கரோனா பரிசோதனைகளின் சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 8, 2021

கரோனா பரிசோதனைகளின் சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்

 மாநில அரசுகளுக்கு  பரிந்துரை

புதுடில்லி, ஏப்.8 கரோனா பரிசோதனைகளின் சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் பரிந்துரைத்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு வந்த கரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதன்மூலம் கரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3ஆவது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் கரோனா பரவல் அதிகம் உள்ள முதல் 10 மாவட்டங்களில், ஏழு மாவட்டங்கள் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவை என்றும், மற்ற மூன்றும் கருநாடகா, சத்தீஸ்கர் மற்றும் டில்லி மாநிலங்களைச் சேர்ந்தவை என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள், தடுப்பூசியை எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் சத்தீஸ்கரில் நோய் பரவல் அதிகரித்து வருவதாக தெரிவித்த ராஜேஷ் பூஷண், ஆர்டி பி.சி.ஆர் சோதனைகளின் சதவீதத்தை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளார்.

முன்பதிவு செய்தால் மட்டுமே புற நோயாளிகளுக்கு சிகிச்சை: ஜிப்மர் மருத்துவமனை

புதுச்சேரி, ஏப்.8 கரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்பதிவு செய்தால் மட்டுமே புற நோயாளிகளுக்கு சிகிச்சை யளிக்கப்படும் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவிட் நோய் தொற்று மிக வேகமாக பரவி வரும் வேளையில், மருத்துவமனை வளாகங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது தவிர்க்க இயலாததாகும்.

கோவிட் தொற்று மருத்துவமனை மூலம் பரவுவதை தவிர்க்க, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 9ஆம் தேதி முதல் அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன்பதிவு செய்து தொலை மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழங்கப்படும் என்றும், வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன்பதிவு பெற வேண்டியது கட்டாயம் என்றும், மருத்துவமனையில் அனைத்து அவசர சேவைகள், எப்பெழுதும் போல எந்த முன் பதிவும் இன்றி தொடரும். இதற்கான தொலைபேசி எண்கள் பற்றிய விவரங்களை  ஜிப்மர் இணையதளத்தில் பெறலாம். பொதுமக்கள் `ஹலோ ஜிப்மர்எனப்படும் ஆண்ட்ராய்டு செயலியின் உதவியுடனும் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு, முன் பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணில் மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேவைப்படுவர்களுக்கு மட்டும் மருத்துவமனைக்கு வருவதற்கான குறுஞ்செய்தி அனுப்பி வைப்பார்.நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் நூறு நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். கோவிட் தொற்று மருத்துவ மனை மூலம் பரவுவதை தவிர்க்க ஜிப்மர் மருத்துவமனையின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment