கரோனா பாதித்தோர் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு!

புதுடில்லி,ஏப்.13- பீகாரைச் சேர்ந்த சகோதரர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இவர்களது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது.

பீகாரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவரான அர்பித் குமார், அவரது சகோதரர் 10ஆம் வகுப்பு படிக்கும் அபிஜீத் குமாரும் இணைந்து கரோனா பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் கண்டுபிடித்த கருவியின் பெயர் சிடிடிஎம். இந்த கருவியைக் கண்டுபிடிக்கக் கடந்த வருடம் மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை இவர்கள் கடின உழைப்பு செலுத்தி உள்ளனர்.

சமூகநிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு பீகார் அரசு சார்பில் பால பவன் கில்காரி நடத்தப்படுகிறது. சகோதரர்கள் அர்பித் குமார், அபிஜீத் குமாரின் திறமையை ஊக்கு விக்கும் வகையில் பால பவன் கில்காரி அவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. மேலும் கில்காரி உதவியுடன் இவர்கள் கண்டுபிடிப்பை மத்திய அரசின் காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் பஞ்சாபின், மொகாலி பகுதியில் உள்ள காப்புரிமை அலுவலகம், இவர்களது கண்டுபிடிப்புக்கு மார்ச் 4ஆம் தேதி சான்றிதழ் வழங்கி உள்ளது.

கூடிய விரைவில் வணிக ரீதியான விற்பனையை மேற்கொள்ள, பீகாரைச் சேர்ந்த நிறுவனங்களிடம், இக்கருவியைத் தயாரிக்கும் பணிகள் தொடர்பாக இச்சகோதரர்கள் பேசி வருகின்றனர். இந்த கருவியானது பாண்டேஜ் வடிவத்தில் இருக்கும். இதை நாம் அணிந்திருக்கும் ஆடையில் பொருத்திக்கொள்ள முடியும். கரோனா பாதிக்கப்பட்டவர்கள் அருகிலிருந்தால், இந்தக் கருவி சம்பந்தப்பட்ட நபரை எச்சரிக்கும். மேலும் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் சென்றால், கரோனா தொற்று ஏற்படும் அபாயம் எப்போது அதிகரிக்கிறது என்பதை நமக்குக் கணித்துச் சொல்லும். இந்த கருவியானது உடலின் வெப்பநிலையைக் கணக்கிட்டு, மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் தகவலைக் கடத்துகிறது. தற்போது இந்த கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.

Comments