72.78% வாக்களிப்பு: ஒரு பார்வை!

தமிழ்நாடு 16ஆம் சட்டப் பேரவைத் தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு மாதமாக மக்களின் கவனம் எல்லாம் இதனை மய்யப்படுத்தியே சுழன்று வந்திருக்கிறது.

தலைவர்களின் பிரச்சாரங்கள் ஒரு பக்கம்; கட்சித் தொண்டர்களின் களப் பணிகள் இன்னொரு பக்கம் என்று கிடுகிடுத்தன. தேர்தல் அரசியலில் ஈடுபடாத திராவிடர் கழகத்தின் தலைவரின் சூறாவளி சுற்றுப் பயணமும், பிரச்சாரமும் தனித்தன்மையானவை.

தமிழ்நாட்டில் பா... (ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவம்) என்ற மதவாத அமைப்பு எந்த வகையிலும்  கால் ஊன்றிடக் கூடாது - அண்ணா பெயரில் உள்ள ஆளும் கட்சியான ...தி.மு.. அந்த மதவாதக் கட்சிக்கு அடிமைச் சேவகம் புரிந்துள்ளது. இந்த இரண்டையும் முன்னிலைப்படுத்தி திராவிடர் கழகத் தலைவர் முக்கியப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டார் - வழக்கம் போலவே தக்க ஆதாரங்களுடன்.

இந்த இரு கட்சிகளும், இவற்றின் கூட்டணிக் கட்சிகளும் முறியடிக்கப்பட வேண்டும்; தி.மு.. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்கான விளக்கமாகவும் அவர் உரை அமைந்திருந்தது.

திராவிடர் கழகத்தின் சார்பில், "திமுக கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்! பா... - அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்!! ஏன்"  என்ற தலைப்பில் 56 பக்கங்களைக் கொண்ட நூல் தேர்தல் களத்தில் முக்கிய பங்கை வகித்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 10 ஆண்டு காலம் அஇஅதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் அதன் சாதனைகள் என்பதைவிட வேதனைகளும், இழப்புகளும்தான் அதிகம்.

மடியில் அதிக கனம் இருக்கும் காரணத்தால் மத்தியில் உள்ள மதவெறி பாசிச பா... ஆட்சியின் "கோலுக்கு ஆடும் குரங்குக் குட்டியாகி விட்டது" ...தி.மு.. ஆட்சி.

மத்திய பா... அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் - சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி...) - புதிய கல்விதிட்டம் - சமூகநீதிக்கு எதிரான சட்டங்கள் - நடவடிக்கைகள் அனைத்திற்கும் 'ஆமாம் சாமி?' போடும் ஆட்சியாக மாறி விட்டது ...தி.மு.. ஆட்சி!

உச்சக் கட்டமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெளி மாநிலத்தவர்களும் கலந்து கொள்ளலாம் என்கிற அளவுக்கு அஇஅதிமுக ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்குப் பெருந்துரோகம் செய்துவிட்டது.

தந்தை பெரியாரால், திராவிட இயக்கத்தால் செப்பனிடப்பட்ட தமிழ் மண்ணில், மதவாத நச்சுவிதைகள் ஊன்றப்படுவதற்கு அண்ணா பெயரிலும், 'திராவிட' பெயராலும் உள்ள முகமூடி அணிந்த ஒரு கட்சி பலியானதை எவ்வகையிலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதில் அய்யமில்லை.

அதன் விளைவை மே 2ஆம் தேதி எதிர்பார்க்கலாம். பொதுவாக தேர்தல் அமைதியாக தமிழ்நாட்டில் நடந்திருந்தாலும் சிற்சில இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடந்துள்ளது வேதனைக்கு உரியது.

வாக்காளர்களுக்குப் பணம், பொருள்கள் அன்பளிப்பு - அடையாள அட்டைகள் (டோக்கன்) அளித்து, பிறகு பொருள்களைப்பெற்றுக் கொள்ளலாம் என்ற ஏற்பாடுகள் எல்லாம் அநகரிகமே!

மக்களின் வறுமையையும், அறியாமையையும் பயன்படுத்தி, குடி மக்கள் உரிமையான வாக்குச் சீட்டையே விலைக்கு வாங்குவதும், விலை போவதும் இந்திய ஜனநாயகத்தின் தன்மை கொச்சைப்படுத்தப்பட்டதற்கான சாட்சியங்களாகும்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மதிக்கப்படும் இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் வாக்காளர்கள் தங்கள் கடமையினைச் சரிவர செய்துள்ளார்களா? என்பது முக்கிய கேள்வி!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சராசரி வாக்குப் பதிவு 72.78 என்பது பாராட்டத்தக்கது தானா? அதுவும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில்தான், மாநிலத்திலேயே குறைவான வாக்குப் பதிவு என்பதை எந்த வகையில் எடுத்துக் கொள்வது?

படித்தவர்கள், பொருளாதாரத்திலும் ஓரளவு உயர்ந்த நிலையில் உள்ளவர்கள், அரசுத் துறை, தனியார்த் துறை, பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர் தலை நகரங்களில் அதிகம். அப்படியிருந்தும் வாக்களிக்கும் கடமையினை இவர்கள் ஏன் நிறைவேற்றுவதில்லை?

சமூகவலை தளங்களில் எழுதுவதும், ஏடுகளில் ஆசிரியர் கடிதங்கள் எழுதுவதும், வெறும் விமர்சனங்களில் ஈடுபடுவதும் தான் இவர்களின் பொழுதுபோக்கோ என்று கருத வேண்டியுள்ளது.

'நோட்டா'வைக் கூடப் பயன்படுத்தலாம் - தவறு இல்லை - ஆனால் வாக்களிப்பது கடமை என்பதை சட்ட ரீதியாக ஆக்க வேண்டுமா என்பதும் யோசிக்கத்தக்கதாகும்!

Comments