அருமைத் தோழர் திண்டுக்கல் சுப. ஜெகநாதன் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!

திண்டுக்கல்லில் பிரபல குற்றவியல் மூத்த வழக்குரைஞரும், திராவிடர் கழகத்தின் மேனாள் மாவட்டத் தலை வரும், சீரிய கொள்கையாளருமான அருமைத் தோழர் சுப. ஜெகநாதன்  (வயது 82) அவர்கள் இன்று (24.1.2021) அதிகாலை  3 மணியளவில் திண்டுக் கல்லில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தியை மாவட்ட தலைவர் தோழர் வீரபாண்டியன் அவர்கள் மூலம் அறிந்து மிகுந்த துயரமும், துன்பமும் அடைந்தோம்.

அருமைத் தோழர் சுப. ஜெகநாதன் அவர்கள் நமது உற்ற தோழர்களில் ஒருவர். மூத்த வழக்குரைஞரும், சட்டக் கல்லூரியின் முதல் நமது அருமை தோழருமான கொ. சுப்ரமணியம் அவர்களும், பொதுக் குழு உறுப்பினர் திண்டுக்கல் தோழர் நாராயணன் அவர்களும் - அம்மூவரை நான் எப்போதும் 'மூவேந்தர்கள்' என்று அழைப்பேன்.

தோழர் ஜெகநாதன் அவர்கள் பாரம்பரியம் மிக்க பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். மிகுந்த கொள்கை ஆழமும், அடக்கமும், எவரிடத்திலும் மரியாதை பொங்க நடப்பதிலும் ஓர் எடுத்துக்காட்டான பெரியார் பெருந் தொண்டர்.

நீண்ட காலமாகவே அவருக்கு இதய நோய் பிரச்சினை உண்டு என்பதால் தனது நடவடிக்கைகளைக் குறுக்கிக் கொண்டார்.

அவரது இழப்பு அவரது குருதிக் குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய இழப்போ அதைவிட இயக்கத்திற்குப் பெரிய இழப்பு.

மாநகராட்சி வழக்குரைஞராக  இருந்து முத்திரை பதித்த நேர்மையாளர். அவரது மறைவில் துயருற்றுள்ள அவரது வாழ்விணையர், பிள்ளைகள், குடும்பத்தினர், கழகக் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு நமது வீர வணக்கம்.

 

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்  

சென்னை

24-1-2021

குறிப்பு: உடனடியாக தோழர் வீரபாண்டியன் அவர்களிடத்தில் - மூத்த வழக்குரைஞர், கழகத்தின் காப்பாளர் தோழர் திண்டுக்கல் கொ. சுப்ரமணியன் அவர்களிடமும் தொலை பேசியில் ஆறுதலும், அனுதாபமும் தெரிவித்தார் கழகத் தலைவர்.

திண்டுக்கல் சுப.ஜெகநாதன் மறைவுக்கு கழகத் தலைவர் விடுத்த  இரங்கலறிக்கையை பார்த்து ஆறுதலடைந்து  அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அவரது மகன் செல்வ சுப்பிரமணியன் தமிழர் தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்பொழுது அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆறுதல் கூறினார்.

Comments