தெய்வீகத் தமிழ் என்ற பெயரால்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 27, 2021

தெய்வீகத் தமிழ் என்ற பெயரால்....

கவிஞர் கலி. பூங்குன்றன்

தெய்வீகத் தமிழால் இணைவோம் - தேசமெங்கும் தமிழர்களை இணைப்போம் என்ற ஒரு முழக்கத்தோடு ஓர் இணைய மாநாடு - வளைகுடா நாடுகளான அய்க்கிய அரபு நாடுகள்  - சவுதி, குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமான் நாடுகள் எல்லாம் இணைந்து 26.3.2021 அன்று நடப்பதாக விளம்பரம் ஒன்று வெளியானதைப் படித்தவர்கள் சிலர் மகிழ்ச்சியில் ஆனந்த தாண்டவம் ஆடக் கூடும்!

பரவாயில்லையே, நமது பைந்தமிழுக்குப் பன்னாடுகளைச் சார்ந்தவர்களையும் இணைத்து ஒரு சிறப்பு விருந்து படைக் கிறார்களே என்று எண்ணும் போது தமிழர்கள் எவராயிருந்தாலும் எல்லையில்லா ஆனந்தப் பெருக்கில் மூழ்கித் திளைப்பார்கள் தாம்.

ஆனால் அந்த மகிழ்ச்சியும், ஆனந்த கிறுகிறுப்பும் விளம் பரத்தின் உட்பகுதியைப் பார்க்கும் பொழுது அதிர்ச்சியும் - ஆழ்ந்த சிந்தனையும் புரட்டிப்புரட்டி எடுக்கும்.

இந்த இணைய மாநாட்டில் பங்கேற்று கருத்துரைகளை வடித்துக் கொடுப்பவர்கள் யார் யார்? பட்டியலைப் பார்க்கும் பொழுது அச்சமும், அய்யமும், அதிர்வும் ஆட்கொள்ளவே செய்யும்.

யார் யாரெல்லாம் பங்கேற்கிறார்களாம்? - தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடிய போது மேடையில் இருந்த எல்லோரும் எழுந்து நின்று மரியாதை காட்டிய போது - அதைப்பற்றி எல்லாம் சற்றும் கவலை கொள்ளாமல், குத்துக் கல்லாக உட்கார்ந்திருந்த காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி உட்பட பலரும் பங்கு கொள்கிறார்களாம். ஸ்வாமி சிறீ ஓங்கார நந்தர், ஜக்கி வாசுதேவ், சிறீசிறீ ரவிசங்கர், சம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்,  தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் (பா...), சண்முகநாதன், சிறீகிருஷ்ண ஜெகந்நாதன், பாரதி பாஸ்கர் என்று பட்டியல் சொல்லுகிறது.

இப்பொழுது என்ன  - இவர்களுக்குத் தமிழன் மீது - தப்புத்தப்பு. தெய்வீகத் தமிழின் மீது தீராக்காதல் திரண்டு திணற அடிக்கிறது?

இவர்களின் பின்னணி என்ன? தெய்வீகத் தமிழால் இணை வோம் என்ற முழக்கத்தோடு காணொலியில் கசிந்து உருகு பவர்கள், இவர்கள் கூறும், நம்பும் - தெய்வீகக் கோயில்களில் தமிழ் வழிபாட்டினை ஏற்கக் கூடியவர்களா? என்ற கேள்விக்கு முதலில் பதில் சொல்லி விட்டு, அதற்குப் பிறகு தெய்வீகத் தமிழ்ப் பற்றிப் பாசுரம் பாடலாம் அல்லவா?

தமிழைப் பற்றி இவர்களின் மதிப்பீடு என்ன? 

இவற்றைப் பற்றிய சில எடுத்துக்காட்டுகளை எடுத்துக் காட்டினால் தானே சரியாக இருக்கும்.

இவற்றை உள்வாங்கிக் கொண்டு - இவர்கள் கூட்டணி மேற்கொண்டால்தெய்வீகத் தமிழால் இணைவோம்என்பது எத்தகையது என்பதை உணரலாம் அல்லவா?

