மோசடிப் பிரச்சார அரசியல்

மேற்கு வங்கத்தில் சமூகவலைதளங்களில் காணொலி ஒன்று பரவியது; அதில் ஒரு மூதாட்டியும், அவரது மகனும் தங்களை திரிணாமுல் காங்கிரசார் தாக்கிவிட்டதாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். இந்தக்  காணொலி பல லட்சம் பேருக்கு பரப்பி விடப்பட்டு "இதுதான் திரிணாமுல் காங்கிரசாரின் யோக்கியதை" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

 இந்த நிலையில் அந்த நிகழ்வு குறித்து தாக்குதலுக்கு ஆளான மூதாட்டியின் பேரன், தனது பாட்டியை தனது தந்தையே தாக்கியுள்ளார் என்று ஊடகம் ஒன்றில் விளக்கம் அளித்து பித்தலாட்டப் பிரச்சாரத்தை முறியடித்துள்ளார்.

 மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது, 2016-ஆம் ஆண்டு வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வென்ற பாஜக இம்முறை அங்கு ஆட்சி அமைப்போம் என்று கூறிக் கொண்டு உண்மைக்கு விரோதமான செயல்களில் எல்லாம் இறங்கி தேர்தல் ஆதாயம் பார்க்க ஆரம்பித்துள்ளது,

 பங்களாதேசில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை சிலர் தாக்கிய காணொலியை - திரிணாமுல் காங்கிரசார் பாஜகவிற்கு வாக்களிப்பேன் என்று கூறிய பெண்ணைத் தாக்குகிறார்கள் என்று பரப்பினர். ஆனால் அது 2012-ஆம் ஆண்டு டாக்காவில் குடும்பத் தகராறில் நடந்த தாக்குதல் என்று உடனடியாக தொலைக்காட்சி ஒன்று சான்றுகளோடு வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த திங்கள் காலையில் இருந்தே  காணொலி ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது, அதில் 85 வயதான மூதாட்டி முகம் எல்லாம் வீங்கிக் காணப்பட்டார். அருகில் அவரது மகன் அமர்ந்து கொண்டு "நான் பாஜக பிரமுகராக இருக்கிறேன்; திடீரென்று அதிகாலை 4 மணிக்கு இப்பகுதி திரிணாமுல் காங்கிரசார் வந்து எனது தாயிடம் பாஜ கட்சிக்கு ஆதரவாக உள்ள மகனைப் பெற்ற நீ உயிரோடு இருக்கத் தகுதியில்லாதவர் என்று கூறி கடுமையாக தாக்கினர். அதைத் தடுக்கச் சென்ற என்னையும் தாக் கினர்" என்று கூறியிருந்தார். மேலும் தான் காவல்நிலையத் திற்குச் செல்லமாட்டேன், மக்களிடம் நீதி கேட்பேன்" என்றும் கூறியிருந்தார்.

இத்தாக்குதல் தொடர்பான காணொலி அருகில் உள்ள மாநிலமான அசாமில் கூட பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

இந்த நிலையில் தாக்குதலுக்கு ஆளான மூதாட்டியின் பேரன் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ளார்.  பல மாதங்களாகவே பாட்டியை தனது தந்தை தொடர்ந்து தாக்கி வருவதாக, 85 வயதாகும் ஷோவா மஜும்தாரின் பேரன் கோபிண்டோ தெரிவித்துள்ளார். ஏற்கெனவே  சொத்துப் பிரித்துக் கொடுத்தது தொடர்பாக அடிக்கடி தனது தாயை பாஜக பிரமுகர் துன்புறுத்துவார்; இது குறித்து ஷோவா மஜும்தார் தங்கள் வீட்டிற்கு வந்து மகன் தன்னை அடித்துத் துன்புறுத்துவது குறித்து அழுவார் என்றும் பேரனும், பேரனின் மனைவியும் தெரிவித்தனர்.  இந்த நிலையில் அந்த மூதாட்டி உள்ளூர் காவல்நிலை யத்திலும், அவ்வூர் முக்கியப் பிரமுகர்களிடமும் தனது மகன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் கூறி யுள்ளதும் தெரியவந்துள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவினர் தேர்தல் வெற்றிக்காக எந்த அளவிற்கும் கீழ்த்தரமாக இறங்குவார்கள் என்பதற்கு இந்த ஒரு செய்தியே போதும் என்று மேற்குவங்கத்தில் உள்ள அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

 தமிழகத்திலும் பாஜக பிரமுகர்கள் தங்களது வீடுகள் மீது தாங்களே கல் எறிந்து கொள்வதும், பெட்ரோல் குண்டுகளை தாங்களே வீசிக் கொள்வதும், தங்களின் இரு சக்கரவாகனங்களுக்குத் தாங்களே  தீவைத்து எரித்து பிறகு எதிர்க்கட்சியினர் இவ்வாறு செய்துவிட்டனர் என்று கூறுவதும் தொடர் கதையாகி உள்ள நிலையில், தற்போது தாயையே தேர்தல் ஆதாயத்திற்காக தாக்கிய நிகழ்வு மேற்குவங்கத்தை மட்டுமல்ல, இந்தியாவையே பரபரப் பாக்கி உள்ளது.

 பா... - ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்கள் எந்த கீழ்த்தர மான எல்லைக்கும் சென்று பொய்களையும், புரட்டு களையும் கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதற்கு எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. இப்பொழுது அதே பாணியில் மேற்கு வங்கத்திலும் அரங்கேறியுள்ளது என்பதுதான் உண்மை!

சீனாவில் உள்ள ஷாங்காய்ப் பேருந்து நிலையத்தின் படத்தினை வெளியிட்டு, இது பா... ஆளும் குஜராத் அகமதாபாத் பேருந்து நிலையம் என்று பிரச்சாரம் செய்ய வில்லையா? மோசடியே, உன் பெயர்தான் பிஜேபியா?

Comments