கரோனா காலத்தில் கும்பமேளாவா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

கரோனா காலத்தில் கும்பமேளாவா?

உத்தரகாண்ட் மாநிலத்தின் அரித்துவாரில்,கும்பமேளா நிகழ்வையொட்டி, 'புனிதக்குளியல்' எனப்படும் நிகழ்வு அமாவாசை நாளான 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற்றது

கரோனா பரவல் அச்சமூட்டிவரும் நிலையில்தான் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த கும்பமேளா கூடலில், மொத்தம் 3 'புனிதக் குளியல் நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 'புனிதக்குளியல்' நிகழ்வு, கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. அதனையடுத்து, இரண்டாவது நிகழ்வு இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெற்றுள்ளது. அதேசமயம், மூன்றாவது நிகழ்வு, ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான, 13 அகடாகளின் ஊர்வலங்கள், நெடுஞ்சாலைகள் வழியாக நடைபெறும் என்றும், எனவே, அந்த வழிகளில் போக்குவரத்து நடைபெறாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா காலத்தில் மதவிழா என்ற போர்வையில் நடக்கும் இந்த நிகழ்வால் தொற்று பரவாதா என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்சில நூறு பேருக்கு தொற்று ஏற்படும். ஆனால் "புனிதக்குளியல்" போடுவதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்" என்று பதில் கூறியிருந்தார்.

2019ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவினால்  15 ஆயிரம் டன் மனிதக்கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் இருந்து அந்நகரின் நிலத்தடி நீரை அந்தக் கழிவுகள் மாசுபடுத்திவிட்டன.  இதன் கரணமாக காலரா உள்ளிட்ட நோய் தொற்று அந்நகரை தொடர்ந்து ஆட்கொண்டது.

 கடந்த 40 ஆண்டுகளில் கும்பமேளா முடிந்த பிறகு நீர் மாசு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதன் மூலம் தொற்றுநோய்கள் பரவி வந்துள்ளன என்பது சுகாதார அமைப்புகளின் புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்தது.

2016-ஆம் ஆண்டில், கும்ப கோணத்தில், மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டால் 12 வருட பாவங்களும் பறந்தே போகும் என்ற நம்பிக்கையில் பல லட்சம் மக்கள் முழுக்குப் போட்டார்கள்.

மகாமகம் முடிந்த பிறகு மகாமகக் குளத்து நீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.இதனை அடுத்து நீரியல் வளத்துறை, மகாமகம் நடந்த குளத்தில் இருந்து நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியது. ஆய்வின் முடிவில் குளத்து நீர் மிக அதிக அளவு மாசடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக 28 விழுக்காடு மலக்கழிவும், 40 விழுக்காடு சிறுநீர்க் கழிவும் இருந்தன. குளத்தைப் பாதுகாக்கும்  பணியில் இருந்த 25,000 காவல்துறையினரின் உடல் நலம் குறித்த ஆய்வறிக்கையில், பல காவல் துறையினருக்கு தொண்டை கரகரப்பு மற்றும் தோல் அரிப்பு தொடர்பான வியாதிகள் தொற்றியுள்ளன என தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் குளத்து நீரில் பல மணிநேரம் நின்று மக்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்தி யுள்ளனர். இது குறித்து பாதுகாப்பிற்கு நின்ற காவலர் ஒருவர், குளத்து நீரில் பலமணிநேரம் நின்ற காரணத்தால் கால் அரிப்பு மற்றும் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுவிட்டன என்று கூறினார்.

விநாடிக்குக் குறைந்தபட்சம் 75 லிட்டர் தண்ணீர் வெளியேறும்படி ஏற்பாடுகள் செய்திருந்தாலும் குளத்தில் குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதும், தண்ணீரின் ஓட்டம் தடைபட்டது, மேலும் குறைந்த அளவு ஆழம் கொண்ட இடத்தில் தண்ணீரின் ஓட்டம் அறவே நின்றுவிட்டதால் குளத்தின் தூய்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடியவில்லை. மேலும் ஆடைகளில் உள்ள நிறமூட்டி வேதிப்பொருள்கள் தண்ணீரில் கலந்த காரணத்தால் நீர் அதிகமாக மாசு அடைந்துள்ளது, எனவும் தெரியவந்துள்ளது.

.கோலி என்பது எசரிக்கியா கோலி என்பதன் சுருக்கமாகும். இவ்வகை பாக்டீரியாக்கள் மனிதக் குடலில் வாழ்கின்றன. இவை எண்ணிக்கையில் அதிகமாகும்பொழுது குடல்புண் மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்படுகின்றன. முக்கியமாக 157:எச்7 போன்ற பாக்டீரியாக்கள் மனிதன் உண்ணும் உணவை நச்சாக்கி மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோயில் மற்றும் மத விழாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் வடக்கே கும்பமேளாவுக்கு மத்திய சுகாதார அமைச்சராக இருக்கக் கூடியவரே, கும்பமேளாவில் குளிக்கும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறார்.

இதன் மூலம் மக்களுக்கு ஏற்பட உள்ள பெரும் பாதிப்புக்கு இவர் பொறுப்பேற்க வேண்டி வரும். சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவ விஞ்ஞானத்துக்கு எதிராகப் பேசுவது வெட்கக்கேடு! மதம் மனித அறிவை எப்படி நாசப்படுத்துகிறது என்பதற்கு ஒரு சுகாதார அமைச்சரே சாட்சியமாகும்.

No comments:

Post a Comment