மதமா, மக்கள் நலனா?

இதிகாசக் கதையின்படி இராமன் வனவாசம் சென்றதாக   210 கி.மீ. பாதையை உத்தரப்பிரதேச பாஜக அரசு அடையாளம் கண்டுள்ளதாம்.

அயோத்தி முதல் சித்திரக்கூடம் வரையிலான அந்த 210 கி.மீ. காட்டுப் பாதையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மூலம் ரூ. 137 கோடி செலவில் புதிய தார்ச்சாலை அமைக்கவும் உத்தரப்பிரதேச அரசு முடிவு  செய்துள்ளது. இராமாயண இதிகாசக் கதையின்படி,அயோத்தி அரசனாக வரவேண்டிய இராமன், தனது தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக, தனது மனைவி சீதை, சகோதரர் லட்சுமணனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தானாம்.

உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராட்டிரா, கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களின் காடுகளில்தான் அவன் வாசம் செய்தானாம். மத்திய பாஜக அரசும், இந்தப் பகுதிகளைஇராமன் வனவாசப் பாதை (ராம் வன்காமன் மார்க்) என்ற பெயரில், ஆன்மிக சுற்றுலாப் பாதையாக உருவாக்கத் திட்ட மிட்டுள்ளது.

இதனொரு பகுதியாகவே, இராமன் அயோத்தியில் இருந்து புறப்பட்டு முதலில் சென்றடைந்த பகுதி  சித்திரக்கூடம் என்றும், இதனை இணைக்கும் இராமன் வனவாச வழித்தடங்களை .பி. பாஜக அரசு அடையாளம் கண்டுள்ளதாம். அயோத்தியில் தொடங்கி, பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜேத்வாரா, சிருங்கவேர்பூர் உள்ளிட்ட இடங்கள் வழியாக மத்தியப்பிரதேசத்தின் சித்திரக்கூடத்தை சென்றடையும், இந்த 210 கி.மீ. பாதையில், புதிய தார்ச்சாலை அமைக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக மத்திய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் ரூ.137 கோடியே 45 லட்சம் செலவிடப் படவும் உள்ளது.

இராமாயணம் என்பது நடந்த கதையல்ல என்பது வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பாகும்.

"பஞ்ச தந்திரம்", "அராபியன் நைட்" முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றது இராமாயணம் என்பதே என் கருத்து, என்று ஜவகர்லால் நேரு எழுதுகின்றார்.

('டிஸ்கவரி ஆஃப் இந்தியா' பக்.76-77)

இந்த நிலையில் புராண இதிகாசக் கற்பனைகளை மய்யப்படுத்தி ஒரு மத்திய அரசே மக்கள் வரிப் பணத்தைப் பாழாக்குவது சரியா?

இந்தக் கற்பனை இராமன் பாத்திரத்தை முன்னிறுத்தி சேது சமுத்திரத் திட்டமும் முடக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் மக்கள் நலத் திட்டத்தை மதத்தைக் காட்டி முடக்குவது எந்த வகையில் சரியானதாக இருக்க முடியும்?

"இராமன் பாலம் என்ற ஒன்று கிடையாது, உலகின் பல்வேறு கடல் பகுதிகளிலும் காணப்படுவதைப் போன்ற மணல் திட்டே!" என்று 'நாசா' போன்ற ஆய்வு நிறுவனங்கள் கூறியும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது மதவாதத்தைக் கையில் எடுப்பது மக்கள் நல அரசாக,  மதச் சார்பற்ற அரசாக இருக்க முடியுமா?

 

Comments