சங்கராச்சாரியார் ஒவ்வொரு நாளும் பூஜை வேளையில் (சந்திர மவுலீஸ்வரர் பூஜை என்பர்) தமிழில் பேசமாட்டார். பூஜை வேளையில் தமிழ் நீஷப் பாஷை என்று கூறிப் பேசமாட்டர்கள். ஆட்சி மொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் பேட்டி, ‘உண்மை 1.12.1980))

அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரின்  இந்து மதம் எங்கே போகிறதுஎனும் நூலிலும் இதே கருத்துகளை கூறி ஒப்புக் கொள்கிறார். (நூல் பக்கம் 99,100)

******

கரூர் மாவட்டம் திருக்கூடலூரில் உள்ளது திருமுத்தீசுவரர் கோயில்.

உள்ளூர் வாழ் மக்கள் உழவாரப்பணியின் மூலம் கோயிலைச் சீர்படுத்தினர். தமிழிலேயே குடமுழுக்கு நடத்தவும் முடிவு செய்தனர்.

கோயில் அர்ச்சகர்கள் தடுத்தனர். அர்ச்சகர் சங்கத் தலைவர் கணேசன் சிவாச்சாரியார் தமிழில் அனுமதிக்க முடியாது என்று அடித்துக் கூறினார். இந்து அறநிலையத்துறை அலுவலர்களிடம் அனுமதி தேவை என்றனர். பெரும்பாடுபட்டு அனுமதியும் பெற்று, தமிழ்த் திருமுறைகள் ஓதப்பட்டு குடமுழுக்கு நடத்தப் பட்டது. (9.9.2002)

ஆனால் கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்கள், தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டதால் ஆலயம் தீட்டுப் பட்டு விட்டது என்று கூறி, கோயில் கதவுகளை இழுத்து மூடினர். சிலநாட்கள்  கழித்து, தீட்டுக் கழித்து, சமஸ்கிருத முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தினர்.

சும்மா இருப்பாராஜெகத் குரு? காஞ்சி சங்கராச்சாரியாரும் கோதாவில் குதித்தார்.

கும்பாபிஷேகங்களில் சமஸ்கிருத மந்திரங்கள்  தொன்று தொட்டு ஓதிவரும் வழக்கத்தைக் கை விடுவது முறையல்லஎன்று திருமணி முத்தீஸ்வரர் கோயில் பொறுப்பாளர்களுக்கு ஆட்சேபக் கடிதம் எழுதினார் ஜெயேந்திர சரஸ்வதி.

அதற்குத் திமுக தலைவர் கலைஞர்தமிழை மதிக்காதவர் களுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை?என்று சுருக்கென்று அறிக்கை விட்டார்.

கடவுள் விஷயத்தில் நாத்திகரான கருணாநிதிக்கு என்னவேலைஎன்று காஞ்சி சங்கராச்சாரியார் பதில் அறிக்கை கொடுத்தார். (‘இந்தியா டுடே, 2.10.2002)

******

திமுக ஆட்சியில் தமிழ்க்குடிமகன் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது, இனிக் கோயில்களில் தமிழில் தான் அர்ச்சனை, விரும்பிக் கேட்டால் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யலாம் என்று சொன்னதை எதிர்த்து ஹிந்துக் கோயில் பாதுகாப்புக் கமிட்டியின் தலைவரும் ராஜாஜியின் சுதந்திராக் கட்சிப் பிரமுகருமான வி.எஸ். சிறீகுமார் என்ற பார்ப்பனர் உயர்நீதி மன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்தார்.

சிதம்பரம் நடராஜன் கோயிலில் ஓதுவார் ஆறுமுகம் என்ற முதியவர் திருவாசகத்தைப் பாடினார் என்பதற்காகவே கோயில் தீட்சிதப், பார்ப்பனர்கள் அவரை அடித்து உதைக்கவில்லையா? (8.5.2000) கை முறிந்து கட்டுடன்கல்கியே அட்டைப் படத்தில் வெளியிட்டதுண்டே! (4.6.2000 இதழ்)

*******

பிராந்திய மொழிகளில் அர்ச்சனை  நடப்பது  சாஸ்திரங் களுக்கு விரோதமானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மொழியில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை நடந்தால்தான் தேச ஒருமைப்பாடு பலப்படும்.”

