பா.ஜ.க. ஆட்சியை நோக்கி பல்லாயிரம் கேள்விகள் உண்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 30, 2021

பா.ஜ.க. ஆட்சியை நோக்கி பல்லாயிரம் கேள்விகள் உண்டு!

சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்? ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின? பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும், கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்? மோடியை மேலே உயர்ந்த (பிரமோட்) செய்யப் பயன்படுத்தப் பட்ட 10,000 கோடி பணம் யாருடையது

 ஊழல்வாதிகள் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி? எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை 'ரெய்டு'கள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி? 2ஜி வழக்கை சோடித்த வினோத் ராய் ஓய்வுக்குப்பின் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு தலைவராக நியமிக்கப்படவில்லையா?

வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்புப் பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லையே... ஏன் ஏன்? இந்தியாவில்  பாதையோரம் கடை வைத்து சில ஆயிரங்களி லிருந்து, சில லட்சங்கள் என்று சேர்த்து வைத்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பணங்களை ரூபாய் மதிப்பிழப்பு செய்து கள்ளப்பணமாக ஆக்கி வேட்டையாடியது தான் - கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணமா ?

பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன? 'ஜீ பூம்பா' சொன்ன சூத்திரதாரி யார்? ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனைத் துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா ?

 பிரதமர் மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?

 மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா? அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதலீடு செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி? 

இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நட்டம் அடைந்தது எப்படி? இன்று ரிலையன்சுக்கும், அதானிக்கும் விற்கப்படுவது எப்படி? அரசு விமான நிலையங்களும், துறைமுகங்களும் இன்று அதானிகளின் உடைமைகள் ஆகிவிடவில்லையா? 

 தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் 'டோல்' கேட் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். பாஸ்டேக் என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள்? ஆட்சிக்கு வந்தால் 'டோல்' கேட் வசூல் நிறுத்தப்படும் என்று மோடி சொன்ன உறுதி

என்னாயிற்று?

யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டுப் பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?ஏழை விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?

பல்லாயிரம் கோடிகள் உபரிப்பணம் இருக்கும் எல்அய்சி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்அய்சியில் எந்த விதமான நட்டம் ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் மர்மம் என்ன ? இதன் பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன ?

மாநிலங்களின்  ஜி.எஸ்.டி. பங்குகள் எங்கே மாயமானது?  கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகிறார்களே ஏன்? இவர்களுக்குக் கடைசி புகலிடம் பாஜகதானா?

 பாஜகவின் இந்த 6 ஆண்டுகால ஆட்சியில் மோடியின் மக்கள் விரோத திட்டங்கள் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கு வெண் சாமரம் வீசும் அதிமுக ஆட்சியைத்தான் மன்னிக்க முடியுமா? தமிழகத்தில் ஏற்படும் ஆட்சி மாற்றம் விரைவில் டில்லியிலும் ஆட்சி மாற்றத்திற்கு இடும் வித்தாக அமையும் - அமையவும் வேண்டும்.

No comments:

Post a Comment