தேர்தல் தில்லுமுல்லுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 6, 2021

தேர்தல் தில்லுமுல்லுகள்!

 அசாம் மாநிலத்தில் மூன்று கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி நடந்தது. இதில் அசாம் மாநிலம்   திமா ஹாசோ தொகுதியும் தேர்தலைச் சந்தித்தது. திமா ஹாசோ தொகுதிக்குட்பட்ட ஹப்லாங் வாங்குச்சாவடியில் நடந்த குளறுபடிகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ஹப்லாங் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில்  வாக்குப்பதிவின் போது அங்கு வந்த கிராமத் தலைவர் ஒருவர் புதிய வாக்காளர் பட்டியலுடன் வந்து, அதன்படி வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த தேர்தல் அலுவலர்களும் அதற்கு இசைந்துள்ளனர். இந்த நிலையில் 90 வாக்காளர்களே உள்ள வாக்குச்சாவடியில் 171 வாக்குகள் பதிவாயின. இந்த விவகாரம் தெரியவந்ததை அடுத்து, அங்குத் தேர்தல் பணியில் இருந்த 5 பேரை தற்காலிக நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்டத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

இதே மாநிலத்தில் தான் 2-ஆவது கட்டத் தேர்தல் நடைபெற்றது. அசாமின் ரதாபரி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 149-இந்திரா எம்.வி பள்ளியில் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவுக் கருவிகளை கட்டுப்பாட்டு அறைக்கு எடுத்துச்செல்ல பாஜக வேட்பாளரின்  காரை தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  வாக்குப்பதிவு கருவிகளை  பாஜக வேட்பாளரின் காரில் எடுத்துச்செல்லும் தகவல் அறிந்த எதிர்க்கட்சிகள் காரை முற்றுகையிட்டன. இதையடுத்து அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனே விரைந்து வந்த காவல்துறையினர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். 

வாக்குப்பதிவு கருவி பாஜக பிரமுகருக்கு சொந்தமானவரின் காரில் எடுத்துச்செல்லப்பட்ட சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரிகள், “ கட்டுப்பாட்டு அறைக்கு வாக்கு எந்திரத்தை எடுத்துச் சென்ற கார் பழுதடைந்துவிட்டது. ஆகையால், அவ்வழியாக வந்த காரில் வாக்கு எந்திரத்தை கட்டுப்பாட்டு அறைக்குக் கொண்டு சென்றோம்எனக் கூறினர். இதுபற்றி ஆங்கில தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

இதற்கிடையே, வாக்கு எந்திரத்துடன் பாஜக வேட்பாளரின் காரில் சென்ற தேர்தல் அதிகாரிகள் 4 பேரை இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்டு தாக்கீதும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

பா...வுக்கு இது ஒன்றும் புதிதல்ல!

2017 ஆம் ஆண்டு குஜராத் தேர்தலிலும் இதே மோசடிதான் நடைபெற்றது. ஆனால் அது குறித்து பிரியங்கா காந்தி அன்று கேள்வி எழுப்பியும் இன்றுவரை தேர்தல் ஆணையம் பதில் கூறவில்லை. குஜராத் மாநிலத்தின்   கோத்ரா தொகுதியில் வாக்குப் பதிவு நடந்ததை விட  எண்ணிக்கையின் போது 2,494 வாக்குகள் அதிகரித்தது எப்படி என்று பிரியங்கா  காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.அவர் தனது 'டுவிட்டரில்', ‘குஜராத் மாநிலம் கோத்ரா தொகுதியில் தேர்தல் அன்று மொத்தம் பதிவான வாக்குகள் 1,76,417. ஆனால், வாக்கு  எண்ணிக்கையின்போது மொத்தம் 1,78,911 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. பாஜக வேட்பாளர் 258 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலின்போது பதிவான வாக்குகளை விட வாக்கு எண்ணிக்கையின் போது 2,494 வாக்குகள் கூடுதலாக வந்தது எப்படி?’ எனக் கேள்வி எழுப்பினார். மேலும், வாக்குப்பதிவு அன்று பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் அதிகாரி கையெழுத்திட்டுக் கொடுத்த ஒப்புகை சீட்டையும், தேர்தல்  ஆணைய இணையதளத்தில் வெளியிட்டுள்ள தேர்தல் முடிவு பற்றிய விவரத்தையும் 'டுவிட்டரில்' பிரியங்கா இணைத்திருந்தார். அதே போல் பல தொகுதிகளிலும் வாக்களார் எண்ணிக்கையை விடப் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அதிகம் இருந்தது,

 சரியாக பெரும்பான்மையை எட்டும் வகையில்  மோசடி செய்து பாஜக வென்றிருந்தது.  தற்போது குஜராத் பாணியை அசாமிலும் திணிக்கிறது.

பா... தத்துவம் பார்ப்பனீய தத்துவம்தான்; 'தர்மத்தைக் காக்க அதர்மத்தைச் செய்யலாம்' என்பதுதான் அவர்களின் கோட்பாடு. அவர்கள் கூறும் அந்தத் தர்மம் என்பது- பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் வருணாசிரம தர்மமே!

இப்பொழுதும் பா...வின் கொள்கை அதுதானே. அதனால்தான் அந்த யுக்தியைக் கடைபிடிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

சட்டம் என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம்.

No comments:

Post a Comment