அய்.ஏ.எஸ். உள்ளிட்ட 104 மேனாள் அதிகாரிகளின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 1, 2021

அய்.ஏ.எஸ். உள்ளிட்ட 104 மேனாள் அதிகாரிகளின் கடிதம்

உத்தரப்பிரதேச மாநிலம் இன்று வன்முறை வெறுப்பு மதவெறி அரசியல் மய்யமாகிவிட்டது என்று முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உட்பட 104 முன்னாள் அய்..எஸ் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள்  கையொப்பமிட்டு கடிதம் ஒன்றைச் சாமியார் முதல்வர் ஆதித்யநாத்திற்கு  எழுதியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் இன்று மதவெறியாட்டம், வன்முறை வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மை அற்ற அரசியலின் மய்யமாக மாறிவிட்டது.  மதமாற்றத் தடைச் சட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட சட்டம் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதைத் திரும்பப் பெறவேண்டும். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பதவியில் உள்ளவர்கள் நமது அரசமைப்புச் சட்டத்தைத் தெளிவாகப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.

இந்த ஆட்சியில் மதவெறி நஞ்சு முழுமையாகப் பரப்பப்பட்டு வருகிறது, இளைஞர்கள் நமது மதவெறியாளர்களால் முழுமை யாக வன்முறையாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். மதவெறி  மூளையில் ஏறியதால் இளைஞர்களுக்கு இந்தியா என்பது அனைத்து மதத்தினருக்குமான சுதந்திரமான ஒரு நாடு என்பதை மறக்கலாமா? மறுக்கலாமா?

சில நாட்களுக்கு முன்பு முராதாபாத் என்ற பகுதியில் பஜ்ரங்தள் அமைப்பினர் பிற மதத்தினர் மீது மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வன்முறையில் இறங்குமாறு இளைஞர்களைத் தூண்டும் துண்டறிக்கைகளைப் விநியோகத் தினர். காவல்துறையினரும் இந்த துண்டறிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். மேலும் அரசின் மதமாற்றத் தடைச்சட்டத்தின் பெயரில் சிறையில் அடைக்கப் பட்ட இஸ்லாமிய இளைஞர் மற்றும் அவரது இந்து மனைவி கொடுமைப் படுத்தப் படுகின்றனர். சிறையில் பெண்ணின் 4 மாத கரு கலைக்கப் பட்டுள்ளது. இது மிகவும் கொடூரமானது ஆகும்.

அதே போல் பிஜ்னோர் என்ற பகுதியில் இரண்டு இளைஞர் களை பொது இடத்தில் இந்து அமைப்பினர் சரமாரியாகத் தாக்கி அவர்களைக் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மீது மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. 16 வயது இந்து சிறுமியை மதம் மாற்றி திருமணம் செய்ய முயன்றனர் என்று அவர்கள் மீது குற்றம்சாட்டப் பட்டது. இது தொடர்பாக அந்தச்சிறுமி மற்றும் அவரது தாயார் இது உண்மை அல்ல என்று கூறியும், எவ்வித விசாரணையு மின்றி சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தவறானது; அவர்கள் எந்த தவறும் செய்யாதவர்கள் அவர்கள்  அச்சிறுமியிடம் பேசி இருக் கின்றனர். பிற மதத்தைச் சேர்ந்த ஆணோ பெண்ணோ பேசுவதே தவறு என்றால் நாம் எந்த காலகட்டத்தில் இருக்கிறோம்?

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது, சில அமைப்புகள் தங்களைப் பெரும்பான்மை மதத்தின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு காவல்துறையினரின் பணியினை இவர்கள் கையிலெடுத்துக் கொண்டனர். அதே போல் காவல்துறையினரும் சமூகவிரோதிகளுக்குச் சாதகமாகவே செயல்படுகின்றனர். இங்கு இஸ்லாமியர்களுக்கு எவ்வித உரிமைகளும் இல்லாமல் போய்விட்டது, அவர்களின் தரப்பு உண்மைகள் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தம்பதிகளின் வழக்கை விசாரித்து அவர்கள் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை. அவர்களுக்கு வாழ உரிமை உள்ளது, அவர்கள் மீது எதன் அடிப்படையில் குற்றத்தைக் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்தீர்கள் என்று கேட்டுள்ளது

நமது அரசியல் அமைப்பில், திருமண வயதிற்கு வந்த ஆண் பெண் இருவருமே தங்களின் இணையைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமை உள்ளது. இதில் மூன்றாம் நபர்களின் தலையீடு தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் "லவ்ஜிகாத்" என்ற பெயரில் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவது திருமண மானவர்களைச் சிறையில் அடைப்பது போன்றவை அரசமைப் புச்சட்டத்தை முற்றிலும் மீறிய செயலாகும். தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதே போல் மதம் மாறும் உரிமையும் உள்ளது.

ஆனால் உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் குறிவைக்கப் படுகின்றனர். அவர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிக் கின்றனர், என்று 104 முன்னாள் அதிகாரிகள்  தாங்கள் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளனர்.

மதமாற்றத் தடைச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று ஏற்கெனவே உச்சநீதிமன்ற நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியுள்ளது. அதே போல் உத்தரப் பிரதேச அரசு கொண்டுவந்துள்ள மதமாற்றத் தடைச்சட்டம் அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது என்று  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லேகூர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதிகாரபூர்வமாக ராம ராஜ்ஜியம் என்று அறிவிக்காமல் அதே நேரத்தில் இந்து ராஜ்ஜியத்தில் அரங்கேறக் கருதும் அத்தனை நடைமுறைகளையும் ஒவ்வொன்றாக செயல்படுத்தத் தொடங்கி விட்டனர். இந்தியாவில் உத்தரப்பிரதேசம் இந்து ராஷ்டிராவின் சோதனைக் கூடமாக ஆக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை.

இது ஏதோ ஒரு மாநிலத்தில் நடக்கிறது என்று அலட்சியப் படுத்தாமல் இந்தியாவே கிளர்ந்து எழுந்து ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

No comments:

Post a Comment