கோவேக்சின் மருந்தை தயாரிக்கும் மேலும் ஒரு நிறுவனம்- மத்திய அரசு அனுமதி

மும்பை,ஏப்.18 நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று கடந்த மாதம் முதல் மேலும் அதிகரிக்க தொடங்கியது.

இந்தநிலையில் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டு பிடித்துள்ள கோவிஷீல்டு மற்றும் அய்தராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

தற்போது கரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ஏற்கெனவே தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. எனவே கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஹாப்கின் என்ற நிறுவனத்துக்கு அனுமதி அளிக்குமாறு மகாராட்டிரா முதல் அமைச்சர் உத்தவ்தாக்கரே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் கோவேக்சின் தடுப்பூசியை தயாரிக்க மும்பையை சேர்ந்த ஹாப்கின் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை செயலாளர் ரேணு சுவரூப், மகாராட்டிரா தலைமை செயலாளருக்கு அனுப்பி உள்ளார். ஒரு  ஆண்டுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவையில்  ரூ.39.74 கோடி மதிப்பீட்டில்

கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த அவலம்

கோவை,ஏப்.18- கோவையில் பெய்த கனமழை காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட உக்கடம் பெரிய குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் உக்கடம் பெரிய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ் -1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.62 கோடி மதிப்பீட்டிலும் குளத்தினை புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துஉள்ளன.

இதில், உக்கடம் பெரிய குளத்தைச் சுற்றிலும் உள்ள கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, கரையில் பூங்காக்கள், மிதிவண்டி பாதை, மிதக்கும் நடைபாதை, குளத்தில் ஆகாயத்தாமரை அப்புறப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு குளம் திறக்கப்பட்டது.

கரும்புக்கடை சேரன்நகர் பகுதியில் உக்கடம் பெரிய குளத்தின் கரையை ஒட்டி சுமார் 12 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. கோவையில் 14.4.2021 அன்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை கனமழை பெய்தது. அதிகாலை 3 மணியளவில் மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் சுற்றுச்சுவர் சுமார் 50 அடி தூரத்துக்கு இடிந்து விழுந்தது. குடியிருப்புகள் இல்லாத பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. தகவலறிந்து சம்பவ பகுதிக்கு 15.4.2021 அன்று காலை சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பருவமழை இயல்பாக இருக்கும் 

  புதுடில்லி, ஏப்.18 ஆண்டு தோறும் நாட்டிற்கு, 75 சதவீத மழையை தரும் தென்மேற்கு பருவ மழை, இந்த ஆண்டு இயல்பாகவே இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது.

மத்திய நில அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ராஜீவன் கூறியதாவது:

நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழை, 98 சதவீதம் இயல்பானதாக இருக்கும். இதில், 5 சதவீதம் மட்டும் கூடுதல் அல்லது குறைவாக பதிவாக வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவமழை ஒடிசா, ஜார்க்கண்ட், கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில், வழக்கத்திற்கு சற்று குறைவாக பதிவாகலாம். இவை தவிர மற்ற மாநிலங்களில், வழக்கமான அளவிலோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ மழைப் பொழிவு இருக்கும்.இது, விவசாயி களுக்கு மிக மகிழ்ச்சி தரும் செய்தி.

இவ்வாறு அவர் கூறினார்.

பெட்ரோல் பங்க்காக மாறும்

மண்ணெண்ணெய் நிலையம் 

  சென்னை, ஏப்.18 மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங் களை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட, வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், உணவுப் பொருள் பங்கீட்டு கடைகள், பல்பொருள் அங்காடிகள், பெட்ரோல் பங்க், மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்கள் போன்றவற்றை நடத்துகின்றன.

சமையல் எரிவாயு  இணைப்பு இல்லாத மற்றும் ஒரு சமையல் எரிவாயு உருளை உள்ள அட்டைதாரருக்கு,  உணவுப் பொருள் பங்கீட்டுக் கடையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. கூட்டுறவு கட்டுப்பாட்டில், 251 மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்கள் உள்ளன.

மண்ணெண்ணெயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. சமீப காலமாக, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது. இதற்கு, சமையல் எரிவாயு உருளை பயன்பாடு அதிகரிப்பே காரணம். மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பால், அதற்கான விளிம்பு தொகை குறைந்துள்ளது. இதனால், ஊழியர்கள் ஊதியம், போக்குவரத்து, வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க முடியாமல், மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களை நடத்தும், கூட்டுறவு சங்கங்கள் நட்டத்தில் இயங்குகின்றன.

நட்டத்தில் செயல்படும் சங்கங்களின் நிதியை வலுப்படுத்த, மண்ணெண்ணெய் நிலையங்களை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் பணிக்கான கூடுதல் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Comments