கோலி (கலர்) சோடாவும் - நினைவில் வரும் நிகழ்வுகளும்! (1)

சில நாள்களுக்குமுன்பொதிகை' தொலைக்காட்சியில் கோலி சோடா கலர் உற்பத்தி, தற்போதுள்ள மக்களிடையே அதற்குக் கிடைக்கும் வரவேற்பு - இவைபற்றி சோடா பேக்டரி உரிமையாளர், தொழிலாளத் தோழர்கள், நுகர்வோர் ஆகிய பலரின் பேட்டி - இவற்றை வைத்து சுவையான ஒரு காட்சிக் கதையை (எபிசோட்) தயாரித்து ஒளிபரப்பினர் - பாராட்டத்தக்க முயற்சி!

இன்றுள்ள இளைய தலைமுறைக்கு ‘7-அப்பும்', ‘ஃபேண்டாவும்', ‘பெப்சி கோலாவும்'தான் பெரிதும் தெரியும்.

நமது குடிசைத் தொழில் போன்ற ஏழை, எளிய நடுத்தர வாழ்வாதாரங்களை எப்படி பன்னாட்டுப் பெருமுதலாளிகள்காலி' செய்துவிட்டனர் என்ற கோணத்தோடு பார்த்தால், இதுபோன்றுகாலியான' பல பொருள்களும், இல்லத்தரசிகளின் வாழ்வாதார வகைகளும் கொண்ட பட்டியல் மிகவும் நீளும்!

அக்காலத்தில் - எனது மாணவப் பருவ நினைவுகளை - மலரும் நினைவுகளாகக் கொண்டு ஒரு 70 ஆண்டு பின்னே சென்று, யோசித்தால், ‘ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே' என்று எத்தனையோ சங்கதிகள் அணிவகுத்து வருகின்றன!

பெரிய சினிமா தியேட்டர்கள் சில ஊர்களில் ஒரு சிலவே. கிராமப்புறங்களில் எல்லாம்டெண்ட் கொட்டகை'தான். தற்காலிக லைசென்ஸ் வாங்கி நடத்தி சினிமா திரையில் காட்டுவதும், தரை டிக்கெட், பெஞ்சு, கேலரி முதலிய வகையறாக்கள்.

அங்கேதான் அந்தக் குரல், ‘இண்டர்வெல்' - இடைவெளியில் சோடா - கலர் - கொஞ்சம் ஒஸ்திகிரஷ்' என்ற புது வகை பாட்டிலில்! (விலை கூடுதல்).

கோலி சோடாதான் மிகவும்பாப்புலர் பிராண்ட்' அக்காலத்தில்! கலர் சோடா உண்டு; சர்க்கரை (சாக்ரின் போட்ட) சோடாவும் உண்டு; சோடா கலர் - சத்தம் உண்டு - சிறு பையன்கள் ஒரு சின்ன கிரேட் பெட்டியைத் தோளில் தூக்கிக் கூவிக் கூவி விற்பார்கள்!

கோலி சோடாவை உடைத்துக் குடிப்பது, கலர் சோடாவை கிராமத்திலிருந்து அந்நாளில் வருவோர் பெருமிதத்துடன் வாங்கிக் குடிப்பதும் பழம் பெருமைகளில் ஒன்று.

பேச்சாளர்களாகிய எங்களது தோழன் இந்த கோலி சோடாதான்!

உரத்த குரலில் பேசிக் கொண்டே இருக்கும்போது, தொண்டை விக்கிக் கொண்ட நிலையில், கோலி சோடாதான்ஆபத்பாந்தவன்!'

சேலம் மாநாட்டு மேடையில் மேஜையில் ஏறி இடைவேளையில் பேசிய எனக்கு, அறிஞர் அண்ணா அவர்களே (பரிதாபப்பட்டு) சோடாவை உடைத்துக் குடிக்கத் தந்தது என் வாழ்நாளில் யாம் பெற்ற பேறு!

பல கூட்டங்களில் மேடையோடு, அப்போது ஒலிபெருக்கி அபூர்வம். ஆனால், கோலி சோடாதான் எங்கள் தோழன் - மேடையில் எப்போதும் இருக்கும்.

வெண்ணிலாவும் வானும் போல' என்ற வரிகள்போல, ‘அக்காலப் பேச்சாளரும் கோலி சோடாவும் போல!' என்று கூறலாம்!

மேடையில் நடைபெற்ற வேடிக்கை நிகழ்வு ஒன்றை நமது மூத்த திராவிடர் இயக்கத் தலைவர்கள் சொல்லி சொல்லி சிரிப்பது உண்டு.

குடந்தை கே.கே.நீலமேகம் அவர்கள் அக்கால திராவிடர் இயக்க மூத்த முன்னோடிகளில் ஒருவர். (அதே ஊரில் (குடந்தையில்) ‘கே.கே.என்.' என்ற

கே.கே.நீலமேகம், ‘வி.சி.' என்ற வி.சின்னதம்பி, ‘பி.ஆர்.பி.' என்ற பி.ஆர்.பொன்னுசாமி (சேர்வை) மூவரும் பிரபலமானவர்கள்) அவர் மேடைகளில் ஆவேசமாகப் பேசுவார்.

‘‘இரண்டாம் உலக யுத்த நேரம் அது - அந்தக் கொடுங்கோலன் ஹிட்லர் இங்கிலாந்து நாட்டின்மீது குண்டுபோட்டு அழிக்க முயற்சித்தபோது, பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் என்ன செய்தார் தெரியுமா?'' என உரத்த குரலில் மக்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டே,

(‘‘சின்னதம்பி அண்ணே ஒரு சோடா தாங்களேன்'' என்பார்) இதை அண்ணா உள்பட பலரும் சொல்லி சொல்லி சிரிப்பார்கள்!

திராவிடர் இயக்கத்தை வளர்த்தவர்களில் கோலி சோடா, கலர் தயாரிக்கும் தொழில் நடத்தியோர் (அக்கால தொழிலதிபர்கள்(?)) பலர் உண்டு!

கலைஞர் அவர்களை நாடகங்கள் எழுதத் தூண்டி நடிக்கவும் வைக்க முழுக் காரணமான நாகைத் தோழர் ஆர்.வி.கோபால் அவர்கள் ‘‘ராயல் சோடா பேக்டரி'' என்று வைத்திருந்தார். அது சிறப்பாக நடந்தது! அதன் வருவாய் மூலம் கழகத்திற்கும் தொண்டு செய்த பெருமகன். ‘நாகை திராவிட நடிகர் சபா' என்று உருவாக்கி, அதன்மூலம்தான்சாந்தா அல்லது பழனியப்பன்', ‘போர்வாள்' போன்ற பல நாடகங்கள் அரங்கேறி நடந்தன. புதுச்சேரியில் பல வாரங்கள் நடந்தன. (அப்போதுதான் மாநாட்டு நிகழ்ச்சியில் கலைஞர் தாக்கப்பட்டது).

(தொடரும்)

Comments