கரோனாவின் அலைவீச்சு சுனாமிபோல் எழுந்துள்ள நிலையில் - மத நம்பிக்கை அடிப்படையில் விஞ்ஞானத்தைப் புறக்கணிப்பதா?

கரோனா பூஜைகள் - கும்பமேளா நிகழ்ச்சிகள் தேவையா?

மூச்சுத் திணறலைவிட - அறிவுத் திணறல் ஆபத்தானது!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள விழிப்பூட்டும் அறிக்கை

கரோனாவின் இரண்டாவது அலைவீச்சு - சுனாமிபோல் எழுந்துள்ள நிலையில், ஆட்சிப் பொறுப்பில் இருப்போர் கடைபிடிக்கவேண்டிய அறிவியல், மருத்துவ அணுகுமுறைகளைக் கைவிட்டு பூஜை செய்வது, கும்பமேளாவில் குளிப் பது என்பது ஏற்கத்தக்கதல்ல என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு இந்தியாவிலும் - ஏன் உலக நாடுகளிலும்கூட - தமிழ் நாட்டிலும் மிகப்பெரும் அளவில் ஒருசுனாமி'போல் பரவி வரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தி, மக்களின் உயிரையும், உடல்நலத்தையும் காப்பாற்றுவது எப்படி என்பதே அரசுகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளதால், மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் கரோனா தொற்றுப் பரவாமல் செய்ய அனைத்து முயற்சி களையும் எடுத்து வருகின்றனர்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறப்பான தீர்ப்பு

விதித்துள்ள பல கட்டுப்பாடுகளில், திருமண நிகழ்வுகள், இறப்பு அடக்கங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மக்கள் கூடுவதை எந்த அளவுக்குத் தவிர்த்து அவர்களைக் காப்பாற்றும் பணிகளைச் செய்வதால், மக்கள் அதிகம் கூடும் மத நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், வழிபாட்டுக் கூடங்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

இது பக்தர்களாக உள்ள குடிமக்களைக் காப்பாற்றவே தவிர, மதத்திற்கும், கோவிலுக்கும் மற்றும் மதக் கூடங்களுக்கு விரோதமான முயற்சிகளும் அல்ல.

ஆனால், இதை அறவே புரிந்துகொள்ள மறுத்து, திருவிழாக்களில் கூடுவதைத் தடுக்கலாமா? என்று கூறி ஆர்ப்பாட்டங்களை மதவெறியாளர்கள் அப்பாவி பக்தர்களைப் பலிகடாக்களாக்கி, ஆர்ப்பாட்டம், வழக்கு கள் போடுதல் முதலிய அறியாமையை அறுவடை செய்து மகிழ்கின்றனர்.

இப்படி மதுரை சித்திரை விழாவை நடத்திட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த வழக்கு ஒன்றில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டிஸ் சிவஞானம், ஜஸ்டிஸ் ஆனந்தி ஆகியவர்களின் அமர்வு, ‘‘திருவிழாவில் மக்களை - பக்தர்களை - இந்தக் கரோனா காலத்தில் அனுமதிப்பது கூடாது; அதனால் பெருந்தொற்றை மேலும் மேலும் பரவலாக்கும் அபாயம் ஏற்படும்'' என்று தீர்ப்பளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்தது மிகவும் வரவேற்கத்தக்கது. பொதுநல - சமூகக் கண்ணோட்டத்தில் பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றும் தொண்டறப் பணி என்றே அதைப் பாராட்ட வேண்டும்.

வடநாட்டில் ‘‘கும்பமேளா'' என்ற கங்கை, யமுனை நதிகளில் கூட்டங் கூட்டமாக மூழ்கி எழுந்தால் ‘‘புண்ணியம் கிட்டும், செய்த பாவம் போகும்'' என (மகாமகம்போல்) நடப்பதை உத்தரகாண்ட், மத்திய பிரதேச, உத்தரப்பிரதேச அரசுகள் பா... மதவாத அரசாக இருப்பதால், அதனைத் தடுக்காமல் ஊக்குவித்து, இரண்டாம் அலையை (கரோனாவை) மேலும் பரப்பும் சமூகக் குற்றத்தினை செய்வது மன்னிக்கப்படக் கூடாத ஒன்றாகும்!

