2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுப்போம் என்றார்கள்; இருக்கின்ற வேலை வாய்ப்புகள் பறிபோனதுதான் மிச்சம்!

புதுவையில் முதலமைச்சரை பா...தான் முடிவு செய்யுமாம்- குறுக்கு வழியில் வேறு ஒருவரைத் தயார் செய்து வைத்துள்ளனர்!

புதுவை தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் விளக்கம்

புதுவை, ஏப். 3  குறுக்கு வழியில் புதுவையில்  பா... ஆட்சி அமைக்கலாம் என்று திட்டமிட்டு அதற்கொரு ஆளையும் தயார் செய்து வைத்துள்ளனர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

புதுவையில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

கடந்த 31.3.2021 அன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரி சுதேசி மில் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

திரிசூலத்தோடு மோடி தேர்தல் நடத்துகிறாராம் புதுச்சேரியில்.  முதல் சரக்கு, மூன்று நாமினேட்டட் மெம்பர்கள் - நியமனம் செய்யப்பட்ட மூன்று உறுப் பினர்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? தேர்தலில் நின்று, டெபாசிட் இழந்தவர் ஒருவர் இருக்கிறார்.

இன்னொன்று, வருமான வரித் துறை, உளவுத் துறை, சி.பி.அய்., எம்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட், அமலாக் கத் துறை இதுபோன்று ஆறு  மத்திய துறைகள் போன்றவை.

முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுடைய பணியை செய்வதற்கு விட்டார்களா?

ஜனநாயகத்தில் மல்யுத்தம் போன்று இரண்டு அணி போட்டி போடுகிறார்கள். மற்ற அணிகள் எல்லாம்பற்றி நாம் பேசவேண்டிய அவசியமில்லை. அவையெல்லாம் ஒரே கம்பெனி - பிராண்டு வேறு வேறு. முதலாளி, ஒரே முதலாளிதான். ஒரே நாடகக் கம்பெனிதான். அரிதாரத் தைக் கலைத்தால் அனைவரும் ஒன்றாகத்தான் இருப் பார்கள். ஒருவர் ராஜா வேடம் அணிந்திருப்பார்; இன்னொருவர் வில்லன் வேடம் அணிந்திருப்பார். ஆகவே, அவர்களைப்பற்றியெல்லாம் நாம் கவலைப் படவேண்டிய அவசியமில்லை.

பிற்போக்கு மதவாத வெறியோடு இருக்கக் கூடியது பா... - அதற்கு நேர் எதிராக இருக்கக்கூடியவை தி.மு.., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள்,  விடுதலை சிறுத் தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புகள் போன்றவை.

கிரண் பேடி என்ற அம்மையாரை துணை நிலை ஆளுநராகக் கொண்டு வந்து அமர்த்தி, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அமைச்சரவை எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும், நடைமுறைக்குக் கொண்டு வந்தாலும், அதற்கு முட்டுக்கட்டை போட்டார் அவர்.

நியாயமான போட்டியாகுமாசம போட்டியாகுமா?

ஒருவரை கைகளையும், கால்களையும் கட்டிவிட்டு, மற்றொருவருடன் சண்டை போடுங்கள் என்று சொன் னால், அது நியாயமான போட்டியாகுமா? சம போட்டியாகுமா? அப்படி இருந்தும், தாக்குப் பிடித்தார் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள்.

இந்தியாவிலேயே, ஒரு முதலமைச்சர், அதிகமான அளவிற்கு மக்களிடையே வந்து போராட்டம் நடத்திய மாநிலம் புதுச்சேரி மாநிலமாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக தி.மு.., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாடுபட்டன. ஜனநாயகப் படுகொலையை ஒரு ஆளுநரின்மூலம் செய்தனர்.

இன்னொன்றையும் உங்களுக்குச் சொல்கிறேன், விலை போன சில பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், நான்தான் முதலமைச்சராவேன், அவர்தான் முதல மைச்சராவார் என்று. பா...வைப் பொறுத்தவரையில் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர் களுடைய திட்டமே வேறு.

