மனுதர்ம சாஸ்திரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 4, 2021

மனுதர்ம சாஸ்திரம்

* தந்தை பெரியார்

சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு மக்களுக்கு எங்கு பார்த்தாலும் மனிதரின் சுயமரியாதைக்கு விரோதமான ஆதாரங்களை ஒழிப்பதில் கவலையும், ஊக்கமும் அதிகமாகி வருகின்றது. சென்னை, வடஆற்காடு, சேலம், தஞ்சை, திருநெல்வேலி, மதுரை முதலிய இடங்களில் கூடிய பல மகாநாடுகளில் வர்ணாசிரம தர்மம் என்பதைக் கண்டித்திருப்பதுடன், அதற்கு ஆதாரமான புஸ்தகங்களையும் பகிஷ்கரிக்கத் தீர்மானங்களும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. சில மகாநாடுகள் மனுதர்ம சாஸ்திரத்தை நெருப்பில் கொளுத்தி சாம்பலைக் கரைத்தும் வந்திருக்கின்றன.

அரசாங்கமும் சட்டசபை மெம்பர்களும் இதைக் கவனிக்கப் போகிறார்களா என்று தீர்மானிக்க முடியவில்லை. பழைய காலமாயிருந் திருக்குமானால் இம்மாதிரி பெரும்பான்மையான மக்களுக்கேற் பட்டிருக்கும் உணர்ச்சியை மதித்து அரசாங்கமானது வருணாசிரமத்தை அழித்துச் சட்டம் செய்திருக்கும் என்பதோடு வருணாசிரமக் கொள்கைக் காரர்களை கழுவிலேற்றி இருக்கும் என்றுங்கூட சொல்லலாம். ஏனெனில், நிரபராதிகளான 8,000 சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக சொல்லும் சரித்திரத்தைப் பார்க்கும்போது இவ்வளவு அக்கிரமும், ஜீவகாருண் யமும் அறிவும் அற்ற தன்மையான கொடுமையை சகித்துக் கொண்டிருக் கும் என்றும் யாரும் சொல்லமுடியாது. நமது அரசாங்கங்கள் பழையகால அரசாங்கங்களைப் பின்பற்றிக் கழுவேற்றாவிட்டாலும் சட்டமூலம் கொடுமைகளை ஒழிக்கவாவது உதவவேண்டாமா என்று கேட்கின்றோம்.

ஒருக்கால் மத விஷயத்தில் தலையிடமுடியாது என்று சொல்வார் களானால், மத விஷயங்களையாவது கவனித்து மதத்தில் எப்படி சொல்லியிருக்கின்றதோ யார் யாருக்கு என்ன என்ன வேலை இடப் பட்டிருக்கின்றதோ, யார் யாரின் நடத்தை எப்படி இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றதோ அப்படியாவது நடக்கும்படி பார்க்க வேண்டும். அப்படியும் இல்லாமல் இப்படியுமில்லாமல் பார்ப்பானும் வெள்ளைக்காரனும் மாத்திரம் பிழைக்க என்ன என்ன மாதிரி நடக்க வேண்டுமோ, எப்படி எப்படி சீர்திருத்தம் செய்யவேண்டுமோ அப்படி யெல்லாம் சூழ்ச்சிகள் செய்துகொண்டு மதவிஷயத்தில் பிரவேசிக்க மாட்டோம் என்று சொல்வது வடிகட்டின அயோக்கியத்தனமாகுமென்றே சொல்லுவோம்.

இச்சூழ்ச்சிகளைப் பார்க்கும்பொழுது, இது சமயம் மகம்மதிய அரசாங்கத்தில் வாழும் யோக்கியதையாவது நமக்குக் கிடைக்காதா என்று ஆசைப்பட வேண்டியதாயிருக்கின்றது. காரணமென்னவென்றால், வீரர் கமால்பாட்சா அவர்கள் ஒரு அரச விசாரணைக்கு குரானை ஆதரவாக காட்டியபோது அது அக்காலத்து சங்கதி இக்காலத்திற்கு செல்லாது என்று அதைப் பிடுங்கி வீசி எறிந்தாராம். குரான் வாக்கியம் செதுக்கப்பட்ட இடங்களையெல்லாம் அழித்து சுயமரியாதையையும், கைத்தொழிலையும் கவனியுங்கள் என்று எழுதினாராம். மகம்மதி யரைவிட வெள்ளைக்காரருக்கும் பார்ப்பனர்களுக்கும் மத பக்தி யிருக்கின்றது என்று சொன்னால் எந்த பைத் தியக்காரராவது நம்ப முடியுமா என்று கேட் கின்றோம்.

எனவே, மதம் என்கிற புரட்டுகளையும், மதாச் சாரியர்கள் என்கின்ற அயோக்கியர்களையும் சாஸ்திரம், வேதம், புராணம் என்பவைகளாகிய அதர்ம அக்கிரம, ஆதாரங்களை யும் குருட்டுத்தனமாய் பின்பற்றாமல் அன்பு, ஜீவ காருண்யம், அறிவு, சத்தியம் என்பவைகளை ஆதாரமாய் வைத்து அவற்றிற்கு விரோதமாய் உள்ளவைகளையெல்லாம் அடியோடு ஒழிப்பதற்கு முற்பட வேண்டியது தான் பகுத்தறிவுள்ள மனிதனின் கடமை, ஆதலால், அதற்கு ஒவ்வொருவரும் முற்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகின்றோம்.

 - 'குடிஅரசு' - துணைத் தலையங்கம் 04.12.1927

No comments:

Post a Comment