பேரண்டத்தின் மீது பேராவல் கொண்ட வானியற்பியலாளர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1965இல் பிறந்த ஆண்ட்ரியா கெஸ், வானியற்பியலாளர், வானியல் - இயற்பியல் பேராசிரியர்.

பால்வீதியின் நடுவில் நாற்பது லட்சம் சூரியன்களின் எடைகொண்ட கருந்துளை இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததற்காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயற்பியலில் நோபல் பரிசு பெறும் நான்காம் பெண் இவர். ஆரம்பத்தில் கணிதத்தை முதன்மைப் பாடமாகப் படித்த இவரது பார்வை, பின்னாளில் இயற்பியல் துறை மீது திரும்பியது. 1987-இல் மசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்ற இவர், 1992இல் முனைவர் பட்டம் பெற்றார்.

நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியை அதிநவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்ததற்காக இவர் போற்றப்பட்டார். பேரண்டத்தின் மய்யப்பகுதியின் பண்புகளைக் கண்டறியும் நோக்குடன் நட்சத்திரங்களுக்கு இடையிலான செயல்பாட்டைக் கண்டறிந்ததில், இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

பேரண்டத்தின் மீது எனக்குக் கட்டுக் கடங்காத பேராவல் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் நான் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள். ஒவ்வொரு முறை தொலைநோக்கியால் பார்க்கும்போது நான் ஆச்சரியமடைவேன். நம்மால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கும்வரை நிச்சயம் அதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்யும் என்கிறார் ஆன்ட்ரியா கெஸ்.

Comments