தமிழக மின் தேவை அதிகரிப்பு

 சென்னை, மார்ச் 29 தமிழக மின் தேவை, முதல் முறையாக, 16 ஆயிரத்து, 487 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், வீடு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும், மின் விநியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. தமிழக மின் தேவை, தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. கோடை காலத்தில் வெயில் சுட்டெரிப்பதால், மின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கிறது. அதன்படி, 2019 ஏப்., 3 இரவு, 7:05 மணிக்கு, மின் தேவை, 16 ஆயிரத்து, 151 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.

கரோனா தொற்று பரவலை தடுக்க, 2020 மார்ச் இறுதி முதல், தமிழகம் உட்பட நாடு முழுதும், ஊரடங்கு அமலானது. இதனால், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் போன்றவை செயல்படாததால், அந்த ஆண்டில், வெயில் அதிகம் இருந்தும், மின் தேவை புதிய உச்சத்தை எட்டவில்லை. சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் நடக்க உள்ளதால், தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. வெயிலும் சுட்டெரிப்பதால், வீடுகளில், ‘ஏசி, டிவி, பிரிஜ், லேப்டாப்’ உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதையடுத்து, 26.3.2021  அன்று காலை, 11:49 மணிக்கு, மின் தேவை, 16 ஆயிரத்து, 487 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய அளவை எட்டியுள்ளது. அதே அளவிற்கு, மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் இருந்ததால், மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.ஏப்., மே மாதங்களில் தான், வெயில் கடுமையாக இருக்கும். இதனால், இந்த கோடையில், மின் தேவை, 17 ஆயிரம் மெகா வாட்டை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Comments