இங்கே செய்தியாளர்கள் இருக்கிறார்கள், அரசின் காதுகள் இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்கிறேன் - இந்தக் கட்சியிலிருந்து வேறு கட்சிக்குத் தாவினாரே, அவர், தான்தான் முதலமைச்சர் என்ற கனவோடு இருக்கிறார். அவர் மட்டுமல்ல, பல பேர் அந்தக் கனவோடுதான் தூங்கி எழுந்திருக்கிறார்கள். அவர்களுடைய உரிமை அது. ஏனென்றால், அப்துல்கலாம் அவர்கள் சொன்ன ‘‘கனவு காணுங்கள்'' என்று சொன்னதை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

 பா... ஓரிடத்தில்கூட டெபாசிட் வாங்கப் போவதில்லை

தமிழ்நாட்டில் பா... ஓரிடத்தில்கூட வெற்றி பெறாது என்று எப்படி சொன்னார்களோ - அதேபோன்று, புதுச்சேரியிலும் ஓரிடத்திலும்கூட டெபாசிட்கூட வாங்கப் போவதில்லை.

புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது பா... வேட்பாளர்கள் 30 பேரும் தோல்வியுற்றனர். அதில் 29 பேர் டெபாசிட் இழந்தனர் என்பதுதான் வரலாறு.

மீண்டும் இங்கே வித்தைகள் நடத்துவதற்காக வடக்கே இருந்து வருபவர்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று சொல்கிறார்கள்.

நேற்றுகூட பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றி முடிக்கும் தருவாயில் கூடுதலாக ஒரு வார்த்தையை சொன்னார்.

‘‘சப்கோ சாத் - சப்கா விகாஸ்'' என்று சொல்லிவிட்டு, ‘‘சப்கோ விஸ்வாஸ்'' என்று சொன்னார்.

இதுதான் வளர்ச்சியே தவிர வேறொன்றும் இல்லை. ஒரு வார்த்தைதான் கூடுதலாக  வளர்ச்சியடைந்திருக்கிறது.

இருக்கின்ற வேலை வாய்ப்புகள் பறிபோயிருக்கின்றன!

உங்களுக்கெல்லாம் தெரியுமே -  நான் ஆட்சிக்கு வந்ததும், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வந்து விழும் என்று சொன்னாரே, யார் கணக்கிலாவது வந்திருக்கிறதா?

ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று பா... சொல்லிற்றே - யாருக்காவது வேலை கிடைத்ததா?

இருந்த வேலை வாய்ப்புகள் பறிபோயிருக்கிறது - பல பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடையாது - புதிதாக வேலை வாய்ப்புகளும் கிடையாது.

மத்தியில் ஆளும் பா... ஆட்சியில், 125 நாள்களாகத் தொடர்ந்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக் கிறார்களே, இதுபோன்ற நிலை வேறு எந்த ஆட்சி யிலாவது நடைபெற்றது உண்டா?

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்களே அதனை எதிர்த்து விவசாயிகள் போராடுகிறார்கள் என்றால், அவர்களை அழைத்து ஏதாவது பேசியிருக்கிறாரா பிரதமர் மோடி?

இந்தியாவில் என்ன மன்னர் ஆட்சி நடைபெறுகிறதா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்குப் பணி யாற்றக்கூடிய மக்கள் தொண்டர்கள்தான் ஆட்சி யாளர்கள்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு முறை வருகிறாரே, மோடி  - புயலால் பாதிக்கப்பட்டபொழுது ஆறுதல் சொல்வதற்கு வந்தாரா?

அதுமட்டுமல்ல,  புயல் நிவாரணத்திற்காக கேட்கப் பட்ட தொகை கிடைத்ததா?

அரசமைப்புச் சட்டத்தில்ஆட்சி வேறு; கட்சி வேறு!

