தடுப்பூசியின் அவசியமும் - தேவையும்

 எதிர்க்கட்சி ஆட்சி செலுத்தும் மாநிலங்களில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதை மத்திய பாஜக அரசு கண்டுக் கொள்ளவில்லை என புகார் கூறப்படுகிறது.

தற்போது கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது.  குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அதை மத்திய மோடி அரசு கண்டுக் கொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இதையொட்டி பிரபல செய்தி ஊடகமான 'நேஷனல் ஹெரால்ட்' ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில் அரசியல் கட்சிகள் கரோனாவை வைத்து இந்தியாவில் அரசியல் விளையாட்டு விளையாட வேண்டுமா? ஆனால் கடந்த சில நாட்களில் ஒரு ஆபத்தான இரண்டாவது அலை நாட்டைத் தாக்கும்போது தடுப்பூசிகள் வழங்குவதில் அது தான் நடக்கிறது.  இந்த நிகழ்வு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கும் மோடி அரசாங்கத்திற்கும் இடையில் அதிக அளவு தடுப்பூசிகளுக்கான போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கை அரசாங்கம் தவறாகக் கையாண்டதா என்பது கேள்விக்குறியாக இருந்தது.  மேலும் ஊரடங்கு என்பது ஒரு அரசியல் பிரச்சினையாக மாறவில்லை.  மேலும் மோடி அரசை எதிர்க்கட்சிகளால் கூட ஒரு எல்லைக்கு மேல் விமர்சிக்க முடியவில்லை.

தற்போது, ​​ஒரு ஆண்டு கழித்து, கரோனா அதன் இரண்டாவது அலையைத் தொடங்கிய போது அரசியல் தலை தூக்கி உள்ளது நன்கு தெரிய வந்துள்ளது. அதாவது, ​​அதிகாரிகளின் தரப்பு செய்திகள் மூலம் தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் தவறான கணக்கீடுகள் வெளி வருகின்றன.  கரோனா இரண்டாவது அலை ஏழு மாநிலங்களைப் பாதித்துள்ளது,  இதற்கு மேலும் கூட மாநிலங்கள் பாதிக்கப்படலாம். தற்போதைய நெருக்கடி அதை நோக்கித்தான் நகர்கிறது.

இதில் எதேனும் தவறு நடந்தால், மய்ய அரசு மாநில அரசுகளை குற்றம் சாட்டுகிறது,   அதே வேளையில் தேவையான அளவு தடுப்பூசிகள் வழங்காததற்கு மாநிலங்கள் மத்திய அரசைக் குற்றம் சாட்டுகின்றன.    தடுப்பூசிக்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.   முதலில் தடுப்பூசி போட தயங்கினர்.  ஆனால் இப்போது தடுப்பூசிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றை கையாள்வதில் மக்களின் மீட்பர் என்று பாஜக மோடியைக் கூறுகின்றது.  ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் தாங்கள் தான் சிகிச்சை அளிக்கிறோம் என கூறியுள்ளனர்.

சமீபத்தில் காங்கிரஸ் முதல்வர்கள் மத்தியில்  உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 'கோவிட்' கொள்கைக்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். கரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நிலையில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதன் மூலம்தொற்று அதிகரிப்பை குறைக்க முடியாமல் மோடி அரசு உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில், பிரச்சினைகளை கூறுவதும் அரசியல் தந்திரங்களிலிருந்து விலகி மக்களின் நலனுக்காக செயல்பட அரசாங்கத்தை தள்ளுவதும் தங்கள் பொறுப்பு  எனவும் கூறினார்.

தற்போதைய கரோனா பரவலில் மகாராட்டிரா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.  சென்ற ஏப்ரல் 8ஆம் தேதி நிலவரப்படி, 2.4 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தவிர 1.9 கோடி தடுப்பூசிகள் கிடைக்க உள்ளன. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் கிடைத்த தகவல்களின்படி, தினசரி 33.5 லட்சம் தடுப்பூசித் தேவை உள்ளது.

இந்தியாவில் முதல் அலையைத் திறம்பட சமாளிப்பதில் மக்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கியபோது இரண்டாவது அலை வந்தது, மேலும் அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் கும்ப மேளா போன்ற நிகழ்வுகளும் இந்த காலகட்டத்தில் நடைபெறுகின்றன.  

சென்ற மார்ச் மாதம் 7ஆம் தேதி  அன்று, சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ‘நாம் கரோனா போராட்டத்தில் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம்என்று  கூறினார். ஆனால் நடப்புகள் வேறு மாதிரியாக உள்ளன. 

கரோனா தொற்றின் போது மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன? இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதே தற்போதைய கேள்வி ஆகும். இனியாவது மோடி அரசு தேவையான அளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகித்து எதிர்க்கட்சி முதல்வர்களின் கவலைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

Comments