பா.ஜ.க. ஆட்சியில் வேலை வாய்ப்பு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 31, 2021

பா.ஜ.க. ஆட்சியில் வேலை வாய்ப்பு?

 பாஜக ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதில் முன்னுரிமை தருவதாக தேர்தல் வாக்குறுதிகளில் கூறியது. ஆனால், 2016 ஆம் ஆண்டில் பாஜக அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலைவாய்ப்புகள் குறைந்தன என்றே ஆய்வுகள் கூறுகின்றன.

உலக வங்கியின் தகவலின்படி 2017இல் வேலைவாய்ப்பு சதவிகிதம் 51.9 சதவிகிதமாக குறைந்ததுள்ளது. இந்த அளவிற்கு வேலைவாய்ப்புகள் குறைந்ததற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கையே காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். 

மோடி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை இழப்பிற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை இதுவரை வெளியிடவில்லை. கடைசியாக, கடந்த 2016 ஆம் ஆண்டு வேலையின்மை குறித்த அதிகாரப் பூர்வமான தரவை வெளியிட்டது. அது 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரம் ஆகும். அப்போது மன்மோகன் சிங் ஆட்சி நிலவியது.

மோடி ஆட்சிக் காலகட்டமான 2014-2015 2016-2017 போன்ற காலகட்ட புள்ளிவிவரம் வெளியாகவில்லை. இதனால் இந்திய அரசின் வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்களை மதிப்பிடுவதில் சிக்கல்கள் நிலவுகின்றன எனப் பொருளாதாரம் சார்ந்த வல்லுநர் குழு கூறியிருந்தது. இதன் விவரங்கள் வெளியில் வந்தால் மோடி ஆட்சியின் அவலம் வெளிப்பட்டு விடுமே - அதுதான் காரணம்!

பாஜக அரசு வேலைவாய்ப்பை உருவாக்க ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா போன்றமாயாஜாலவார்த்தை அடங்கிய திட்டங்களை கடந்த  2015-2016 ஆண்டுகளில் அறிவித்தது, ஆனால் அதே போல் அறிவித்த டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல திட்டங்கள் அனைத்தும் தோல்வியி லேயே முடிந்தன. ஆகவே தான் 2019-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இந்தத் திட்டங்கள் குறித்துப் பேசாமல் இருந்தனர்.

பாஜக ஆட்சிக்கு வரும் முன்பு 2012 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை  (பெரும்பாலும் காங்கிரசு ஆட்சி) 11.54 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 394 வேலைவாய்ப்புகள் மட்டுமே பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்டன என்று இந்திய வர்த்தக கூட்டமைப்பு புள்ளிவிவரங்களோடு கூறியுள்ளது.

இது மிகப் பெரிய வீழ்ச்சி அல்லவா!

படித்த பட்டதாரிகள் லட்சக்கணக்கான பேர் ஆண்டுக்காண்டு கல்லூரிகளில் இருந்து வெளியே வந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை!   வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது

2015-2016 நிதியாண்டு முதல் 2018-2019 நிதியாண்டு வரை உருவான புதிய வேலை வாய்ப்புகளில் 54 சதவிகிதம் மகராட்டிரா, குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உருவாக்கப்பட்டுள்ளன மகாராட்டிராவில் 29.27 சதவிகிதம், குஜராத்தில்14.40 சதவிகிதம், தெலங்கானாவில் 9.92 சதவிகிதம் உருவாக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வெறும் 5.48 சதவிகிதம் மட்டும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மத்திய அரசின் தவறான கொள்கைகளால்

2014ஆம் ஆண்டிலிருந்து 2018-ஆம் ஆண்டுவரை 4.7 கோடி பேர் வேலை இழந்துவிட்டனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று கூறிக்கொண்டு வந்த மோடி பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி எனத் தொலைநோக்கின்றி எடுத்த நடவடிக்கை திட்டங்களால் அதிக அளவு வேலைவாய்ப்பைத் தந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. இதன் விளைவாக 4.7 கோடி பேர் வேலை இழந்தனர். 2011-12 ஆம் ஆண்டுகளில் வேலைக்குச்செல்வோர் எண்ணிக்கை 30.4 கோடியாக இருந்தது. அந்த எண்ணிக்கை மோடி ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டில் 28.6 ஆக குறைந்துவிட்டதாக தேசிய புள்ளி விவர ஆணையம் 2018-ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது, அதாவது இவர் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை கொடுப்பதற்கு பதிலாக இருக்கும் வேலையைப் பறித்துள்ளார்.

இந்த வெட்கக் கேட்டில் பா... வெளியிட்டுள்ள தமிழ்நாட்டுக்கான தேர்தல் அறிக்கையில் 50 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், ...தி.மு.. தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு என்றும் மணலைக் கயிறாகத் திரித்துள்ளன.

புதிதாக 18 வயதில் வாக்களிக்கப் போகும் இருபால் இளைஞர்களே, உங்கள் எதிர்காலத்தைக் கேள்வி குறியாக்கும் மத்திய - மாநில ஆட்சிக்கு எதிராக வரும் தேர்தலில் உங்கள் எண்ணத்தைப் பிரதிபலிப்பீர்!

தி.மு.. கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்!

No comments:

Post a Comment