இறந்தும் இறவாமல் என்றைக்கும் நம் நெஞ்சத்தில் நிலைத்திருக்கக்கூடிய ஜெயகாந்தன் அவர்கள் பல்லாண்டு வாழ்வார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 29, 2021

இறந்தும் இறவாமல் என்றைக்கும் நம் நெஞ்சத்தில் நிலைத்திருக்கக்கூடிய ஜெயகாந்தன் அவர்கள் பல்லாண்டு வாழ்வார்

 இலக்கியமாக - வரலாறாக - ஆளுமையாகஎல்லாவற்றையும்விட ஒப்பற்ற மனிதமாக!

மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, ஏப்.29 இறந்தும் இறவாமல் என் றைக்கும் மறக்க முடியாமல் நம் நெஞ்சத்தில் நிலைத்திருக்கக் கூடிய அவர், பல்லாண்டு வாழ்வார் - இலக்கியமாக - வரலாறாக - ஆளுமை யாக - எல்லாவற்றையும்விட ஒப்பற்ற மனிதமாக! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின்  87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

கடந்த 24.4.2021 மாலை 7 மணியளவில் சென்னை ரஷ்ய பண்பாட்டு மய்யம் சார்பில் (காணொலிமூலம்) நடைபெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்தி, உயர்த்திக் காட்டும்

அதன் காரணமாகத்தான் இலக்கியத்தில் அவருடைய படைப்புகள் - கொள்கை ரீதியாக எனக்கு மாறுபாடுகள் உண்டு. ஆனால், இலக்கிய ரீதியாக அவருடைய தலைப்புகளில் இருந்து எல்லாவற்றையும் நான் மிகவும் சுவைத்தது உண்டு. ‘‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'', ‘‘சினிமாவிற்குப் போன சித்தாள்'' போன்ற கதைகளை ரசித்துப் படித்திருக்கிறேன். அதை அவர்கள் வித்தியாசமாகக் காட்டுவார்கள். மற்றவர்கள் பார்க்கின்ற பார்வைக்கும், அவர்  அதனை சமுதாயக் கண்ணோட்டத்தோடு அணுகுகின்ற முறையும், மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்தி, உயர்த்திக் காட்டும்.

சில பேர் அந்த உயரத்தை அண்ணாந்து பார்ப்பதற்குக் கூச்சப்படுவார்கள். பாதை தெரிகிறது பார் என்பது மட்டுமல்ல; யாருக்காக அழுதான்? இதுபோன்ற தலைப்புகளை நாங்கள் சுவைத்திருக்கின்றோம்.

நாங்கள் எல்லாம் நெருக்கடி காலத்தில் மிசா சட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பொழுது, கொண்டுவரச் சொல்லி மீண்டும் படித்த ஒரு நூல் இருக்கிறது என்றால், ‘‘சில நேரங்களில் சில மனிதர்கள்'' நூலைத்தான். ஏனென்றால், அந்த நூலை எத்தனை முறை படித்தாலும் சுவைபட இருக்கும்.

இலக்கியத் திறனும், ஆழ்ந்த படைப்புலக ஆற்றலும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்!

அவருடைய இலக்கியத் திறனும், ஆழ்ந்த படைப்புலக ஆற்றலும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். இன்றைக்கும் ஜெயகாந்தன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால், அதில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இடையில் அவர்கள் கொள்கையில் மாறியிருக் கலாம்; அதனை நியாயப்படுத்தியிருக்கலாம்; அதற்காக அவர் பதில் சொல்லியிருக்கலாம்; சிலர் விமர்சனம் செய்திருக்கலாம் - இவையெல்லாம் வேறு - அந்த இடத்திற்கு நான் செல்ல விரும்பவில்லை.

