ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: புதுச்சேரியில்  ஆரிய சூழ்ச்சி வென்றது, திராவிடர் ஆட்சி வீழ்ந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

 - எஸ். பூபாலன், திண்டிவனம்.

பதில்: வீடணர்களின் துணையோடு - ஆரியமாயை அதன் வேலையைக் கச்சிதமாகச் செய்து முடித்தது. என்றாலும் இந்த ஆரிய சூழ்ச்சியின் வெற்றி - தற்காலிகமானதே - நிரந்தரமானதல்ல.

காவிஇருட்டைவிரட்டுங்கள்! மே 2ஆம் தேதிக்குப் பிறகு அங்கே வெளிச்சம் வரும்.

கேள்வி  2: தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்க ளுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரி லால் 2020 ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கினார். இச்சட்டம் உடனடியாக (டிசம்பர் 7, 2020) அமலுக்கு வருவதாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. அது முறையாக நடைமுறைப்படுத்தப் படுகிறதா?

 - சீ. இலட்சுமிபதி, தாம்பரம்

பதில்: பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தகவல் அறியும் சட்டம் மூலம் முயற்சிக்கலாம்!

கேள்வி 3: முன்னாள் அய்..எஸ்.அதிகாரி சகாயம் அவர்களின் அரசியல் வருகை மக்களி டையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருது கிறீர்களா?

  - வேலாயுதம், வேளச்சேரி.

பதில்: மற்றொரு அண்ணா ஹசாரேவாக ஆகாமல் இருந்தால் நல்லது; கட்சி ஆரம்பிக்காமலே பொது ஒழுக்கச் சிதைவு தடுப்பு இயக்கத்தை துவக்கி, கட்சி வேறுபாடில்லாமல் கடைப்பிடிக்கும் இயக்க மாக அதனை நடத்தினால் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதலாமே!

கேள்வி 4: அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடு வாழ் மக்களுக்கு விசா அளிக்கும் வகையில் ஜோ பைடன் அரசு புதிய மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. சொந்த மக்களை வெளியேற்ற நினைக்கும் பாரதிய ஜனதா பாடம் கற்குமா?

- சி.இளையராஜா, பிலாக்குறிச்சி

பதில்:: டிரம்ப் ஆட்சி போலவே, இன்றும் மோடி தலைமையிலான பா... ஆட்சி  பாடம் கற்றுக் கொள்ளாதது போன்ற நிலையே உள்ளது. காலம் சரியான பாடத்தைக் கற்றுத்தரக் காத்திருக்கிறது!

கேள்வி 5: தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரி யின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் என்.சி.சி,  என்.எஸ்.எஸ் வரிசையில் மதவெறி அமைப்பான .பி.வி.பி. இடம்பெற்றுள்ளதே!

- சே.செல்வராஜ், தென்காசி

பதில்: தவறான முன்மாதிரி. காமராசரை உயி ரோடு (டில்லியில்) எரிக்க முயன்ற கூட்டத்தின் உறவுகளுக்குக் காமராசரின் கல்லூரியில் இடமா? மகா வெட்கக்கேடு!

கேள்வி 6: ராமநாதபுரம் அருகில் கோரவள்ளி என்னும் கிராமத்தில் ஒரு கல்லூரி மாணவியை பேய் ஓட்டுவதாகக் கூறி அடித்தே கொன்றிருக்கிறார்களே? மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டங்கள் கட்டாயம் என்பதை இது போன்ற நிகழ்ச்சிகள் தெரிவிக் கின்றனவா?

 - தென்றல், ஜெயங்கொண்டம்

பதில்: இதுபோன்ற நரபலி, மூடத்தனங்களை முன்கூட்டியே தடுக்கும் ஒரு தனிப்பிரிவை தமிழகத்தில் வரவிருக்கும் புதிய ஆட்சி மூலம் எதிர்பார்ப்போமாக! பகுத்தறிவுப் பாதையில் ஒருங்கிணைய வேண்டும்.

கேள்வி 7: செம்மொழி விருதுகள் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படவில்லையே, அய்யா! இதற்கு என்னதான் தீர்வு?

- சித்தார்த்தன், பொன்னமராவதி

பதில்: தமிழக ஆட்சி மாற்றம்தான் ஒரே தீர்வு! உதயசூரியன் உதித்தால் இருள்விலகி செம்மொழியின் செங்கதிர்கள் ஒளிபாய்ச்சும்!

கேள்வி 8: ஓய்வு பெற்று பல ஆண்டுகளாகியும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்குப் பணி ஓய்வுக் கொடை வழங்கப்படவில்லை என்று ஓர் ஊழியர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளாரே- அரசு இவர்களை கவனிக்காதா?

- நடராசன், அம்பத்தூர்

பதில்: பத்திரிகை விளம்பரங்கள் - முழுப் பக்க விளம்பரங்களை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடிகள் கடன் வாங்கிச் செய்யும் நிலையில், அந்த விளம்பரச் செலவை நிறுத்தி, ஏழைத் தொழிலாளர்களுக்கு உரிய பணி ஓய்வுக் கொடை வழங்கப்பட்டிருந்தால், விளம்பரங்களால் ஏற்படாத பயன் அதன் மூலம் கிட்டுமே! என்ன செய்வது, அரசுக்குத் தெரிந்தது அவ்வளவு தான்!

கேள்வி 9: வேப்பமரத்தில் திரவம் வடியும் இயற்கையான நிகழ்வை கடவுள் சக்தி என்று புரளியைக் கிளப்பும் மோசடியை சட்டப்படி தடை செய்ய முடியாதா?

- சி.பகுத்தறிவு, திருப்பூர்

பதில்: ஆறாவது பதிலையே இதற்கும் பதிலாகக் கூறுகிறோம். அறிவியல் மனப்பான்மையைப் பரப் பும் காவல்துறைப் பிரிவைக் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். இதற்காக கருத்துப் பிரச்சார மழையை தேர்தல் முடிந்த பிறகு தொடர்ந்து நடத்துவோம்.

Comments