பிற்படுத்தப்பட்டோருக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கிடையாது என்ற மத்திய அரசின் முடிவு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதே!

சமூகநீதியை அறவே ஒழித்திட தொடர்ந்து காய்களை நகர்த்திவரும் மோசடியை முறியடிக்க ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டுவோம்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள சமூகநீதியை ஒழித்துக் கட்டும் வகையில், பிற்படுத்தப்பட்டோருக் கான கணக்கெடுப்பை நிராகரித்துள்ள மத்திய  பா... (ஆர்.எஸ்.எஸ்.) ஆட்சியின் சமூக அநீதியின் செயலை முறியடிக்க அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோர் அணி திரட்டப்படவேண்டும் என்றும், அனைத்து சமூகநீதியாளர்களும் சற்றும் தாமதியாது போராடத் தயாராகவேண்டும் என்றும்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூகநீதி என்பது ஒடுக்கப்பட்ட சமூக மக் களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அளித் துள்ள பறிக்கப்பட முடியாத உரிமைகளில் முக்கியமானது.

அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய பகுதியில் முதலில் இடம்பெறுவது சமூகநீதியே!

அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டு மானத்தின் முக்கிய பகுதியான - தொடக்கப் பகுதியானபீடிகை' (Preamble) உச்சநீதி மன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் நீதி என்று தொடங்கும் வரியில் முதலில் இடம்பெறுவது சமூகநீதியே; பிறகு தான் பொருளாதார நீதி, அரசியல் நீதி யெல்லாம்.

இந்நிலையில், இந்த அரசமைப்புச் சட்டத் தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களது தலைமையிலான பா... (ஆர்.எஸ்.எஸ்.) அரசு, சமூகநீதியை ஒழித்துக்கட்ட, வரிந்து கட்டி நிற்கிறது!

கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்து, உயிர் பறிக்கும் கொடுமைபோல, இட ஒதுக்கீடு உரிமையை - காலங்காலமாய்ப் போராடி பெற்ற சட்ட உரிமையை, மிக லாவக மாய் பறிக்க பல மறைமுக ஏற்பாட்டினை திட்டமிட்டே செய்கிறது.

அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டாவான இட ஒதுக்கீட்டினை ஒழித்து, மீண்டும் மனுதர்மத்திற்கு மகுடம் சூட்டி, ‘‘கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்ட'' துரோணாச்சாரிகளின் காலத்தைப் புதுப்பிக்க முயலுகிறது!

மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் 100-க்கு 90 இடங்களை ஏகபோகமாக அனுபவிக்கிறார்கள்!

ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்களின் மக்கள் தொகைதான் இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் 85 விழுக்காட்டிற்குமேல்; சிறுபான்மையினரையும் இணைத்தால் 90 விழுக்காடாகக் கூடும்.

உயர்ஜாதி என்பவர்கள் வடபுலத்தில் ஒரு சில மாநிலங்களைத் தவிர பெரிதும் 10 விழுக்காட்டிற்குள்தான் அடங்குவர்.

அவர்களே 100 இடங்களில் 90 இடங்களை (சிற்சில பதவிகளில் 100-க்கு 100) ஏகபோகமாக அனுபவிக்கிறார்கள். கல்வி, உத்தியோகங் களில் இது பளிச்செனத் தெரியும்.

இந்த ஏகபோகச் சுரண்டலிலிருந்து பிற் படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட் டவர்கள், எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையர் இவர்களை மீட்டெடுக்கவே இட ஒதுக்கீடு என்ற பெரியதொரு மாற்றுத் தீர்வு.

ஜாதி வாரி கணக்கெடுப்பைக் கைவிட முடிவு செய்துவிட்டதாம் மோடி அமைச்சரவை!

இதனைப் பறிக்க இப்போது  குறுக்கு வழியாக வரும் மக்கள் தொகை தொகைக் (census)  கணக்கெடுப்பில் - ஜாதி வாரி கணக்கெடுப்பு - பிற்படுத்தப்பட்டோர் - ஓபிசி என்று தனியே பிரித்து எடுப்பதைச் செய்யாமல், விட்டுவிட மோடி அமைச்சரவை முடிவு செய்துவிட்டதாம்!

நீதிமன்றங்களில் வழக்கு சென்றால், அங்கே நீதிபதிகள் எழுப்பும் கேள்வி, இட ஒதுக்கீடு இத்தனை விழுக்காடு தருவதற்கு அடிப்படைப் புள்ளி விவரங்கள் - ஆதாரங்கள் என்ன என்பதே!

இந்த நிலையில், இந்த ‘‘கண்ணாமூச்சியை'' இப்படி நிர்வாகத் துறையும், நீதித் துறையும் மாறி மாறி ஆடுவது, ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமையைப் பறிக்கத்தானே!

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி., எஸ்.டி.,) பிரிவினர் என்று பிரிக்கும் போது, அங்கே ஜாதிவாரி என்பது பற்றிய தெளிவு இல்லை. முதலில் பிற்படுத்தப்பட்டோர் தலையில் கைவைக்கவேண்டும்; அடுத்து மற்றவர் - கடைசியில் வெறும் அடிப்படையில் என்ற போர்வை போர்த்தி உயர்ஜாதியின ருக்குத்தாரை' வார்க்கும் உத்திகளைப் படிப் படியாகச் செய்யத்தான் இந்த முன்னேற்பாடு.