மாறாக, அவருடைய ஆற்றல் என்பது இருக் கிறதே - இலக்கிய உலகத்தில் எவரும் எட்டிப் பிடிக்க முடியாத ஒரு சிறந்த - தனித்தன்மையோடு இருந்தவர். அவருடைய தனித்தன்மை அவரது துணிவில் உண்டு. அவருடைய தனித்தன்மை - அவருடைய எண்ணத்திலிருந்து அவர் சமரசம் செய்து கொள்ளமாட்டார்; மிகவும் பிடிவாதமாக இருப்பார்.

நட்பில் எங்களைப் போன்ற சமரசவாதிகள் வேறு யாருமே இருக்க முடியாது

எனவே, இதுதான் அவரிடம் என்னை ஈர்த்தது. கடைசிவரையில் நாங்கள் இரண்டு பேருமே சமரசம் செய்துகொள்ளாதவர்கள்.

ஆனால், நாங்கள் கொள்கையில்தான் சமரசம் செய்து கொள்ளவில்லையே தவிர, நட்பில் எங்களைப் போன்ற சமரசவாதிகள் வேறு யாருமே இருக்க முடியாது.

இது ஒரு மிக முக்கியமான குறிப்பாகும்.

ஏனென்றால், மாறுபட்டவர்கள் நண்பர்களாக இருக்க முடியுமா? என்ற ஒரு கேள்வி எழும்.

நிச்சயமாக நண்பர்களாக இருக்க முடியும்.

காரணம் என்னவென்றால், ஒருவர் கருத்தை இன்னொருவர் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஒருவருடைய சுயமரியாதையை இன்னொருவர் ஏற்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அதுதான் மிகவும் முக்கியமானது.

அந்த அடிப்படையில் பார்க்கின்றபொழுது, அவர் எல்லா இடங்களிலும் பார்த்தீர்களேயானால், எல்லை தாண்டி விட்டாரோ என்று நினைக்கக்கூடிய அளவிற்கு, கெத்தோடு பேசுவார்.

நான்கூட, ‘‘என்னப்பா, இன்னும் நீ மாறவே மாட்டியா?'' என்றால்,

‘‘நீங்களும் மாறவில்லை; நானும் மாறவில்லை'' என்பார்.

ஆனால், நாம் இரண்டு பேரும் நண்பர்களாய் இருப்பதிலிருந்து என்றைக்கும்  மாறாமல் இருக் கிறோமே அதுபோதும் என்று நான் வேடிக்கையாக சொல்வதுண்டு.

‘‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்''

‘‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்'' என்ற புத்தகத்தில் எழுதியுள்ள ஒரு செய்தியை சொல்கிறேன்.

திருச்சியில் நடைபெற்ற எழுத்தாளர் சங்க மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களோடு கலந்துகொண்டார்.

பெரியாருடைய கருத்துகளை கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார்; எதிர்த்துப் பேசுகிறார். தந்தை பெரியார் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சம்பவத்தை இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார்.

சில பேருக்கு ஆச்சரியமாக இருக்கும்; கருத்து, சிந்தனையில் இவர்கள் இரண்டு பேரும் நேர் எதிரான வர்களாயிற்றே, அவர்கள் இரண்டு பேரும் எப்படி நட்பாக இருந்திருக்க முடியும்? அதனுடைய ரகசியம் என்ன? என்று வியப்பாக இருக்கும்.

மனித வாழ்வில், அன்பிற்கு இருக்கின்ற இடம் வேறு; அறிவிற்கு இருக்கின்ற இடம் வேறு. அறிவைத் தாண்டிய இடம் அன்பு.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்;

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

என்பதுதான் மிக முக்கியம்.

எதையும் ஒளிவில்லாமல், மனதில் வைக்காமல் வெளிப்படையாக சொல்வார்!

