கரோனா கொடுந்தொற்றின் எதார்த்த நிலைமையை எடுத்துக்கூறிடும் நீதிபதிகளையும் - மருத்துவர்களையும் - எதிர்க்கட்சித் தலைவர்களையும், சிந்தனையாளர்களையும் ‘நாசகார சக்திகள்' என்பதா?

 ஜனநாயகத்தினை காயப்படுத்திடும் போக்குக்குக் காலம் தக்க பதிலடி தந்தே தீரும்!

நிலைமையின் எதார்த்தத்தை எடுத்து உதவி கோரும் மனிதாபிமானிகளான நீதிபதிகளையும், டாக்டர்களையும், சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சித் தலைவர்களையும், சிந்தனையாளர்களையும் ‘‘நாசகார சக்திகள்''  என்பதா? ஜனநாயகத்தினை காயப்படுத்திடும் இத்தகைய போக்குக்குக் காலம் தக்க பதிலடி தந்தே தீரும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

நம் நாட்டில் கரோனா கொடுந்தொற்றின் இரண்டாம் அலை வீச்சின் கொடுமை கோரத்தாண்டவம் ஆடுகிறது! வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசம் தொடங்கி தலைநகர் டில்லியிலும், கரோனா நோயாளி களுக்குப் போதிய படுக்கை வசதிகள் இல்லை; நோயாளிகளைக் காப்பாற்ற போதுமான அளவு ஆக்சிஜனுக்கு - பிராண வாயு சப்ளைக்குப் பஞ்சம் - மருந்துகளுக்கும் பற்றாக்குறை - ஆம்புலன்சுகள்கூட சரிவரக் கிடைக்காமல் சில மாநிலங்களில் நோயாளிகள் அவதியுறும் நிலை! நோயால் மரணித்தவர்களையும் அவரவர் தங்கள் வாகனங்களில் எடுத்துச் சென்று எரியூட்டும் துயரத்தின் உச்சமான நிலை!

உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கேள்வி!

இவற்றைக் கண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘‘எப்படியாவது பிச்சை எடுப்பீர்களோ, திருடுவீர்களோ தெரியாது (‘‘Borrow or Steal'') - ஆக்சிஜனைக் கொண்டு வந்து நோயாளிகளை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள்'' என்று கதறிடும் ஆணைகளை வழங்குகிறார்கள்!

‘‘கடந்த ஓராண்டாக என்ன செய்தது, ஏன் போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை மத்திய அரசு?'' என்று சென்னை உயர்நீதிமன்றமும், டில்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் மத்திய அரசை நோக்கி கேள்விகளை எழுப்பியுள்ளன.

‘‘உச்சநீதிமன்றம் நாங்கள் இந்த நிலையை வெறுமனே வேடிக்கை பார்க்க முடியாது. எங்கள் கடமையை ஆற்றும் வகையில் தலையிட்டு கேட்கத்தான் வேண் டும்'' என்ற கருத்தடங்கிய கேள்விகளை முன்வைக்கிறது!

தனது இயலாமை, முயலாமையை மறைத்துக் கொள்ளத் துடிக்கிறது மத்திய அரசு!

உத்தரப்பிரதேச  பா... அரசு, ஆக்சிஜன் பற்றாக் குறை என்று எந்த மருத்துவர் சொன்னாலும் அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவர் களையே அச்சுறுத்தி அடக்குமுறையை ஏவி, தனது இயலாமை, முயலாமையை மறைத்துக் கொள்ளத் துடிக்கிறது!

ஏடுகளோ, செய்தியாளர்களோ இதுபற்றிப் பேசினால் அவர்கள்மீது அடக்குமுறைகளும், கருப்புச் சட்டங் களும் ஏவிவிடும் கொடுமை! ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகச் சுதந்திரத்தையே கேள்விக்குள்ளாக் கியுள்ளது!

இவ்வளவு கோரத் தாண்டவத்திலும், உத்தரப்பிரதேச  மேனாள் முதல்வரும், இந்நாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு, ‘‘துளசிதாஸ் இராமாயணத்தில் உள்ளஇராம நாமாவளி' பாடினால், கரோனா பறந்தோடிவிடும்'' என்று கூறி, ரோம் நகரம் பற்றி எரியும் நேரத்தில், பிடில் வாசிக்கச் சொன்ன நீரோ மன்னர்களையும் தோற்கடிக்கும் வேதனை மிகுந்த காட்சிகள் பத்திரிகைகளில் வருகின்றன!

பெருந்தொற்றுப் பரவிட வாய்ப்பை ஏற்படுத்திய கொடுமையைப்பற்றி என்ன சொல்வது?