‘‘ஒரே ஜாதி'' என்று ஓர் அவசரச் சட்டத்தை ஏன் பிறப்பிக்கக் கூடாது?

ஏதோ ஜாதி ஒழிப்பில் அக்கறை செலுத்தும் அரசுபோல காட்டிக் கொள்ளும் இவர்கள் - மோடி அரசு - மத்திய பா... ஆர்.எஸ்.எஸ். ‘‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே ஆட்சி, ஒரே ரேசன் கார்டு, ஒரே கல்வி முறை'' என்று கூறிடும் நிலையில், ஏன் ‘‘ஒரே ஜாதி'' என்று ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கக் கூடாது?

பிற்படுத்தப்பட்ட ஜாதி லேபிளையும் காட்டி, 2014 இல் பிரதமர் பதவிக்கு வரும் போது, பிரதமர் மோடியால் பிரச்சாரம் செய்யப்பட்டதா இல்லையா? அவரது ஜாதிப் பிரிவும் தொடக்கக் காலத்தில் இல்லை. குஜராத் அரசில் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கொண்டு வரப்பட்டது என்ற தகவல் பல நூல்கள்மூலம் வெளிவந்துள்ளனவே!

ஜாதி' (Caste) என்ற சொல் இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே 18 இடங்களில் இடம்பெற்றுள்ளது. (ஹேவனூர் கமிஷன் அறிக்கை).

அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆம் பிரிவு பிற்படுத்தப்பட்டோர் நலன்பற்றியது என் பதை மறுக்க முடியுமா?

மக்கள் நல விரோத நடவடிக்கை அல்லவா?

ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப் பட்டோர் ஆணையமும், மத்திய தேசிய பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறை ஆணை யமும் - மண்டல் தீர்ப்புப்படி ஏற்படுத்தப்பட்ட நிலையில், சென்சசில் ஓபிசி - பிற்படுத்தப் பட்டோர்பற்றிய விவரக் கணக்கெடுப்பை கைவிட்டால், அது அரசமைப்புச் சட்ட விரோதம் - மக்கள் தொகையில் 65 விழுக் காட்டுக்குமேல் (சுமார் 90 கோடிக்கு மேல்) உள்ள மக்களுக்கு எதிரான மக்கள் நல விரோத நடவடிக்கை அல்லவா?

எவ்வளவு காலத்திற்கு இட ஒதுக்கீடு என்ற ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது! உலகம் உள்ள அளவும் தேவை என்பதா நமது வாதம்? இல்லையே!

வளர்ந்த நாடான அமெரிக்கா போன்ற வற்றில்கூட இன்னமும் Affìrmative Action  என்ற பெயரால் இட ஒதுக்கீடு கருப்பின மக்களுக்கு நீடிக்கவில்லையா?

இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு ஒரு நூறாண்டுகூட அமுலில் இல்லை.

5000 ஆண்டுகால கொடுமை!

மனுதான் இட ஒதுக்கீட்டினை தொடக்கி யிருக்கிறார் - பார்ப்பனருக்கு படிப்பை ஒதுக்கி, ‘சூத்திரர்'களுக்கு அடிமை வேலை களை ஒதுக்கி - கல்வி, சொத்துரிமை முறையைப் பறித்தவர்.

5000 ஆண்டுகால கொடுமையை சரி செய்ய 100 ஆண்டுகால இட ஒதுக்கீடுகூட இல்லையே!

இந்தியாவின் உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்றங்களில் OBC, S.C., S.T.,  பங்கும், விகிதாச்சாரமும் எவ்வளவு?

எனவே, மக்கள் தொகைக் கணக்கெடுப் பில் ஜாதி இருக்கும்வரை ஜாதி வாரி கணக்கெடுப்புத் தேவை!

கரோனாவை ஒழிக்குமுன், பாதிக்கப்பட் டோர், குணமடைவதற்குக் கணக்கெடுப்பு தேவைப்படுகிறது அல்லவா? - அதுபோல!

சமூகநீதியாளர்களுக்கு நமது அன்பு வேண்டுகோள்!

சமூகநீதி - பெரியார் மண்ணான நம் தமிழ் நாட்டுத் தலைவர்கள், சமூகநீதிப் போராளி களுக்கு வழிகாட்டும் கடமையைச் செய்து,  இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனை வரையும் ஓர் அணியில் திரட்டி, மத்திய அரசின் இந்த வீண், விபரீத யோசனையை கைவிடச் செய்யவேண்டும்!

இது அவசர அவசியமாகும்!

அனைத்துக் கட்சி - சமூகநீதியாளர் களுக்கும் நமது அன்பு வேண்டுகோள் இது!

உதாவதினி தாமதம் -

உடனே விழியுங்கள் -

போராடத் தயாராகுங்கள்!!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.4.2021

Comments