மதவாதம், பிரிவினைவாதத்துக்கு மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள் நாராயணசாமி நம்பிக்கை

புதுச்சேரி, ஏப்.5 புதுச்சேரி மக்கள் மதவாதம், பிரிவினை வாதத்துக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என்று மேனாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் கடந்த 2016 முதல் அரசு பணியிடங்களை நிரப்பவில்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேசி வருகிறார். எங்கள் ஆட்சியில் மருத்துவம், பொதுப்பணித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் பணிநியமனம் செய்துள்ளோம். மின்துறையில் பணிநியமனத்துக்கு நடவடிக்கை எடுத்தோம்.

அரசுத்துறைகளில் பல பதவிகளை நிரப்பியதற்கு ஆதாரம் உள்ளது. புதிய தொழிற்கொள்கை கொண்டுவந்தபின் சிறிய, நடுத்தர தொழிற்சாலைகள் வந்தன. 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது. ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்ததாக கூறியுள்ளார். அவர் தினக்கூலி ஊழியராக வேலை கொடுத்தார். அவர்களில் பலரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டதுதான் சரித்திரம்.

புதுவையில் மீண்டும் காங்கிரஸ்-தி.மு.. கூட்டணி ஆட்சி வந்ததும் அரசு பணிக்கான வயது உச்சவரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு கொடுப்போம். அதன்மூலம் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். காவல்துறை பணிகளை நிரப்ப முயற்சி எடுத்தபோது ஆளுநர் தடுத்து நிறுத்தினார்.

அப்போது ரங்கசாமி வாய்மூடி இருந்தது ஏன்? இப்போது வேலைவாய்ப்புப்பற்றி பேசுகிறார். காவல்துறையில் பணியிடங்களை நிரப்ப நாங்கள் நடவடிக்கை எடுத்தது இளைஞர்களுக்கு தெரியும்.

காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் கற்பிக்க பா..., என்.ஆர்.காங்கிரஸ் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. புதுவை மக்கள் மதவாதம், பிரிவினைவாதத்துக்கு இடம் கொடுக்கமாட்டார்கள். அமைதியை விரும்புபவர்கள் புதுவை மக்கள். பா... வந்தால் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே அவர்களது ஆசை வார்த்தைகளை நம்பிவிடக்கூடாது. அவர்கள் அதிகாரபலம், பண பலத்தை கொண்டு மிரட்டுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது.

 இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

Comments