உத்தரகாண்ட் பகுதியில்  பல லட்சம் பேர் கூடும் கும்பமேளா குளியல்மூலம் கரோனா தொற்றுப் பரவிய நிலையும், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், பா... - அதன் தலைவர்கள் பிரச்சாரத்தினையும், ‘வித்தை'களையும் செய்வதற்காக 294 தொகுதிகளுக்கு ஒரு மாத காலத்திற்கு மேலாக 8 கட்டமாக தேர்தல் நடத்தியும் - அங்குள்ள முதலமைச்சர் உள்பட பலரும் வேண்டுகோள் விடுத்தும் - அதை மாற்றாமல் பிடிவாத மாக நடத்தி, பெருந்தொற்றுப் பரவிட வாய்ப்பை ஏற்படுத்திய கொடுமையைப்பற்றி என்ன சொல்வது?

உலக நாடுகளிலும், ஏடுகளிலும் இந்தியாபற்றிய அவலச் செய்திகள் அனுதாபத்தை ஏற்படுத்தி, அவசர உதவிக்குத் தயார் என்ற மனிதாபிமான வெளிச்சங்கள் நம் நாட்டுக்கு உதவிட, நம்மீது விழுவது ஆறுதலைத் தருகிறது என்றாலும், அதிலுள்ள கசப்பான உண்மை நம் நாட்டு அரசுகள் சரி வர எதிர்கொண்டு தடுக்கத் தவறிய அலட்சியத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டு வதல்லவா?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புதிய பொதுச்செயலாளரின் அறிக்கை!

இந்த எதார்த்த நிலையிலிருந்து மீள வழிகாண வேண்டிய நேரத்தில், மத்திய அரசை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புதிய பொதுச்செயலாளர் - பெரிய தத்துவ கருத்தாளர் (Ideologue) தத்தாத்ரேயா ஹோசபலே என்பவர் 24.4.2021 அன்று ஓர் அறிக்கை வெளியிடுகிறார்!

‘‘தேச விரோத சக்திகள், கரோனாவினால் ஏற்பட் டுள்ள மோசமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, நாட்டில் அவநம்பிக்கையையும், அரசாங்கத்துக்கு எதிரான மனநிலையையும் உருவாக்கி விடுவார்கள். எனவே, நாமும் (ஆர்.எஸ்.எஸ். விசுவாசிகளும்), ஊடகங்களும் சேர்ந்து அழிவு சக்திகளின் நாசகாரத் திட்டங்கள்மீது கவனமாக இருக்கவேண்டும்'' என்று கூறுகிறார்.

இதன் மறைமுகமான - ஆழமானப் பொருள் புரிகிறதா? நிலைமையின் எதார்த்தத்தை எடுத்து உதவி கோரும் மனிதாபிமானிகளான நீதிபதிகளும், டாக்டர் களும், சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சித் தலைவர்களும், சிந்தனையாளர்களும் ‘‘நாசகார சக்திகளா?''

இந்த ‘‘தேச பக்த திலகங்களின்'' கூற்று ஏற்கத்தக்கதா?

எனவேதான், இந்த நேரத்தில் - ஆறுதலும், சிகிச்சை யின் விரைவினையும் வேகப்படுத்திட வேண்டிய நேரத்தில், இப்படி ஒரு விசித்திரமான அறிக்கைகளைக் கொடுத்தால், நிலைமை மாறிவிடுமா?

அச்சுறுத்தலும், அடக்குமுறைகளும் அதற்குரிய பரிகாரங்களாக முடியுமா?

‘‘வளர்ச்சி, வளர்ச்சி'' என்ற கூக்குரலிட்டு, ஆட்சியைப் பிடித்தவர்களின் ‘‘வளர்ச்சி எதில் அடங்கியிருக்கிறது'' என்பதை இந்தியா மட்டுமல்ல, உலகமே புரிந்துள்ள நிலையில், ‘வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது போல்' இல்லையா!

மிரட்டல் அறிக்கைகளும் - அச்சுறுத்தல்களும் ஒருபோதும் பயன்படாது!

ஆக்கப் பணிகளுக்கு அரசை முடுக்கிவிட இப்படிப்பட்ட மிரட்டல் அறிக்கைகளும், ‘தேச விரோத' அச்சுறுத்தல் பூச்சாண்டிகளும் ஒருபோதும் பயன்படாது!

மனித விரோத அணுகுமுறைகளுக்கு முடிவு கட்ட முனையாமல், ஏன் இப்படிப்பட்ட வக்கணை அறிக்கைகள்?

ஜனநாயகத்தினை காயப்படுத்திடும் இத்தகைய போக்குக்குக் காலம் தக்க பதிலடி தந்தே தீரும்.


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

30.4.2021

Comments