- சென்னை திருப்பாவை - திருவெம்பாவை மாநாட்டில் (11.12.1978) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - (‘தினமணி - 13.12.1978)

தொடர்ச்சி 10 பக்கம்

காஞ்சிபுரம் கூரம் கிராமத்தில் உள்ள கோயிலில் கூரத் தாழ்வாரின் (ராமானுஜரின் சீடர்) ஆயிரமாவது பிறந்தநாளையொட்டி திருப்பாவை பாடிக்கொண்டு சென்ற நம்பிள்ளை யையும், அவருடன் சென்றவர்களையும் பட்டாச்சாரியார்கள் தடுத்து நிறுத்தினர் (31.1.2010). ‘தமிழில் பாசுரமெல்லாம் பாடப்படாது, ஆச்சாரம் கெட்டு விடும் - வெளியே போங் கோஎன்றபடி பட்டச்சாரியார்கள் அவர்களைப் பிடித்து தள்ளினர் (நக்கீரன், 10.2.2010).

*******

ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்வது நியாயம் அல்லாதது. தமிழில் அர்ச்சனை என்பது வெறும் வேஷம்.”

- ஜி.எஸ்.வி.கணேச சிவாச்சாரியார்

தலைவர், தமிழ்நாடு அர்ச்சகர்கள் சங்கம்

(‘தினமணி, 2.9.2002)

*******

வைணவப் பெண்மணி என்று கூறப்படும் ஆண்டாள் பாடியதாகக் கூறப்படும் திருப்பா வையில் இரண்டாவது பாடல்:

நாட்காலை நீர் ஆடிஎன்று தொடங்கு கிறது.

அதில்செய்யாதன செய்யோம்

தீக்குறளை சென்றோதோம்

என்ற ஒரு வரி வருகிறது.

இதற்குலோகக் குருஎன்று, குடுமிகள் உச்சியில் பல்லக்குக் கட்டித் தூக்கிச் சுமக்கும் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன விளக்கம் சொல்லுகிறார்? “தீய திருக் குறளை சென்று ஓதமாட்டோம்என்று பொருள் சொல்லுகிறார்.

குறளை என்பதற்கு என்ன பொருள் தெரியுமா?

கோள் சொல்லுதல் என்பதாகும்.

இதனைத்தான் உள்ளத்தில் குத்திட்டு நிற்கும் வெறுப்பின் அடிப்படையில் இப்படிக் கூறுகிறார்.

கோவில்களில் வழிபாட்டு மொழி தமிழ் என்று சொன்னால், ‘துக்ளக் (18.11.1998) என்ன தலையங்கம் தீட்டுகிறது? தலைப்பேமொழி ஆர்வமா? மத துவேஷமா?’

என்ன எழுதுகிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்?

நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும், பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும்; புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல. ஒலிக்கு என்று வரிந்து கட்டிக் கொண்டு ஸம்ஸ்கிருதத்திற்காக எழுது கிறாரே இது ஸம்ஸ்கிருத மொழி வெறியில்லையா?”

சர்வசக்தி கடவுள்(?) மொழிகளின் ஒலிக்கெல்லாம் மயங்குவாரோ!”

*******

தமிழ் வழிபாட்டு உரிமை பிரச்சினையில்ஆனந்த விகடன் (8.11.1998) என்ன எழுதியது?

விலைவாசி உயர்வு போன்ற பல பிரச் சினைகளில் சிக்கித் தவிக்கும் மக்களைத் திசை திருப்பும் பழைய வார்த்தைதான் என்று எழுதுகிறதே.

இந்து முன்னணி ராமகோபால அய்யர்வாள் என்ன பேசுகிறார்? தமிழ் அர்ச்சனையால் விலைவாசி குறைந்து விடுமா? (திருச்சியில் 15.11.1998)

காஞ்சி சங்கராச்சாரியாரும் இதே வார்த்தைகளைகுமுதத்தில்பேட்டியாகச் சொல்லுகிறார்.

தமிழ் தமிழர் உணர்வு அடிப்படையில் எதைச் செய்தாலும் இவற்றால் விலைவாசி குறையுமா என்று கேட்கிறார்களே திருப்பி நம்மால் கேட்கமுடியாதா? கோயில் கும்பாபி ஷேகம் செய்கிறீர்களே, தேரோட்டம் நடத்து கிறீர்களே, நாள்தோறும் கோயில்களில் ஆறு கால பூஜைகள் நடத்துகிறீர்களே, தீபாவளி கொண்டாடச் சொல்லுகிறீர்களே, இவற்றால் விலைவாசி குறைந்துவிடுமா? கேள்விக்கு என்ன பதில்?

