மீன்பிடித் தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டும்

கே.எஸ். அழகிரி கோரிக்கை

சென்னை, ஏப்.13 மீன்பிடித் தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (12.4.2021) வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983 விதி களின்படி, ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத் தப்படுகிறது. குறிப்பாக, தமிழ கத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் தொடங்கி, கன்னி யாகுமரி மாவட்டம் கோவளம் வரை உள்ள மீனவ கிராமங்களில் இருந்து படகுகள் மூலம் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக் கத்திற்காக கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மீன்பிடித் தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கரோனா தொற்று காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வில்லை. அதைத் தொடர்ந்து, மீன்பிடித் தடைக் காலத்திலும் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வில்லை. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 135 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வில்லை. இதனைக் கருத்தில் கொண்டு நடப்பு 2021ஆம் ஆண்டு மீன்பிடித் தடைக் காலத்தை 61 நாட்களிலிருந்து 45 நாட்களாகக் குறைத்து அறிவிக்க வேண்டும்.

இந்த மீன்பிடித் தடைக்காலம் பொருத்தமற்ற நேரத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமல் படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடித் தடைக்காலமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை என்பதற்கு பதிலாக, அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை என மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments