சமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்

ஓரணியாய் நின்று நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி தொடரச் செய்வோம்!

கம்யூனிஸ்ட் மாநாட்டிற்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!

மதுரை, பிப்.19 மதுரையில் நேற்று (18.2.2021) மாலை நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின்  தமிழ் மாநில அரசியல் எழுச்சி மாநாட்டிற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வருமாறு:

பேரன்புடையீர்,

வணக்கம்.

தமிழ் மாநிலஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாடுஒரு சரியான கால கட்டத்தில், நாட்டில் எழுந்து நிற்கும் பிற்போக்கு மதவாதசக்திகளை எதிர் கொள்ளவும், திமிர் முறிக்கும் கார்ப்பரேட்டுகளின் ஏகபோகக் கொள்ளைகளுக்குக் கொள்கை வகுக்கும் போக்கின் ஆணிவேரை வீழ்த்தவும், கதிர் அரிவாளும், அரிவாள் சுத்தியலும் தேவையான தருணம் இது! வெகு மக்கள் மத்தியில் எழுச்சியை - புரிந்துணர்வை ஏற்படுத்திடவும், தேவைகளின் அவசியம் கருதி, காலங் கருதி ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத் தக்கதும், பாராட்டத் தக்கதும் ஆகும்.

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.5 விழுக்காடாக வீழ்ச்சி அடையும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநரே தெரிவித்துள்ளார்.

2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று பிரதமர் மோடி அறிவித்தது வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகும்.

நாட்டு மக்கள் வறுமையின் உச்சத்தில் அல்லாடிக் கொண்டுள்ள சூழலில், மக்களின் கவனத்தைத் திசை திருப்பிட மதவாதத்தைக் கையில் எடுத்துக் கொண் டுள்ளது மத்தியில் பிஜேபி தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி.

ஏற்கெனவே இருந்து வரும் பொருளாதார வீழ்ச்சி போதாது என்று, கரோனா என்ற கொடு நோய் மக்களின் வாழ்வாதாரத்தை - பிணத்தைக் குத்திக் கிழித்து வயிறு நிரப்பும் கழுகு போல குதறிவிட்டது.

இந்த நிலையிலும், “கிடந்தது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மணையில்வைஎன்பது போல ராமன் கோயில் கட்டுவதற்கு ஓர் அரசே முன்வருவதும், பிரதமரே தோள்தட்டுவதும் சகிக்கவே முடியாத திசை திருப்பும் வேலையாகும். அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் - மதச்சார்பின்மையைப் படுகுழியில் தள்ளும் பாசிச மாகும். சமூக நீதியை முற்றிலும் ஒழித்துக்கட்ட போர்க் கால அடிப்படையில் மத்திய ஆட்சி வேகம் காட்டு கிறது. மாநில உரிமைகள் பறிப்பு நாளும் நடைபெறும் போக்கு - ஒற்றை ஆட்சி முறைக்குக் கொண்டு செலுத்தும் அபாயமாகும்.

விவசாயத்தை பாவத்தொழில்என்று கூறும் மனு தருமம் - அதாவது ஹிந்துத்துவம் - விவசாயத்தை கார்ப்பரேட்டுகளின் கைகளில் தாரை வார்த்து, விவசாயப் பொருளாதாரத்தினை குரங்கு கையில் கொடுத்த அப்ப மாக்கிவிட்டது.

மத்திய பாஜக அரசு தான் இந்த நிலை என்றால், மாநிலத்தை ஆளும் அஇஅதிமுக ஆட்சியோ, கட்சியிலும், கொடியிலும் அண்ணா உருவத்தைப் பொறித்திருந்தும் - அதற்கு நேர்மாறாக மத்திய ஆட்சி யின் கொத்தடிமையாக இருப்பதில் மார்தட்டிப் பெருமை கொள்கிறது. அந்த அளவுக்கு மடியில் கனம் இருக்கிறது என்று பொருள்.

நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் - திமுக அணியில் முற்போக்கு சக்திகள் - இடது சாரிகள் - மதச்சார்பின்மை - சமூக நீதியில் நம்பிக்கைக் கொண்ட கட்சிகள் ஒரு வெற்றிக் கூட்டணியாக இந்த கொள்கை வழி கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும் வெற்றியை ஈட்டி இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த வரலாற்றை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் ஓரணியில் ஓங்கி நின்று, பிற்போக்குச் சக்திகளுக்கு வட்டியும் முதலுமாக பாடம் கற்பிக்க வேண்டும்.

இந்தப் பாடம் மத்தியில் உள்ள பாஜக - சங்பரி வார்களுக்கு முடிவுரையாக அமைய வேண்டும். தமிழ் நாட்டை ஆளும் அதிமுக ஆட்சிக்கு உரியவகையில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில அரசியல் மாநாடு இந்த வகையில் வழிகாட்டும் மாநாடாக அமையும். மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெற வாழ்த்துகள்! மாநாடு வெற்றிபெற இரவு பகலாக உழைத்த செஞ்சட்டைத் தோழர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள் உரியதாகுக!

‘‘திராவிடம் வெல்லும்!''

குறிப்பு: மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மேற்கண்ட வாழ்த்துச் செய்தியைப் படித்தார். அதனை வரவேற்றுப் பலத்த கரவொலி

எழுந்தது.

Comments