இப்பொழுது சொல்கிறார்களே, இங்கே ஆட்சிக்கு வந்தால், புதுச்சேரியை குபேரி புரியாக ஆக்கிவிடுவோம் என்று.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்  - அரசமைப்புச் சட்டத்தை அவமானப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்; அரசமைப்புச் சட்டத்தைக் கேவலப்படுத்துகிறார்கள் என்றுதான் அர்த்தம். அரசமைப்புச் சட்டத்தில், ஆட்சி வேறு; கட்சி வேறு.

கட்சி என்று சொன்னால், அதற்கு சில கொள்கைகள் உண்டு. முதலமைச்சராக யார் வந்தாலும், அல்லது துணை நிலை ஆளுநராக எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் வந் தாலும்கூட - எல்லா மக்களுக்கும் அவர் முதலமைச்சர் தான்; எல்லா மக்களுக்கும் துணைநிலை ஆளுநர்தான்.

ஆனால், இங்கே இருக்கும் நிலை என்ன?

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை

கட்சி மாறி, கட்சித் தாவி - அவர்கள் எப்படி தாவி னார்கள் என்றும், ஏன் தாவினார்கள் என்றும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. புதுச்சேரி மாநில மக்களுக்கு நான் சொல்லவேண்டிய அவசியமில்லை.

தேர்தலில் வெற்றி பெற்று,  ஆட்சி அமைப்பதற்கு முன்பே  அதிகார துஷ்பிரயோகத்தை - ஆட்சி அதி காரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு அடையாளம் - புதுச்சேரியில் தேர்தல் நடைபெறுமா? நடைபெறாதா? என்று உயர்நீதிமன்றத்தில் நான்கு நாட்களுக்கு முன் ஒரு கேள்வி கேட்டார்கள்.

ஏன் கேள்வி கேட்டார்கள்?

இங்கே இருப்பவர்கள் அறிவார்ந்த மக்கள் - நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். இங்கே இருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சொல்கிறேன், கூட்டணித் தோழர்களுக்கும் சொல்கிறேன். மிகத் தெளிவான ஒரு சூழல் இல்லை என்றால், அந்த ஆபத்து ஏற்படும்.

மாநில மக்களின் வரிப் பணத்தைத்தான் மத்திய அரசு நிதியாகக் கொடுக்கிறது!

மத்திய அரசாங்கம், மாநிலத்திற்கு நிதி கொடுக் கிறார்கள் என்றால், அது மக்கள் வரிப் பணம் - நீங்கள் கொடுத்த பணம் - நாம் கொடுத்த பணம் - மாநிலங் களிலிருந்து சென்ற பணத்தைத்தான் - அவர்கள் நிதி யாகக் கொடுக்கிறார்கள். அவர்களுடைய சொந்தப் பணத்தை ஒன்றும் கொடுக்கவில்லை. ஆகவே, எங்க ளுடைய கட்சி ஆட்சியில் இருந்தால்தான் கொடுப்போம் என்று சொல்வதற்கே வாய்ப்பே கிடையாது.

தேர்தலே இன்னும் நடைபெறவில்லை; அவர் களுடைய ஆட்சியே இன்னும் அமையவில்லை. அதற்கு முன்பே என்ன சூழல் என்று சொன்னால், உயர்நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. ஒவ்வொரு வாக்காளருடைய ஆதார் அட்டையோடு தொலைபேசி எண்ணை இணைக்கின்ற அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், எப்படி இது நடந்தது? என்று கேள்வி கேட்டிருக்கிறது உயர்நீதிமன்றம்.

அதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது. தொடக் கமே கோளாறு - அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்கிறது.

ஆகவே, ஆட்சி வருவதற்கு முன்பே இப்படி நடந்தால்,  இவர்கள் கையில் ஆட்சி வந்தால், என்னாகும்? என்பதை நினைத்துப் பாருங்கள் நண்பர்களே!