மத போதையால் மூடத்தனங்களில் மூழ்கும் பெரும் பதவிக்காரர்கள்

ஏடுகளில் வந்துள்ள செய்திகளை அப்படியே தருகிறோம், படியுங்கள்.

‘‘மத்திய பிரதேச மாநிலத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில்,  அம் மாநிலத்திலுள்ள இந்தூர் விமான நிலையத்தில், பா... வைச் சேர்ந்த அமைச்சர் உஷா தாக்கூர் தனது ஆதரவாளர்களுடன் ‘‘கரோனா பூஜை'' நடத்தியுள்ளார்!

தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் சிலை முன்பு நடத்தப்பட்ட இந்த பூஜையில் விமான நிலைய இயக்குநர்(!) ஆர்ஃபாமாசன்யாஸ்  மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டதோடு, அமைச்சர் முகக்கவசம் இன்றி கலந்துகொண்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!  இந்த அமைச்சர் இதில் மட்டுமல்லாமல் பொது வெளியில் எங்கும் முகக்கவசம் அணிவதே இல்லையாம்!

அதுபற்றி கேட்டபோது, அவர் அளித்த பதில் வெட்கக்கேட்டின் உச்சமாகும்!

‘‘ஒவ்வொரு நாளும் நான் ஹனுமன் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டுள்ளேன். எனவே, முகக்கவச மெல்லாம் அணியவேண்டியதில்லை!''

என்னே மடமை!  மதக் கிறுக்கு! எவ்வளவு அறியாமை கலந்த ஆணவம்!!

உத்தரகாண்ட் முதலமைச்சர் ராவத் கும்பமேளா சாதுக்களை ஊக்கப்படுத்துவதுபோல் நடந்துகொள்வதும் வெளிப்படை.

ஆயிரக்கணக்கான மத பக்தர்கள் நெருக்கமாகிக் குளிப்பது நடப்பதால், பலருக்குக் கரோனா அலையின் தொற்று வேகமாகப் பரவி வருகிறது!

மத உரிமைகள்பற்றிய இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 25, 26 ஆகிய பிரிவுகளில், அது ‘‘Subject to Public Order, morality and health and to other provisions of this part''  என்றுதான் இரு பிரிவுகளும் - சுகாதாரத்திற்கு மதம் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியாக வேண்டும் என்பது வற்புறுத்தப்பட்டுள்ள உரிமையாக உள்ளது என்பதை வழக்குப் போட்டவர்கள் ஏனோ மறந்தனர்?

மத்தியில் உள்ள ஓர் ஆட்சி - காவி கட்சியும், அதன் தலைமையும் ‘‘கைதட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள், கரோனா போய்விடும்'' என்பதும், .பி.யின் பா... அமைச்சர்கள் கண்டபடி உளறுவதும், அறிவியலைக் கொச்சைப்படுத்தும் அறியாமை அவலத்தின் உச்சமாக உள்ளது!

எத்தனைக் காலம் இந்தக் கோமாளித்தனக் கொடுமையை நாம் சகித்து வாழ வேண்டியவர்களோ - அறியோம்!

அறிவு மூச்சுத் திணறல்!

ஜனநாயகப் போர்வையில் சனாதனத்தின் இப்படி ஒரு சதிராட்டம் சரித்திரத்தின் கருப்புப் பக்கங்கள் அல்லவா?

கட்டுண்டோம், பொறுத்திருப்போம்!

வேறு வழியில்லையே!

மூச்சுத் திணறலைக் கூடப் பொறுத்துக் கொண்டு வாழ முயற்சிக்கலாம்; ஆனால், அறிவுத் திணறலை இப்படிச் சகிப்பதைவிட மனித குலத்தின் பகுத்தறிவுக்கு வேறு கொடுந்தண்டனையே தேவையில்லை!

 

கி.வீரமணி

திராவிடர் கழகம்

தலைவர்,

சென்னை

17.4.2021

Comments