*******

இவர்கள்  இப்படி இருப்பது ஒரு புறம் இருக்கட்டும். எல்லாவற்றையும் முற்றும் து(தி)றந்த முனிவர் ஒருவர் இருந்தாரே காஞ்சி மடத்தில், அவர் என்ன சொன்னார் தெரியுமா?

சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம் பொருளுக்குச் சமானம். பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட பகுதியோ, தேசமோ கிடையாது. இதைத்தான் சர்வவியா பகத்வம் என்பார்கள்.

உலகில் முதன் முதலில் தமிழ் மொழி தோன்றிற்று; அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகுதான் ஸம்ஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்ச நூற்றாண்டுகளுக்கு முன்புதான் பாணினி என்ற ஒருவர் இந்த சமஸ்கிருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான் அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டி ருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் பாஷை சாஸ்திரம் (philology) என்று சொல்லக்கூடிய சாஸ்திரத்தில் சமஸ்கிருதந்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட்டுள்ளது.” (“ஞான வழி, வானதி பதிப்பக வெளியீடு)

முற்றும் துறந்த முனிவருக்கே சமஸ்கிருதம் தனது தாய் மொழி என்னும் பார்ப்பனவெறி தலைக்கு மேல் வழிகிறது. இது துக்ளக் பார்வையில் மொழி நக்சலிசம் இல்லையா?

ஒரு கேள்வி: பிரம்மத்திற்குச் சமமான ஸம்ஸ்கிருதம் (?) ஏன் செத்த மொழி ஆயிற்றாம்?

******

திருவள்ளுவர் பகவன் என்ற பார்ப்பன ருக்கும், ஆதி என்ற பறைச்சிக்கும் பிறந்தவர் என்கிறார்சேரன்மாதேவிபுகழ் .வே.சு.அய்யர் (THE KURAL OR THE MAYIMS OF THIRUVALLUVAR (1916)

******

மேனாள் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் நாகசாமி என்ற பார்ப்பனர் மனுதர்மத்தின் சாரம் திருக்குறள் என்று பொருள் படும்படி.

“THIRUKKURAL AN ABRIDGEMENT OF SASTRAS”

என்று ஒரு நூலையே எழுதியுள்ளார்.

******

கேள்வி: பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப் படுவதன் மூலம் தமிழர் இடையே நல்லுறவு - நல்லிணக்கம் ஏற்படும் என்று கருநாடக முதல்வர்  எடியூரப்பா கூறியுள்ளாரே?

சோ பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே. (‘துக்ளக் - 19.8.2009)

******

திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டத் தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமே யாகும். வாழ்வின் வழிமுறைகளும், குறிக்கோளும் அதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

- சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி

(‘தினத்தந்தி, 15.4.2004)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் திருக்குறளும், பிறப்பின் அடிப்படையிலேயே வேதம் பேசும் மனுதர்மமும் ஒன்றா?

******

கேள்வி: தமிழ்மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?

பதில் : காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும். (‘தினமலர்- வாரமலர் 13.6.2004)

******

தமிழகப் பொதுப் பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம்: தமிழகத் திற்குக் கருநாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். கருநாடக அரசு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாததால் இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7 ஆம் தேதிதான் திறந்துவிட்டோம்.

டவுட்தனபாலு: அதனால என்னங்க. பெங்களூருல திருவள்ளுவர் சிலை திறந்து விட்டோமா இல்லையா? அதுக்கப்புறம் டெல்டாப் பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன? (‘தினமலர் 18.8.2009)

******

கேள்வி: தமிழர்களின் புத்தாண்டு தை முதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதல் அமைச்சர்?

பதில்: எல்லாம் கிடக்க, கிழவியை மணையில் அமர்த்திய கதைதான். (‘கல்கி 27.1.2008)

******

தமிழ்ப் புத்தாண்டு இதெல்லாம் வழக்கத் திற்கு விரோதமானது, நம்பிக்கைக்கு விரோத மானது. (துக்ளக் 27.1.2010)

தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக் கூட லாயக்காக மாட்டோம். (‘துக்ளக் 23.6.2010)

கேள்வி: தமிழை வைத்து இன்னும் எத்தனை விதங்களில் என்னென்ன விழாக்கள் நடத்தலாம்?