மோடி சொல்கிறார், மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் படிப்பதற்கான வசதியை செய்து கொடுத் திருக்கிறோம் என்று சொல்கிறார். எத்தனை மருத்துவக் கல்லூரி வந்து என்ன பயன்?

நீட் தேர்வு கொடுமையினால் 14 பிள்ளைகள் தற் கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தக் கொடு மையான நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று கோரி பல ஆண்டுகளாகப் போராடியும் வருகிறோம்.

தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு என்று சொன்னார்கள்.

புதுவையில், 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று அரசு கொடுத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.

10 சதவிகித ஒதுக்கீட்டை மத்திய பா... அரசாங்கம் ஏற்காதாம்!

அந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அர சாங்க வழக்குரைஞர் ஆஜரானார்.

நீதிபதி கேட்கிறார், ‘‘10 சதவிகித ஒதுக்கீடு குறித்து உங்களுடைய கருத்து என்ன?'' என்று.

‘‘10 சதவிகித ஒதுக்கீட்டை மத்திய பா... அரசாங்கம் ஏற்காது'' என்றார்.

அப்படி என்றால் என்ன அர்த்தம்?

நம்முடைய 100 சதவிகிதத்தை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். சரி, 10 சதவிகிதத்தையாவது கொடுங்கள், எங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும்; அள்ளிக் கொடுக்க வேண்டாம் - கிள்ளிக் கொடுக்கின்ற 10 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கூட பா... அரசு ஏற்காது என்று சொன்னார்கள்.

தமிழ்நாட்டில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறதே என்று நீதிபதி கேட்டார்.

அது எங்கள் கவனத்திற்கு வரவில்லை என்று மத்திய அரசு வழக்குரைஞர் சொன்னார்.

இதற்கு என்ன அர்த்தம் என்றால், தேர்தல் முடிந்த வுடன், அதை நாங்கள் காலி செய்துவிடுவோம் என்பது தான்.

நீட் தேர்வு ஒழிக்கப்பட முடியாது என்று சொல்லி, அதில் கொஞ்சம் கிள்ளி 10 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தால் நம்முடைய உள்ளூர் பிள்ளைகள், புதுச்சேரி பிள்ளைகள், அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் அதையும் பெறக்கூடாது என்று சொல்கின்ற கூட்டணிக் குத்தான் நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்களா? அந்த ஆட்சிதான் வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?

அந்த நிலை வரக்கூடாது என்று சொன்னால், அதற்கு ஒரே வழி - காங்கிரஸ் - தி.மு.. தலைமையில் அமைந்தி ருக்கின்ற கூட்டணிக்கு நீங்கள் வாக்களிப்பதன்மூலம்தான் விடியலைப் பெற முடியும்.

நான் தொடக்கத்தில் சொன்னேன் அல்லவா - ஒவ்வொருவரும் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார்கள் என்று. அவர்களுடைய கனவு நிறைவேறப் போவதில்லை. பா...வினுடைய திட்டமே வேறு.

என்ன திட்டம் வைத்திருக்கின்றார்கள் என்று சொன்னால், ஒரு பார்ப்பன அம்மையாரை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்காரர் என்று சொல்லிக் கொண்டே - இங்கே கொண்டு வருவதற்காகத்தான் - தேர்தல் காலத்தில் அடையாளம் காட்டி, முகம் காட்டி சென்றிருக்கிறார்.

ஆகவே, அருமை நண்பர் ரங்கசாமி அவர்களும் முதலமைச்சராக வர முடியாது; கட்சித் தாவிய நமச்சிவாயத்திற்கும் பட்டை நாமம்.

உதாரணத்திற்கு ஒரு கதையைச் சொல்கிறேன்.

'பே! பே!! எல்லாருக்கும் பே! பே!!'

