ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதோடு - தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்

 திமுக தலைவர் மு..ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஏப்.29 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதோடு, தற்காலிக மருத்துவ மனைகளையும் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம் என்ற தலைப்பில் நேற்று (28.4.2021) வெளியிட்ட காணொலியில் அவர் பேசியிருப்பதாவது:

கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள். முகக் கவசம்,கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள். கபசுரக் குடிநீர், காய்கறியால்தயாரிக்கப்பட்ட பானங்களை அருந்துங்கள். பழங்கள், சத்தான,இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள். மருத்துவக் குணங்கள் கொண்ட உணவை சேர்த்துக் கொள்ளும் பாரம்பரியத்தை பின்பற்றினால் தடுக்கலாம்.

 கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் அவசரமாக சிலநடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆக்சிஜன், தடுப்பூசி கையிருப்பை அதிகரிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியை புதிதாக உருவாக்க வேண்டும். போதியஎண்ணிக்கையில் வெண்டிலேட்டர்களை வைத்திருக்க வேண்டும். தேவையான மருந்துகள், புதிய படுக்கை வசதிகள் கொண்டதற்காலிக மருத்துவமனைகள்அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் கரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மக்கள் பாதுகாப்பு, முகக் கவசம் அணிவது, அனைவருக்கும் பரிசோதனை, அனைவருக்கும் தடுப்பூசி ஆகியவற்றை இயக்கமாக மாற்ற வேண்டும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக்கூடாது, தொற்று ஏற்பட்டவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் ஆகிய 2 முக்கிய இலக்கைக் கொண்டதாக அந்த இயக்கம் செயல்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் இப்போது இருக்கும் அரசு செயல்படுத்துகிறதோ இல்லையோ, விரைவில் புதிதாக அமையப் போகிற திமுக அரசு நிச்சயமாக நிறைவேற்றும். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களின் அமைதியான வாழ்வுக்கும் தேவையான அனைத்தையும் அமையப் போகிற திமுக அரசு செய்யும்.

மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் மத்திய அரசு அலட்சியமாக இருக்க வேண்டாம். வரலாற்றின் பழிக்கு ஆளாக வேண்டாம் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Comments