பதில்: தமிழுக்கு வாய்ப்பா இல்லை? நிறைய வாய்ப்பிருக்கிறது! கலைஞர் வளர்த்த தமிழ் மாநாடு, கலைஞரால் வளர்க்கப்பட்ட தமிழ் மாநாடு, கலைஞர் சிறப்பித்த தமிழ் மாநாடு, கலைஞரால் வளர்ந்த தமிழ் மாநாடு என்று எவ் வளவோ விழாக்கள் நடத்தலாமே! கலைஞர் ரெடி தமிழகம் ரெடி தமிழ் ரெடியா? (‘துக்ளக் 4.8.2010)

சென்னை மாநகரில் வணிக விளம்பரங் களில் தமிழில் எழுதுவது மொழி நக்சலிசம் (‘துக்ளக் - 16.9.2010).

******

தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில்தென்கிழக்கு ஆசியாவில் சமஸ்கிருதம்என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள அன்றைய  மத்திய  மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக விருந்த முரளி மனோகர் ஜோஷி சென்றி ருந்தார்.

அதில் அவர் கூறியதாவது: உலகில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதமே என்றார். (‘தினமலர், 22.5.2001)

******

பிரபல இசை வல்லுநர் டி.வி.கோபால கிருஷ்ணன்  ஆனந்த விகடன்இதழுக்காக பிரபல இசைக்கலைஞர் ஜேசுதாஸ் அவர் களைப் பேட்டி கண்டார். (20.12.1992).

இதோ ஜேசுதாஸ்:

யாராவது இந்த சீசன்லே எங்கெல்லாம் பாடறேள்?னு கேட்டா வீணா லிஸ்ட் கொடுத்திண்டிருக்க வேண்டாமே, மியூசிக் அகாடமிதவிரனு ஒரே வார்த்தையில சொல்லிட்டுப் போயிண்டே இருக்கலாமே- என்று ஜேசுதாஸ் பதில் சொல்லுகிறார்.

டி.வி.கோபாலகிருஷ்ணன்:

நாம் எல்லோரும் ரொம்ப DETACHED PERSONS இல்லையா? நமக்குள்ளேயே முதல்ல ஒண்ணு சேர மாட்டோமே! அப்புறம் எங்கே வரிஞ்சி கட்டுறது?! இப்போ நீங்க இருக்கிங்க. உங்க கச்சேரிக்கு வர்ற கூட்டத்தைப் பார்த்து நாங்க வாய்ப் பிளக்கிறோம். ஆனால் நம்மள்ல சில பேருக்கு அதுவே வயித்தைக் கலக்குகிறதே! வயித்தெரிச்சல்லபிரமாண்ட கூட்டத்துக்குக் காரணம் - அவருக்கு இருக்கிற சினிமாப் புகழ்னு வாய் கூசாம சொல்லுறவங்க கூட இருக்காங்களே!

ஜேசுதாஸ்: இல்லே டிவிஜி, அவங்களுக்கு இருக்கிற பாரம்பரியம் எனக்கு இல்லையே! அந்த ஆதங்கம் கூட இருக்கலாமில்லையா?

டி.வி.ஜி: தயவுப் பண்ணி நமக்குப் பாரம்பரியம் இல்லேன்னு சொல்லிடாதீங்க.

ஜேசுதாஸ்: “இல்லே, தியாகராஜர் என் தாத்தாவை மடியிலே உட்கா£ர்த்தி வச்சுண்டு பாட்டுப்பாடி  சாதம் ஊட்டியிருக்கார்னு சொல்ற வங்க மத்தியிலே நான் பாரம்பரியம் இல்லாத அந்நியன் தானே!  அதைத் தான் சொன்னேன்!’

(‘ஆனந்த விகடன், 20.12.1992)

இதன் பொருள் என்ன? மியூசிக் அகாடமியில் சான்ஸ் கிடைக்க வேண்டுமானால் ஒருவரின் முதுகில் பூணூல் தொங்க வேண்டும் - தமிழ்ப்பாடல்களை எல்லாம் தப்பித் தவறிக்கூடப் பாடக்கூடாது. அப்படியே பாடியே தீர வேண்டுமானால் அந்தத் தமிழ்பாட்டுக்குப் பெயர்துக்கடாபாட்டே!

