காசாவில் ஹமாஸ் குழுவின் ஆயுதத் தளங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்

ஜெருசலேம், ஏப்.18 காசாவில் இருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் குழுவின் ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிழவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

 இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலின் ஸ்ரெடோ நகரின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து 15.4.2021அன்று காசா முனையில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் ஸ்ரேடோ நகரின் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் விழுந்தது. இதனால், யாருக்கும் காயமோ? பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஸ்ரெடோ நகர் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா முனையில் உள்ள ஹமாஸ் போராளிகளின் ராணுவ நிலைகள், ஆயுத உற்பத்தி மய்யங்கள், ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர்  அதிரடி தாக்குதல் நடத்தினர்.   

யுரேனியம் செறிவூட்டல்

60 சதவீதமாக உயர்த்தி ஈரான் அறிவிப்பு

வியன்னா, ஏப். 18- 2015ஆம் ஆண்டு ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையில் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என கூறிய அப்போதைய அதிபர் டிரம்ப் கடந்த 2018ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக்கொண்டார். மேலும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்தார். இதனால் கோபமடைந்த ஈரான் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறி யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதமாக அதிகரித்தது.

இந்த சூழலில் அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். இதனிடையே அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாப்பது தொடர்பாக அந்த ஒப்பந் தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத நாடுகளிடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் அண்மையில் பேச்சு வார்த்தை தொடங்கியது. இதில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தையும் நடந்தது.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரானின் அணு உலையில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இது இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல் என குற்றம் சாட்டிய ஈரான் இதற்கு பதிலடியாக யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தப்போவதாக தெரிவித்தது. இந்த நிலையில் 60 சதவீதம் வரை யுரேனியம் செறிவூட்டும் பணியை தொடங்கிவிட்டதாக ஈரான் அரசு  அறிவித்தது.

Comments