அந்த அடிப்படையில், அவருடைய வாழ்க்கையி லிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ளவேண்டும். அவரை ஓர் இலக்கியவாதியாகப் பார்த்திருக்கலாம்; அவரை ஒரு திரையுலக எழுத்தாளராகப் பார்த்தி ருக்கலாம். ஆனால், அவர் அதில் எப்படி நடந்து கொண்டார்;  எதையும் ஒளிவில்லாமல், மனதில் வைக் காமல் வெளிப்படையாக இன்றைக்கு சாதாரண மொழியில் சொல்வார்களே, ‘‘வெள்ளந்தியாக'' என்று - அப்படி அவர்கள், மற்றவர்கள் வருத்தப்படுவார் களே, கோபப்படுவார்களே, எரிச்சல் அடைவார்களே என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்.

‘‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்''  என்ற புத்தகத்தின் 248-249 ஆம் பக்கத்தில் உள்ளவற்றை உங்களுக்குச் சொல்கிறேன்.

‘‘திருச்சி மகாநாட்டில் கூறியதை விடவும் தெளிவாக விவரித்து நான் கூறினேன். எனது திருச்சி மகாநாட்டுப் பேச்சு, நான் மதிக்கிற பிராமண நண்பர்களிடமும் எனக்கு அறிமுகமில்லாத பல பிராமணர்களிடமும் மிகுந்த பாராட்டு உணர்ச்சியை ஏற்படுத்தியது. பிராமணரல்லாத பலர் என்னையும் ஒரு பிராமணன் என்று அந்தப் பேச்சின் விளைவாய் எண்ணிக்கொள்ள நேர்ந்தது. பெரியாரை மேடையில் வைத்துக்கொண்டே நான் இவ்வளவும் பேசியதால் திராவிடக் கழக நண்பர்களுக்கு என்பால் கோபமெழுந்தது இயற்கையே.

என்னைப் பொருத்தவரை அந்தப் பேச்சை நிகழ்த்துவதற்கு எனக்கு எந்தவிதத் துணிச்சலும் தேவையாயிருக்கவில்லை. மனத்தாலும், அறி வாலும், அனுபவங்களாலும் அறிந்த, இதற்கு முன் னால் ஏற்கெனவே பலராலும் பன்னிப் பன்னிச் சொல்லப்பட்ட உண்மைகளைப் பகிரங்கமாகப் பேசுவதே ஒரு வீரசாகசமாக ஆகிவிட்டது போலும்!

அந்தத் திருச்சி மகாநாட்டில் கலவரமோ, குழப்பமோ நேராததற்கு ஒரே காரணம் பெரியார் அவர்களும் மேடையில் இருந்ததுதான். பெரியார் எனது பேச்சை மிகவும் உன்னிப்பாய், செவி மடலைக் கையால் குவித்துக் கொண்டு சிரத்தையோடு கேட்டார். இடையிடையே தனக்கு உடன்பாடான கருத்துக்களை நான் கூறுகிற போதும் - மக்கள் கரகோஷம் செய்தபொழுதும் தானும் - தனது கைத்தடியால் தரையில் தட்டித் தனக்கு மாறுபாடான கருத்துக்களை நான் பேசிய சந்தர்ப்பத்திலும் ஆரவாரித்து என்னை உற்சாகப்படுத்தினார் பெரியார். அவரது இந்த நாகரிகம், மகா மேன்மையானது என்று நான் அப்போது உணர்ந்தேன்.

அறிமுகமில்லாதவர்கள், எவ்வளவு உயர்ந்த வர்களாயினும், இயல்பாக ஒரு சந்தர்ப்பமோ சூழ்நிலையோ உருவாவதற்கு முன்னால் நானாகப் போய்ப் பேசி உறவாடுகிற இயல்பு எனக்கு இல்லாத ஒன்று. பிரசங்கம் முடிந்ததும் பல திராவிடர் கழக அன்பர்கள் எனது பேச்சால் தங்கள் மனம் புண்பட்டுவிட்டதாகப் பெரியார் அவர்களிடம் சென்று முறையிட்டுக் கொண்டனர். அப்போது பெரியார் அந்தத் தி.. தோழர்களுக்கு மிகவும் கண்டிப்பாக அறிவுரை வழங்கினார்:

"பொது வாழ்க்கையிலே அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது. இவர் ஒருத்தர்தான் நமக்குப் பதில் சொல்லி இருக்காரு. நாம எவ் வளவு பேரைக் கேள்வி கேட்டிருக்கோம்? அவங்க மனசு புண்படுமேன்னு யோசிச்சோமா? அப்படியெல்லாம் யோசிச்சிக்கிட்டிருக்க முடி யாது" அவரது இந்த அறிவொழுக்கம் (intellectual honesty) எனக்கு அவர் அன்று உபதேசித்த ஒரு பாடமாயிற்று.