******

1946ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி தந்தை பெரியாரின்குடிஅரசுஇதழிலே ஒரு தகவல்:

இந்த ஆண்டு திருவையாற்றில் நடை பெற்ற தியாகராஜ அய்யர் உற்சவத்தில் இசை யரசு தண்டபாணி தேசிகர் ஆரம்பத்தில்சித்தி விநாயகனே!’ என்று தொடங்கும் பாட்டைப் பாடினாராம்.

அடுத்தப்படி கச்சேரி செய்ய வந்த அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், “தேசிகர் தமிழ் பாடி சன்னிதானத்தைத் தீட்டுப் படுத்தி விட்டார். நான் இந்த மேடையில் பாடமாட்டேன்என்று கூச்சலிட்டு விட்டுத் தாம் தோம் என்று தாண்டிக் குதித்தாராம்.

தீட்டுக் கழித்த பிறகுதான் பாடினார்.

இதுகுறித்து அன்றைய மு.கருணாநிதி அவர்கள்குடிஅரசில்தீட்டாயிடுத்துஎன்ற தலைப்பில் எழுதினார்.  (‘குடிஅரசு, 1.2.1946)

******

இசை என்று சொல்லமாட்டார்கள் சங்கீதம் என்றே சொல்லுவர்.

இசை மும்மூர்த்திகள் என்றால் காலத்தால் மூத்த தமிழர் களான சீர்காழி முத்துத் தாண்டவர் (1525 - 1600), அருணாசலக் கவிராயர் (1711 - 1779), தில்லை விடங்கன் மாரி முத்தாப் பிள்ளை (1712 - 1787) ஆகியோரை ஆரியர்கள் ஏற்க மாட்டார்கள்.

மாறாக இசையை சங்கீதமாக்கி மும் மூர்த்திகள் என்று மூவரைக் குறிப்பிடுவார்கள்.

தியாகையர் (1711-1779), சாமா சாஸ்திரி (1763), முத்துசாமி தீட்சிதர் (1775) இவர்களைத்தான் தூக்கி சுமப்பதில் சுகம் காண்பார்கள் இவர்கள். இந்த மும்மூர்த்திகள் வாயில் சுட்டுப் போட் டாலும் தமிழ்ப்பாட்டு வராது - தெலுங்கு சமஸ்கிருதக் கீர்த்தனைகள் தாம்.

மேற்கண்ட எடுத்துக் காட்டுகளுக்கு பதவுரை - பொழிப்புரை - கருத்துரைகள் தேவைப்படாது.

பார்ப்பனர் சங்கராச்சாரியார்களாக இருந் தாலும் சரி, பத்திரிகையாளர்களாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி - கொஞ்சம் கூடப் பிசிறு ஏதுமின்றி, தமிழ் என்றாலே ஒருவகை வெறுப்பு - காழ்ப்பு, எதிர்ப்பு என்ற நஞ்சினை உள்ளத்தில் தேக்கி வைத்து உதட்டால் வசை பாடுகிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ள்ளலாம்.

இந்தப் பட்டியலில் பா... பிரமுகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்? இந்திக்கும், சமஸ்கிருதத்துக்கும் லாலி பாடக் கூடியவர்கள் தானே - செம்மொழி நிறுவனத்தை சிதைத்துச் சின்னா பின்னம் ஆக்கும் கட்சிக்குச் சொந்தக்கார்கள் தானே.

அதனால் தானே அறிஞர் அண்ணா அவர்கள் இவ்வாறு சொன்னார்.

தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழியில் பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்புக் கொள்வதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீது தான்  என்றார் அறிஞர் அண்ணா (‘திராவிட நாடு - 2.11.1947, பக்கம் 18).

தெய்வீகத் தமிழால் இணைவோம் - தேசமெங்கும் தமிழர்களை ஒருங்கிணைப்போம்!” என்ற காணொலி காலத்தின் அவசியத்தைப் பொறுத்ததே!

பிரதமர் மோடி இப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வரும்போது திருக்குறளைப்பற்றியும், தமிழைப்பற்றியும் பேசவில்லையா?

திராவிடப் பூமியாகிய தந்தைபெரியார் மண்ணாகிய தமிழ்நாட்டில் - தமிழ் விரோத சக்திகள் அடையாளம் காணப்பட்டதால் அதனை மறைக்கத்தான் படாத பாடுபடுகிறார்கள், பல தந்திரங்களையும் பின்பற்றுகிறார்கள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

Post a Comment