செய்தியும், சிந்தனையும்....!

பக்தி வந்தால்?

ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு - கோவில்களில் கட்டுப்பாடுகள் தளர்வு: - தமிழக அரசு அறிவிப்பு.

ஏன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குக் கரோனா தொற்று ஏற்படாதா? ஏற்கெனவே திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகரும், சிதம்பரம் நடராசன் கோவில் தீட்சதரும் கரோனாவால் பரிதாபமாகப் பலியாகவில்லையா? சபரிமலை அய்யப்பன் கோவில் பணியாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லையா?

பக்தி வந்தால் புத்தி போகும் என்பது இதுதான்!

வரவேற்கத்தக்கதே!

மணமகன், மணமகள் இருப்பிடத்தின் அடிப்படையிலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம்: - தமிழக அரசு அறிவிப்பு.

வரவேற்கத்தக்கது- திருமணம் நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில்தான் பதிவு செய்ய முடியும் என்றிருந்த நிலையில், நடைமுறையில் இடர்ப்பாடுகள் இருந்தன.

திருமணத்துக்காகப் பெரும் செலவு செய்வது தடுக்கப்பட்டு, பதிவுத் திருமணங்கள் பெருகுவது வரவேற்கத்தக்கதே!

டில்லி போராட்டமும் - தந்தை பெரியாரும்!

எங்கள் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லை: - டில்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு.

ஒரு போராட்டம் என்றால் உறுதியும், கட்டுப்பாடும், வன்முறையின்மையும் தேவை என்ற தந்தை பெரியார்தம் கோட்பாட்டுக்கு இலக்கணமான போராட்டம் - பலே, பலே!

‘‘கடிதோச்சி

மெல்ல எறிக!''

2019 ஆம் ஆண்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 5068 ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மீதான நடவடிக்கைகள் திரும்பப் பெறவேண்டும்: - எதிர்க்கட்சித் தலைவர் மு..ஸ்டாலின் வலியுறுத்தல்.

கடிதோச்சி மெல்ல எறிக!' என்ற குறள் ஆட்சிக்கான இலக்கணம் - .தி.மு.. அரசுக்குத் தெரியவே தெரியாதா?

ஒழிப்பு வேலையில் இலங்கை!

இலங்கை அரசின் மாகாண ஒழிப்பு - ஈழத் தமிழர்களின் சுயமரியாதையைப் பறிக்கும் - இந்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும்: - தி.மு.. பொருளாளர்

டி.ஆர்.பாலு வேண்டுகோள்.

மாகாணங்களின் உரிமைகளை ஒழிப்பதில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் போட்டியோ!

வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தால், இணையத் தொடர்பு வழியில் பெயர்களை இணைக்கலாம்: - தேர்தல் ஆணையம்.

வாக்காளர்களே - இந்தத் தேர்தல் முக்கியம் - சமூகநீதி, மதச்சார்பின்மை காப்பாற்றப்பட உடனே உங்கள் பெயரை வாக்காளர்ப் பட்டியலில் சேர்த்து, உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்!

படித்தவர்கள் கூட இந்தப் பிரச்சினையில் அலட்சியமாக இருப்பது வருந்தத்தக்கது.

Comments