(இந்த இடத்தில் நான் வெற்றி பெற்றேன்; எனது நண்பருக்கும், எனக்கும் எப்பொழுதும் போட்டி. அந்தப் போட்டி வெளியில் தெரியாது. நட்பிற்குள் ஆழமாகப் புதைந்திருக்கும். ஆனால், இந்த இடத்தை நான் அன்றைக்கே படித்துவிட்டு, அவரிடம் பேசியி ருக்கிறேன். ‘‘என்ன முருகேசன், என்னதான் எங் களை நீங்கள் எதிர்த்தாலும், பெரியாரிடம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் உங்களுக்கு உண்டல்லவா?'' என்று நான் சொன்னவுடன், திருத்திக் கொண்டார்.)

பின்னர் அவர் என்னை அழைத்தார். மிக மரியாதையாக, ஓர் ஆஸ்திக சமாஜத்தைச் சேர்ந்த மடாதிபதிபோல, மிகவும் பண்போடு, இருபத்தி நான்கு வயதே ஆன என்னை, "வாங்க, அய்யா!" என்று கரங்கூப்பி அழைத்தார்.

அக்காலத்திலெல்லாம் நான் யாரையும் காலில் விழுந்து வணங்கியதில்லை. ஆனால், அப்படி ஓர் உணர்வு எனக்கு அப்போது தோன்றியது உண்மை!

அவர் என்னை விசாரித்தார்: "நீங்க பிராமணப் பிள்ளையா?"

"இல்லை" என்றேன்.

"ரொம்ப சந்தோஷம்என்றார்.

நான் விடைபெற்றுக் கொண்டேன்.

நண்பர்களே, இந்த சம்பவம் சாதாரணமான சம்பவமல்ல. பல குணநலன்கள், பண்பு நலன்கள் பொதுவாழ்க்கையில் யார், எப்படி இருக்கவேண்டும்? மனிதப் பண்பு என்பது என்ன? மானிடம் என்பது இருக்கிறதே, பலர் பல விருதுகளைப் பெறலாம்; வாழ்க் கையில் உயரலாம்; பணம் சேர்க்கலாம்; பதவிக்குப் போகலாம்.

ஆனால், பண்பாடு என்பது இருக்கிறதே, மனதில், அறிவில் பட்டதை, அறிவு நாணயத்தோடு ஒப்புக்கொள்ளவேண்டும். அந்த அறிவு நாணயம் ஜெயகாந்தனுக்கு இருந்தது. தன்னுடைய நிலையை அவர் பதிவு செய்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இன்னொரு சம்பவத்தை உங் களிடையே பகிர்ந்துகொள்ளவேண்டும்.

ஜெயகாந்தனின் உடல்நிலையும்கலைஞரின் பெருந்தன்மையும்!

பெரியார் தொண்டர்கள் எப்படிப்பட்டவர்கள்? ஜெயகாந்தனின் உடல்நிலை மிக மோசமாக ஆகி விட்டது என்பதைக் கேள்விப்பட்டு, நாங்கள் எல்லாம் துடித்தோம்.

ஆனால், அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படவேயில்லை. தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்று நினைத்துக்கொண்டு.

யாரிடமும் சொல்லாமல், விளம்பரமேயில்லாமல், மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் (இசபெல்லா மருத்துவமனை) அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அந்தச் செய்தியை கனிமொழி அவர்கள் அறிந்து கொண்டு, முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களிடம் வந்து சொன்னார். மாலை நேரத்தில் நாங்கள் அமர்ந்திருந்தபொழுது, அந்தத் தகவலை கேள்விப்பட்டு, முதலமைச்சர் கலைஞர் துடித்தார்.

