திராவிடர் கழக வழக்குரைஞர் அணியும் - செயல்பாடுகளும்

திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் காணொலி மூலம் கடந்த சனியன்று (24.4.2021) முற்பகல் நடைபெற்றது. மாநிலம் தழுவிய அளவில் கழக வழக்குரைஞர் அணியைச் சேர்ந்த தோழர்கள் பங்கு கொண்டு, பல சிறப்பான கருத்துகளை எடுத்துக் கூறினர்.

ஒரு கால கட்டம் இருந்தது; வழக்குரைஞர் சங்க (Bar Association)கட்டடத்தில்கூட பார்ப்பனர்களுக்குத் தனித் தண்ணீர் பானை இருந்ததுண்டு. பெரும்பாலும் வழக்குரைஞர்கள் என்றால் பார்ப்பனர்களாகவே இருந்தனர்.

நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம் - கல்வி வள்ளல் காமராசர் ஆட்சிக் கால கட்டத்தில்தான் பார்ப்பனர் அல்லாதாரும் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் நிலை எல்லாம் ஏற்பட்டது.

நூறு ஆண்டுகள் கடந்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவர் நீதிபதியாக வர முடியவில்லை. தந்தை பெரியார் குரல் கொடுத்த பிறகுதான் மானமிகு மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக் காலக் கட்டத்தில்தான் ஜஸ்டீஸ் திரு. . வரதராசன் - சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் நீதிபதியாக அமர்த்தப்பட்டார். உச்சநீதிமன்றத்திற்குள் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியும் அவரேதான்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக அவ்வப்போது குரல் கொடுத்து உயர்நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியும் வந்தது திராவிடர் கழகமே!

அதன் காரணமாகத்தான் இந்தியத் துணைக் கண்டத்திலேயே பார்ப்பனர் அல்லாத நீதிபதிகள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகளும், பெண் நீதிபதிகளும் அதிகம் இடம் பெற்றது சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் என்பது மறுக்கப்படவே முடியாத உண்மையாகும்.

சமூகநீதிக்காக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கொடும் பாவிகளைக்கூட எரித்த வரலாறு திராவிடர் கழகத்திற்கு உண்டே!

நீதித் துறையில் திராவிடர் கழக சமூகநீதியின் பங்கு என்பது தனி சரித்திரமாகும். ஒரு அரசுப்பிளீடர் நியமனத்திலும் கூட திராவிடர் கழகம் போராடியதுண்டு.

அத்தகு வரலாறு படைத்த திராவிடர் கழகத்தின் வழக்குரைஞர் அணியின் செயல்பாடுகள் இந்தக் கால கட்டத்தில் எப்படி அமைய வேண்டும், அமைப்பு ரீதியாக எப்படி செயல்பட வேண்டும் என்பதுபற்றி எல்லாம் கழக வழக்குரைஞர் கலந்துரையாடலில் கருத்துகளையும், திட்டங்களையும் எடுத்துக் கூறினர். கூட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் நிறைவாகப் பல ஆலோசனைகளையும், திட்டங்களையும் எடுத்துக் கூறினார். நான்கு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூறப்பட்ட முக்கிய கருத்துகள்: (1) வழக்குரைஞர் அணி பலப்படுத்தப்பட வேண்டும். (2) மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இத்தகைய கூட்டம் நடைபெற வேண்டும். (3) கருத்தரங்கம் நடத்திட வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதிகளைப் பங்கேற்கச் செய்யலாம். (4) கழகத் தோழர்கள் மீதான வழக்குகளை முன் வந்து நடத்திட வேண்டும். (5) தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவது தொடர்பான பிரச்சினைகளில் அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், கழக வழக்குரைஞர்கள் முன் வந்து வழக்குகளைத் தொடுக்க வேண்டும். (6) பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் எந்தவித மத வழிபாட்டுச் சின்னங்களும் இடம் பெறக் கூடாது என்று அரசாணை தெளிவாக இருந்தும், அதனை மீறி சில இடங்களில் 'சாமி' சிலைகள் வைப்பது  சட்ட விரோதமானதாகும். இந்தப் பிரச்சினையில் கழக வழக்குரைஞர் அணி தலையிட்டு, நியாயம் கிடைக்க வழி வகை காண வேண்டும். (7) உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் நமது இயக்க தொடர்பானதும், சமூக நீதி மற்றும் பொதுப் பிரச்சினை தொடர்பான தீர்ப்புகளின் நகல்களை அவ்வப்போது பெற்று தலைமைக் கழகத்திற்கு அனுப்பிட வேண்டும். (8) தலைமையகத்தில் சட்டத் துறைக்கென்று ஓர் ஆவணக் காப்பகம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நம் இயக்க இளம் வழக்குரைஞர் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட வேண்டும். (9) நமது வழக்குரைஞர்கள் தொழில் ரீதியாக தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். (10) நீதித்துறை தொடர்பான நூல்களை, முக்கிய தீர்ப்புகளை நன்கு படித்து தங்களைச் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். (11) நமது வழக்குரைஞர்கள் தாங்கள் இருக்கும் இடங்களில், பகுதிகளில் குறிப்பிடத்தக்கவராக - மக்கள் தொடர்பும்  - நல்லிணக்கம் உள்ளவராக மிளிர்தல் வேண்டும் - வழிகாட்டவும் வேண்டும். இயக்கத்துக்கும், பொது வாழ்வுக்கும் இது மிகவும் அவசியமாகும். (12) மாநில  மாநாடு ஒன்றும் நடத்தப்பட வேண்டும். (13) இந்தக் கரோனா கால கட்டத்தில் ஏழை - எளிய மக்களுக்கு நமது வழக்குரைஞர் அணி ஆங்காங்கே உதவிக்கரம் நீட்ட வேண்டும். (14) திராவிடர் கழகத்திற்கு எல்லா வகைகளிலும் கழக வழக்குரைஞர் அணி உறுதுணையாக இருந்து, இயக்க வளர்ச்சிக்கும், ஏடுகள், இதழ்கள் வளர்ச்சிக்கும் தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். (15) சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர் கழக அமைப்பைத் தொடங்கினால் எதிர்காலத்தில் நம் கழகத்திற்கு வழக்குரைஞர்கள் கிடைப்பார்கள். (16) தனி உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்பது போன்ற கருத்துகளும், ஆலோசனைகளும், திட்டங்களும் எடுத்துரைக்கப்பட்டன.

வழக்குரைஞர் அணியின் பொறுப்பாளர்கள் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்திற்குப்பின் புதிய வேகத்தோடு செயல்படுவார்களாக!

Comments