நதிநீர் மாசும் -உயர்நீதிமன்ற உத்தரவும்

 தமிழகத்தில் உள்ள நதிகளில் மாசு ஏற்படுத்தும் தொழிற் சாலைகளை இடமாற்றம் செய்வது குறித்தும், கழிவுநீர் வெளியேற்றுவதை எப்படி தடுப்பது என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதியின் துணை நதிகளில் ஒன்றான அமராவதி நதி பாயும் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளால் அந்நதி மாசடைவதாகக் கூறி, தனசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில், தொழிற்சாலைகளால் மாசடைந்த அமராவதி நதி நீர், குடிநீராகவோ, விவசாயத்துக்கோ பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிலத்தடி நீரும்பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி அடங்கியஅமர்வு கூறுகையில், நதிகள் மாசடைவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்றும்,  நதிகளில் தொழிற்சாலைகளின் கழிவுகளைக் கொட்டுவதையும், கழிவுநீர் வெளியேற்றுவதையும் தடுப்பது குறித்து அரசு உறுதி செய்ய வேண்டும் -  கடைமடை பகுதி மக்களும் நதி நீரைப் பயன் படுத்தும் வகையில், அதன் தரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், நதி நீர் மாசடையும் போது, நிலத்தடி நீரும் பயன்படுத்தத் தகுதியற்றதாகி விடுகிறது. நீரின் தரத்தைப் பாதுகாப்பதில் அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

மேலும் கூவம் நதி மீது கட்டப் பட்டுள்ள நேப்பியர் பாலத்தின் மீது ஏசிகாரில் செல்லும்போது கூட துர்நாற்றம் வீசுவதாகத் தலைமை நீதிபதி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் உள்ள நதிகளில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வது குறித்தும், கழிவுநீர் வெளியேற்றுவதை எப்படித் தடுப்பது என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.  வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மக்களின் நல வாழ்வுக்கு மிகமிக முக்கியமானது.

தொழிற்சாலைகளின் கழிவுகள் நீரில் கலப்பது இந்தியா முழுவதும் நடந்து கொண்டு தான் உள்ளது.

தொழிற்சாலைகள் தங்கள் இலாபத்தில் மட்டும் தான் கருத்து செலுத்துமா? மக்கள் நலமுடன் இருந்தால்தான் தங்கள் வியாபாரக் கடையையும் நடத்த முடியும் என்ற குறைந்த அளவு அறிவு கூடவா இல்லை?

அரசின் சட்டங்களும், விதிமுறைகளும் குவிந்து தான் கிடக்கின்றன. ஆனாலும் அவை எல்லாம் பண முதலைகளின் கால்தூசுக்குச் சமம்தான். சட்டங்களும், விதிமுறைகளும், ஒழுங்கு முறையில் செயல்படுத்தப்படுமானால் எந்த முதலாளிதான் தானடித்த மூப்பாக நடந்து கொள்ள முடியும்?

இது என்ன சாதாரண பிரச்சினையா? மக்களின் உயிரோடு நடத்தும் விபரீத விளையாட்டல்லவா? கடும் நோய்க்கு ஆளாகும் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பும் மத்திய மாநில அரசுகளின் தலைகளில் தானே விடிகிறது.

உடல் நலக்கேடு, பொருளாதார சுமை என்ற இரட்டிப்புத் தாக்குதல் இதன் மூலம் ஏற்பட வில்லையா?

ஒரு பக்கம் நீர்நிலைகள் தொழிற்சாலைகளின் கழிவறை - இன்னொரு பக்கம் பொது மக்களுக்காக மக்கள் நல்வாழ்வுத்துறை - எத்தனை முரண்பாடு இவை!

இவை ஒரு பக்கம் என்றால் மதத்தின் பெயரால் புண்ணிய நதிகள் என்று கூறி, ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கான மக்களின் குளியல்!

கரோனா காலத்திலும் கூட கும்ப மேளா நடக்கவில்லையா- அதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கரோனா தொற்றுக்குப் பலியாக வில்லையா? ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கானோர் குளித்தால் நதி நீர் மாசுபடாதா?

ஒரு பக்கத்தில் கும்பமேளாவை அனுமதிப்பது - இன்னொரு பக்கத்தில் கும்பமேளா சென்று வந்தவர்களைத் தனிமைப்படுத்தி பல சோதனைகளை செய்வது என்கிற பைத்தியக்காரத்தனத்தை என்னவென்று சொல்லுவது!

கங்கையைப் புனித நீர் என்கிறார்கள். அந்நீரில் புற்று நோயை உண்டாக்கும் மாசுகள் கலந்துள்ளன என்று தேசிய புற்றுநோய் மய்யத்தின் ஆய்வுக் கூறவில்லையா?

கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள் குளிப்பதற்குத் தகுதியற்றவை என்று பத்மசிறீ விருதுபெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் அனில் ஜோஷி தலைமையில் டேராடூனில் இயங்கி வரும்  ஹெஸ்கோ' என்ற அரசு சாரா நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினைத் தந்ததுண்டே!

கங்கை, யமுனை மட்டுமல்ல, 24 நதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

27 நாள்கள், 1800 கி.மீ. பயணித்து இந்த ஆய்வறிக்கையினை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதமா? மனித நலமா? என்பது முடிவு செய்யப்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும் - அவசியமுமாகும்.

ஆனால். பா... ஆட்சியினைக் கேட்டால் மதந்தான் என்று கொஞ்சங்கூட கூசாமல் கூறி விடுவார்களே!

மக்கள் மத்தியில் பகுத்தறிவுடனான எழுச்சிதான் இதற்கெல்லாம் தீர்வு!

Comments