பொய்  சொன்னதாகப் போடப்பட்ட வழக்குக்குப் போனவரிடம் அவரது வழக்குரைஞர் ‘‘உன்னிடம் எதைக் கேட்டாலும் பேச இயலாதவர் போலபே! பே!' என்று சொல்லி நடி'' என் சொல்லிக் கொடுத்திருந்தார்.

அவரும் எதிர் வழக்குரைஞர் கேள்வி கேட்டதற்கு பேச இயலாதவர் போல நடித்து, ‘‘பே! பே!'' என்று சொன்னார். நீதிபதி கேள்வியை கேட்டார். அதற்கும் ‘‘பே! பே!'' என்றார். ‘‘என்னய்யா இது?'' என்றார் நீதிபதி‌.

அதற்கு இவரின் வழக்குரைஞர் ‘‘அவர் வாய் பேச முடியாதவருங்க'' என்றார். ‘‘அடடா வாய்பேச முடியாதவர் எப்படி பொய் சொல்லியிருப்பார்? அவருக்கு எப்படி தண்டனை தருவது'' என்று சொல்லி விட்டு அவருக்கு சாதகமாகத் தீர்ப்பைக் கொடுத்தார் நீதிபதி.

வெளியே வந்ததும் ‘‘பரவாயில்லையா நான் சொல்லிக் கொடுத்தது போல நல்லா நடிச்சய்யா! சரி எனக்கு ஃபீஸ் கொடு'' என்று கேட்டார் வழக்குரைஞர்.

அதற்கும் அவன் ‘‘பே! பே!!'' என்று சொல்லிவிட்டான்.

இதுதான் இப்போது புதுச்சேரி அரசியலில் நடக்கப் போகிறது.

ரங்கசாமிக்கும் பே! பே!! தான்.

நமச்சிவாயத்துக்கும் பே! பே!!

வேறு யாராக இருந்தாலும் பே! பே!! தான்.

முதலமைச்சர் யார் என்பதை பா...தான் முடிவு செய்யுமாம்!

ஆகையால், குறுக்கு வழியில் சென்றவர்கள், ‘‘நான் தான் முதலமைச்சர், முதலமைச்சர்'' என்று சொல் கிறார்களே, அந்தப் பதவிக்கு வேறொரு ஆளை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். அதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள்.

இங்கே மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் சேர்த்து சொல்கிறார்கள், ‘‘தேர்தல் முடிந்து ஆட்சி அமைக் கும்பொழுது, பா...தான் யார் முதலமைச்சர் என்பதை அப்பொழுது தீர்மானிப்போம்'' என்று.

அப்படியென்றால் என்ன அர்த்தம்?

நாங்கள் சொல்கின்ற ஆளைத்தான் முதலமைச்சர் பதவியில் உட்கார வைப்போம் என்பதுதான்.

ஆகவே நண்பர்களே! ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமா? இல்லையா?

படுகொலை செய்யப்பட்ட ஜனநாயகம் -

நீங்கள் கோபத்தோடும், ஆத்திரத்தோடும் - புதுச்சேரி மக்கள் ஏமாளிகள் அல்ல - இப்படி செய்தவர்களுக்குத் தக்க பாடம் கற்பிப்போம் - அதன் காரணமாக ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குச் சாவடிக்குச் சென்று எங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்வோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கவேண்டும்.

புதுச்சேரியில் இழந்த உரிமைகளை நீங்கள் மீட்டெடுக்க முன்வாருங்கள்!

அந்த வகையில், உருளையன்பேட்டை தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான அருமை நண்பர் கோபால் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்; அதேபோல, கைசின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும். அதேபோல, கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற - புதுச்சேரியில் இழந்த உரிமைகளை நீங்கள் மீட்டெடுக்க முன்வாருங்கள் என்று கேட்டு, விடை பெறுகிறேன்.

தேர்தல் முடிந்து முடிவுகள் வந்த பிறகு விரிவான பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு இங்கே வந்து உரை யாற்றுவேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Comments