனைகளை நாடும் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலையில், முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அந்த முதல் நாளிலேயே, தனியார் மருத்துவமனைகளில் சேரும் கரோனா நோயாளிகளுக்கான செலவினத்தையும் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ்க் கொண்டு வரும் மகத்தான ஆணையைப் பிறப்பித்ததன்மூலம் மக்கள் வயிற்றில் பால் வார்த்துவிட்டது தி.மு.. ஆட்சி.

சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் கரோனா நோயாளிகளுக்காக அவசர அவசரமாக 800 படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதும் - அதனை நேற்று மாலையே முதலமைச்சர் சென்று பார்வையிட்டதும் எதைக் காட்டுகிறது? உணர்வுப்பூர்வமான மக்கள் நலனை முன்னிறுத்தும் தொண்டறம் அல்லவா இது!

Comments