ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 24, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1:    சாலைகளுக்கு வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கல்வி வள்ளல் காமராஜர் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டதிற்குப் பிறகு தற்போது ரிப்பன் மாளிகையில் வைக்கப்பட்டிருந்ததமிழ் வாழ்கஎன்ற வாசகம் நீக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அராஜகச் செயலைச் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

- எஸ். பூபாலன், திண்டிவனம்.

பதில்: சென்னை மாநகராட்சி மாளிகையில் வைக்கப்பட்டிருந்ததமிழ் வாழ்கவாசகங்கள் ஏனோ மறைந்தன! நமது தமிழ்நாட்டினை வளர்த்த மூத்த தலைவர்கள் பெயர்கள் சாலைகளிலும், விமான நிலையங்களிலும்  அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டவை மாறுகின்றன!

இவைகளுக்கு இன்றுள்ளகாபந்துசர்க்கார் எந்த பதிலையும் அளிக்காததிலிருந்து குற்ற உணர்வும், தந்த ஒப்புதலும் தெளிவாகிறது! குற்றம் புரிந்தவர் மக்கள் மன்றத்தின் முன் மண்டியிடும் காலம் நெருங்குகிறது என்பது வெள்ளிடை மலை.

கேள்வி -2:  சடங்கு சம்பிரதாயம் போன்றவற்றை மூட நம்பிக்கை என்று நாம் புறந்தள்ளினாலும் அதில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்களைக் கூட சிந்திக்க வைக்கும் வகையில், மறைந்த திரைப்பட நடிகர் சின்னக் கலைவாணர் விவேகின் இறுதி நிகழ்ச்சியில், ஆண் வாரிசுகளுக்கு மட்டும் உரியது என கூறப்படும் அந்த சடங்கு, சம்பிரதாயங்களை, அவரது பெண் பிள்ளை செய்திருப்பதைப் பற்றி?

- மன்னை சித்து, மன்னார்குடி - 1.

பதில்: மிகவும் பாராட்டி பகுத்தறிவாளர்களால் வரவேற்கப்படக் கூடியது. மறைந்த ஜெயலலிதா அவர்களது இறுதிச் சடங்கினை திருமதி சசிகலா - நடத்தியதும், புதைத்ததும் சனாதனம் தோல்விப் பயணத்தில் இருப்பதை பக்தர்களால் கூடத் தவிர்க்க இயலாது என்பதையே காட்டுகிறது!

பெண்ணுரிமை - சமத்துவம் சொத்தில் மட்டுமல்ல. இறுதிச் சடங்கிலும் செயல்வடிவம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது!

கேள்வி -3:    இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டில்லியில் அதிகரிக்கும் கரோனாவால்  மருத்துவமனைகளில் நோயாளி களுக்குப் போதிய ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாமல் திண்டாடி வருவது கவலை அளிப்பதாக உள்ளதே!                                 

- புத்தன், பூவிருந்தவல்லி.

பதில்: நமக்கும், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் கவலை அளிக்கிறது. ஆனால் மத்தியில் ஆள்வோருக்கு மிகப்பெரிய கேள்விக்குறி இது.

கேள்வி -4:     தேர்தல் முடிந்த பிறகு ஓட்டுப்பெட்டி வைத்திருக்கும் இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக சில சம்பவங்கள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இதை தேர்தல் ஆணையம் கண்டுக்கொள்ளவில்லையே ஏன்?

- காரை.புரட்சிமணி, புகைப்படக்கலைஞர்.

பதில்: நாடு முழுவதும் எதிரொலிக்கும் கேள்வி தான் இது! விடை மே 2இல் தெரியவரும். பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லையே!

கேள்வி -5:  நியூசிலாந்து நாட்டில் 2025 ஆம் ஆண்டுக்குள் புகைப் பிடிக்கும் வழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்குடன் 2004 ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது என்று தடைவிதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதை கையொலி எழுப்பி வரவேற்கலாம்தானே!

- வீரவேல், வேளச்சேரி.

பதில்: வரவேற்கலாம் என்பது மட்டுமா? நம்நாட்டிலும் அத்தகு சட்டம் வர மக்கள் மன்றத்தை ஆயத்தப்படுத்த அரசுக்கு அழுத்தம் தர பொது இயக்கம் ஒன்றைக் கட்டலாமே!

கேள்வி -6: பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் நியமனம் தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் கிரிஜா வைத்தியநாதனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் முதலில் தடை விதித்தது. பிறகு நான்கே நாள்களில் தடையை நீக்கி உத்தரவு!  இது  எப்படி சாத்தியம் ஆனது?

- . அருள், மேட்டுக்குப்பம்.

பதில்: நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டது எப்போது அவிழ்த்து விடப்பட்டதோ நமக்குத் தெரியாது!

கேள்வி-7: நீதிமன்றத்தில் ஊழல் பெருகிவிட்டதாக நீதிபதிகளே வேதனை தெரிவித்திருக்கும் நிலையில், நீதி என்பது சாமானிய மக்களுக்கு எப்படி கிட்டும்?

- கு.இராஜேஸ்வரி, கடப்பாக்கம்.

பதில்: இந்த மில்லியன் டாலர் கேள்விக்கான விடை - மக்கள் கையில் தான் உள்ளது! இன்னமும் 25 விழுக்காடு மக்கள் வாக்குச்சாவடிப் பக்கமே கூட வர மறுக்கும் நிலையில் எப்படி விழிப்புணர்வு வரும்?

கேள்வி -8:    தமிழகத்தை மூன்றாக பிரிக்க நினைப்பவர் களின் உள்நோக்கம் என்ன?

- சு.அறிவன், வீராக்கன்

பதில்: முதல் அமைச்சர் கனவு, கனவில் மிதக்கும் கனவான்களது கற்பனை மந்திரிசபைக் கனவு. அஜீரணம் அதிகம் ஏற்பட்டால் கனவுகள் வருமாம்!

கேள்வி-9:    உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக நிறுவனங்களும் சுதந்திரத் தன்மை இழந்துவரும் நிலையில் தற்போது லெனின் கூறிய புரட்சி இந்தியாவில் சாத்தியமா?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: 7ம் கேள்விக்கான பதிலை -  மீண்டும் படியுங்கள்.

கேள்வி-10:    வேறு ஜாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டால் பெற்றோரால் ஆணவப்படுகொலை செய்யப்படுவதும், திருமணம் செய்ய மறுத்தால் காதலித்த இளைஞரால் படுகொலை செய்யப்படுவதும் பெண்களின் நிலையாக இந்த நூற்றாண்டிலும் அரங்கேறுகின்றனவே - இதற்கு என்னதான் தீர்வு?

- அயன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி

பதில்: பகுத்தறிவுப் பிரச்சாரம்!  அறிவுத் தெளிவும், பகுத்தறிவும் பெற்றால் இவை ஒழியும். சட்டத்தை விட சமூகத்தை மாற்றும் தீவிரப் பிரச்சாரமே ஒரே வழி!

No comments:

Post a Comment