எந்த மருத்துவமனையில் இருக்கிறார்?

தனியார் மருத்துவமனையில் இருக்கிறார் என்று சொன்னவுடன்,

அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டு,

மிகவும் சிக்கலாக இருக்கிறது என்றவுடன்,

அப்படியா? அங்கே இருந்து அவரை அப்பலோ மருத்துவமனைக்கு மாற்றுங்கள் என்று சொல்லி, அதற் கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று சொன்னார்.

இவ்வளவுக்கும் கலைஞரை கடுமையாக விமர்சித்த வர்களில் முதன்மையானவர் ஜெயகாந்தன் என்று சொன்னால், அதிசயமிருக்காது.

ஆனால், அதைப்பற்றி கலைஞர் அவர்கள் கவலைப்படவில்லை. ஜெயகாந்தனின் ஆற்றல், திறமை, இலக்கிய அறிவு, செறிவு, எழுத்தாளுமை, தமிழ் இலக்கியத்தில் தனி வரலாறு படைத்த மாமனிதர். அவரை நாம் எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற முயற்சி எடுத்து, அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டு வந்து, அவருக்கு ஒரு புது வாழ்க்கையை கொடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

கொள்கை வேறு; நட்பு வேறு. உயர்ந்த மனிதப் பண்பாடு என்பதுதான் மனிதர்களை உயர்த்துகிறது.

அந்த மனிதம்தான் ஒருவருக்கொருவர் எவ்வளவு மாறுபட்டாலும், கட்டி அணைத்துக் கொள்ளக்கூடிய உணர்வை உருவாக்குகிறது.

கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஜெயகாந்தன் அவர்கள், என்னுடைய கருத்தை மறுத்துப் பேசினார். அதற்குரிய பதிலை அந்த மேடையிலேயே சொன்னேன். கலைஞர் அவர்களும் அந்த மேடையில் இருந்து அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

நான் பேசும்பொழுது, ‘‘ஜெயகாந்தன் அவர்களின் கருத்துகளை எதிர்த்துப் பேசுவேன். அவரும் என்னுடைய கருத்துகளை எதிர்த்துப் பேசுவார். ஆனால், அதற்கு விளக்கம் என்னவென்று நான் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஒரே வரியில், ஜெயகாந்தன் அவர்களுடைய புதினத்தின் தலைப் பையே நான் பதிலாக சொல்ல விரும்புகிறேன். ‘‘சில நேரங்களில் சில மனிதர்கள்'' அவ்வளவுதான், அதற்கு மேல் ஒன்றும் கிடையாது என்று சொன்னேன்.

ஆகவேதான், இலக்கியமானாலும், எத்தனையோ சிறந்த எழுத்துக் குவியல்களானாலும், திரைப்படம், மற்ற மற்ற சாதனைகளானாலும் அல்லது உலகளவில் விருதுகளைப் பெற்றிருந்தாலும், எல்லாவற்றையும்மீறி அவரிடத்தில் இருந்த மனிதம் என்பது இருக்கிறதே, பண்பு என்பது இருக்கிறதே, நன்றியுணர்ச்சி என்பது இருக்கிறதே - அவர் மனதில் நினைப்பதை, நெஞ்சில் நினைப்பதை, செயலில் நாட்டியவர்.

ஒப்பற்ற மனிதமாக என்றைக்கும் வாழ்வார்!

இறந்தும் இறவாமல் என்றைக்கும் மறக்க முடி யாமல் நம் நெஞ்சத்தில் நிலைத்திருக்கக் கூடிய அவர், பல்லாண்டுகள் வாழ்வார்கள் - இலக்கியமாக - வரலாறாக - ஆளுமையாக - எல்லாவற்றையும்விட ஒப்பற்ற மனிதமாக! நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment