கரோனாவால் இதய, நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பு அபாயம் அதிகமா?

- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்-

 சென்னை, ஏப்.29 இதய, நீரிழிவு நோயாளிகள் கரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

கரோனா வைரஸ் குறித்து மக்கள் மனதில் எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேள்வி-பதில் வடிவில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா? அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் உடல் மோசம் அடைவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதா?

பதில்:- மற்றவர்களை விட இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இல்லை. தற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட 80 சதவீத பேருக்கு சுவாச பாதிப்பு (காய்ச்சல், தொண்டை வறட்சி, இருமல்) போன்ற மிதமான அறிகுறிகள் ஏற்பட்டு முழுவதும் குணமடைகின்றனர்.

ஆனால் நீரிழிவு, இதய பலவீனம் உள்பட இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படலாம். ஆகையால், இதுபோன்ற நோயாளிகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவை.

மிதமான அறிகுறிகள் ஏற்பட்டாலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் தவறாமல் எடுத்துக்கொள்கிறீர்களா? என்பதை உறுதி செய்யுங்கள். மருத்துவர் அறிவுரையின்றி, எந்த மருந்தையும் நிறுத்த வேண்டாம்.

ஒருவேளை, மருத்துவரை சந்திக்க முடியவில்லை என்றால், உங்களின் ரத்தஅழுத்த, நீரிழிவு மற்றும் இதய நோய் மருந்துகளை தொடருங்கள். கொழுப்பு அளவை கட்டுப்படுத்தும் மருந்துகளும் தொடர வேண்டும்.

கேள்வி:- ரத்த அழுத்த மருந்துகள், தொற்றை அதிகப்படுத்துவதாக கூறப்படும் தகவல்கள் உண்மையா?

பதில்:- கிடைக்கும் தகவல்களை ஆய்வு செய்தபின், விஞ்ஞானிகள் மற்றும் இதய நிபுணர்களின் ஒருமித்த கருத்து இது தான். இரண்டு விதமான மருந்துகள் .சி.. மருந்துகள் (உதாரணத்துக்கு ரமிபிரில், எனலாபிரில் போன்றவை) மற்றும் ஏஆர்பி மருந்துகள் (லோசர்டன், டெல்மிசர்டன் போன்றவை) கரோனா தொற்றை கடுமையாக அதிகரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதய செயல் இழப்புக்கு இந்த மருந்துகள் பயனுள்ளவை மற்றும் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இவற்றை நீங்கள் நிறுத்தினால் ஆபத்தை ஏற்படுத்தலாம். இது உங்கள் இதயத்தின் நிலைமையை மிகவும் மோசமாக்கும்.

கேள்வி:- வலி நிவாரணி அல்லது காய்ச்சல் மாத்திரை இவற்றில் எதை எடுத்துக் கொள்ளலாம்?

பதில்:- இபுபுரொபன்போன்ற வலி நிவாரணிகள் கரோனா பாதிப்பை மோசமாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற மருந்துகள் இதய செயல் இழப்பு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் சிறுநீரக பாதிப்பையும் அதிகரிக்கலாம். எனவே இதுபோன்ற மருந்துகளை தவிர்த்து, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் சாப்பிடுங்கள். தேவைப்பட்டால், பாதுகாப்பான வலி நிவாரணியான பாரசிட்டாமலை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments