கருஞ்சட்டைக் கவிஞன்!

கவிச்சக்ரவர்த்திகள்

தோன்றலாம்

மகா கவிகளும்

பிறக்கலாம்!

புரட்சிக்கவிஞன் என்பான்

நீ ஒருவன் மட்டுமே!

உன் தோற்றப் பொலிவே

சனாதன மலைகளை

தோல்விப் பள்ளத் தாக்கில்

குடை சாய்த்து முடிக்கும்

சமத்துவ சமதர்மக் கொடியை

செகத்தினிலே உயர்த்திப் பிடிக்கும்!

மயிலாடுதுறையில்

ஒரு கிழவனின்

மலை முழக்கம் - உன்

மனக் கழனியில் - புது

இரசாயன விதையை

ஊன்றியது!

உன் சிந்தனை வானிலோ

புதியஞானஒளி' தோன்றியது!

கிடைத்தது கருப்பொருள் - என்

கவிதை மூச்சுக்கென்று

துள்ளிக் குதித்தாய்

தேன் பருகி சிரித்தாய்!

உன் மிதியடியில்

பழைமைவாதங்கள்

மூச்சு இறைக்க ஓடின!

மூடக் காடுகளும் எரிந்தன!

கருஞ்சட்டைக் கவிஞன் நீ,

கழகக் கொடி ஏந்தியவன் நீ,

கலகக்காரர் பெரியாரின்

கைவாளும் நீயே, நீயே!

வாழிய வாழியவே

வளமார் திராவிடத் தத்துவம்

வெல்க வெல்க, வெல்கவே!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

Comments