கரோனா - அடுத்த ஓர் அதிர்ச்சித் தகவல்

 கரோனா - தன் இரண்டாவது யுத்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. உலகமே கெதி கலங்கிக் கிடக்கும் நிலை. இந்தியாவிலோ கரோனாவின் மூர்க்கம் நாளும் அதிகரித்து வருகிறது.

முதல் அலை வீச்சை முறியடித்து விட்டோம் என்று திமிர் முறித்து கொட்டாவி விட்டது மத்திய பா... அரசு. பெரு வெற்றி பெற்றது போன்ற ஒரு மாயையிலும் திளைத்தனர். இதன் மூலம் நரேந்திர மோடிக்கு உலகப் புகழ் கிட்டி விட்டது என்பது போன்ற மிதப்பிலும் திளைக்க ஆரம்பித்தனர்.

இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு - உலகளவில் இந்தியா மார்புப் புடைத்து நின்றது.

இப்பொழுது இந்தியாவின் நிலை என்னவென்றால் கரோனாவுக்கான தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்க்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

இதில் என்ன கொடுமை என்றால் முதல் கரோனா வீச்சு நடந்தபோது - அதற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்தார்களே பார்க்கலாம்.

எதிலும் சிறுபான்மையினர் மீதான கழுகுப் பார்வைதானே பா...வினருக்கு - சங்பரிவார்களுக்கு!

கடந்தாண்டு டில்லியில் நடைபெற்ற முஸ்லிம்களின் ஒரு மாநாட்டை  (தப்லீக் மாநாட்டை) மய்யப்படுத்தி கரோனா இந்தியாவில் பரவியதற்கு அந்த மாநாடுதான் காரணம் என்று பெரிய அளவில் புழுதிப் புயலைக் கிளப்பினர்.

நீதிமன்றம் வரை பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு, அதில் உண்மை இல்லை என்று நீதிமன்றம் கூறியதோடு ஆதாரமில்லாமல் கைது செய்தது போன்ற நடவடிக்கைகளுக்குக் கண்டனத்தையும் தெரிவித்தது.

அதே  நேரத்தில் கரோனாவின் கடும் வீச்சு குலை நடுங்கச் செய்யும் அளவுக்கு தாக்குதல் நடந்து கொண் டிருக்கும் ஒரு கால கட்டத்தில், இலட்சக்கணக்கான மக்கள் கூடும் கும்பமேளா நிகழ்ச்சியை நடத்திட அனுமதித்தது எப்படி என்ற கேள்வி செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

சமூக வலைத் தளங்களிலும் கும்பமேளாவை நடத்தும் குரூரமான செயல்பாட்டுக்கு மிகப் பெரிய அளவில் கண்டனக் கணைகள் வெடித்து கிளம்பிய நிலையில்தான் பிரதமர் போன்றவர்களுக்கு 'ஞானோதயம்' ஏற்பட்டு, மேலும் கும்பமேளா தொடராமல் முடித்துக் கொள்வதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனாலும் பல இடங்களிலும் மத விழாக்கள் கோயில் குட முழுக்குகள் நடைபெறும் நிலைதான் தொடர்கிறது.

நாடே 'கரோனா கரோனா' என்று அலறிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில், இந்தத் தொற்று குழந்தைகளையும், ஒரு கை பார்க்கிறது என்ற செய்தி - தகவல் குருதியை உறையச் செய்கிறது.

35537 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது ஒட்டு மொத்தமான தொற்றில் 3 புள்ளி 6 விழுக்காடு என்றும் கூறப்படுகிறது.

ஏதோ குறிப்பிட்ட வயதினருக்குத் தான் கோவிட் 19 வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதெல்லாம் பழைய கதையாகும்.

12 வயது வரை உள்ளவர்களையும் பாதிக்கத்தான் செய்யும் என்ற அபாயகரமான அறிவிப்பினை அலட்சியமாக யாரும் கடந்து செல்லக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.

முதலில் பெரியவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால்தான் வீட்டில் உள்ள குழந்தைகளும் சிறுவர், சிறுமிகளும் பாதுகாப்பாக இருக்க முடியும்.

அலட்சியம் வேண்டாம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Comments