செய்தியும், சிந்தனையும்....!

பதில் உண்டா?

கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்திட முதலமைச்சரால் ஏற்பாடு செய்ய முடியுமா? - தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா கேள்வி.

சரியான கேள்வி.

வழுவாமல், விலகாமல், நெளியாமல் நேரடியான பதில் தேவை. முருகன் தமிழ்க் கடவுள் - எங்கள் முப்பாட்டன் என்பவர்களுக்கும் சேர்ந்த கேள்விதான் இது.

அச்சம் என்பது இல்லையே!

10 நாட்களில் 1 புள்ளி 60 லட்சம் இலக்கு; ஆனால், கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரம் - காரணம், அச்சமாம்!

முதலமைச்சர் என்பதில் தொடங்கி அனைத்து அமைச்சர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு, அச்சம் இல்லை, அச்சம் என்பது இல்லையே என்று காட்டவேண்டாமா?

வட்டிக் கடையா?

தெற்கு இரயில்வேக்கு 2020-21 ஆம் ஆண்டில் இலாபம் ரூ.2173 கோடி. 

சிறப்பு இரயில் என்று சொல்லி, முதியவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் ரத்து போன்றவற்றால் இந்த இலாபம். இரயில்வே சர்வீஸ் என்பது மாறி, இரயில்வே வட்டிக் கடை என்று ஆகிவிடக் கூடாது.

பேசமாட்டார், பேசமாட்டார்!

விவசாயிகளிடம் பிரதமர் நேரடியாகப் பேசவேண்டும்: - தளபதி மு.க.ஸ்டாலின்

பிரதமர் விவசாயிகளிடமும் பேச மாட்டார் - செய்தியாளர்களிடமும் பேசமாட்டார். 

‘‘அனல் இல்லா இடத்துப் புகையில்லை'' என்னும் ‘கேவலம்' மத சித்தாந்தமோ!

‘‘இந்த ஆட்சி எவ்வளவுக் கேவலமாக இருக்கிறது பாருங்கள்'' என்று பேசினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பேசியுள்ளாரே!

அமைச்சரின் பேச்சு - இந்த ஆட்சி கேவலம் என்ற மதச் சித்தாந்தத்தைச் சேர்ந்ததோ!

வளருங்கள், இப்படி!

சைக்கிளில் 1200 கி.மீ. தூரம் தனது தந்தையை அழைத்துச் சென்ற சிறுமி - பிரதமர் பாராட்டு.

பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்கவேண்டும். அதிகம் செல்லம் கொடுத்து சோம்பேறியாக வளர்க்கக் கூடாது.

முடக்கம்! முடக்கம்!!

டில்லியில் இணைய சேவை முடக்கம்.

சரிதான்; உண்மைத் தகவல்கள் கசிந்துவிடக் கூடாதே!

ஜாதி சங்கத் தலைவரா சங்கரலிங்கனார்?

தியாகி  சங்கரலிங்கனார் சிலைக்கு நாடார் சங்கங்கள் மரியாதை.

தலைவர்களை ஜாதி சங்கத்துக்குள் அடைக்கும் நிலையா?

ப(ச்)சையைத் தேடி!

திரிணாமுல் காங்கிரசிலிருந்து மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் விலகல்

ஒரு கட்சியின் பெயரில் தேர்தலில் நின்று வெற்றி பெறுவது - பிறகு ஆதாயம் கருதி ப(ச்)சையை நோக்கி வேறொரு கட்சிக்குப் பறப்பது கடைந்தெடுத்த மோசடிதானே!

ரத்துக்கு ரத்து!

அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர் பணியை முன்னாள் அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். புதிய அதிபர் ஜோபைடன் டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்தார்.

திருநங்கை என்று அவர்களுக்கு அழகிய பெயரைச் சூட்டி அவர்களின் மரியாதையை உயர்த்தினார் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அமெரிக்காவிலோ புதிய அதிபர் அதனை அங்கீகரித்துள்ளார்.

Comments