ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 12, 2020

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: தமிழ்நாடு எங்கும் எழுச்சியுடன் நடைபெற்றிருக்கும் புதிய சந்தா சேர்க்கை எதனைக் காட்டுகிறது? தாங்கள் என்ன நினைக்கிறீகள்?

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.

பதில்: நமது இயக்கமாம் திராவிடர் கழகத்தின் செயல்வீரர்களான நமது பொறுப்பாளர்களின் குன்றாத ஆர்வமும், கடமை உணர்வும், தமிழ்ப் பெருமக்கள் - கட்சி, ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சந்தாதாரர்களாகி விடுதலையின் வாசகர் வட்டத்தை விரிவாக்கியுள்ள பேராதரவும் எடுத்துக்காட்டானவை!

முயன்றால் முடியாதது எதுவும் நம் தோழர்களுக்கு இல்லை என்பதும், இதுபோல மக்களுடன் தொடர்பு வட்டத்தை நாளும் ஒவ்வொரு மாவட்டம், நகரம், பெருநகரம், கிராமம், சிற்றூர், பேரூர்களில் பெருக்குவது நமது கொள்கை லட்சியப் பயணத்தை எளிதாக்கும் சிறந்த வழிமுறையாகும்.

இரண்டாவது கட்டம் டிசம்பர் 24 - தந்தை பெரியார் நினைவு நாளில் முத்திரை பதிக்க முந்தைய உழைப்பு அச்சார உழைப்பு; பிரமிப்பே - இனிமேல்தான்!

என் பங்களிப்பு என்று ஒவ்வொரு தோழரும், ஆதரவாளர்களும், பொறுப்பாளர்களும், நம் அமைப்புகளும் போட்டி போட்டு வென்று காட்ட முன்வரவேண்டும் - இடையில் இரு வாரங்கள்தான்!

15 நாளில் இணையற்ற சாதனை தொடரட்டும்!

வரலாற்றில் இடம்பெறட்டும் வற்றாத உழைப்பு - திராவிட நாற்றுகளை வளர்க்க அது சிறந்த வழி!

கேள்வி: ஒரே நாடு - ஒரே தேர்தல் என்ற கோஷம் நாளைக்கு ஒரே கட்சி- ஒரே ஆட்சி என்பதற்கு வழி வகுக்கும் அல்லவா?

- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

பதில்: அதற்கு வழிவகுக்கத்தான் திட்டமிட்டு துவக்கி, திணிக்கிறது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. எனவே, மிகுந்த எச்சரிக்கை தேவை. ஜனநாயகம் சுருக்கப்படவேண்டுமாம்! கேட்டீர்களா?

கேள்வி: டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கு பல ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்?

- வெங்கட.இராசா, ம.பொடையூர்.

பதில்: இரண்டு காரணங்கள்:

1. ஊடகங்கள் - கார்ப்பரேட்டுகளிடம்!

அடிமையாகி விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்க அந்த மூன்று சட்டங்களும் வழிவகுப்பதால், அதற்குள்ள மக்கள் எதிர்ப்பை இருட்டடிக்கும் முறை.

2. பத்திரிகை சுதந்திரம், பத்திரிகை தர்மம் சிதைந்து, நாளும் - அச்சத்தின் காரணமாக, அரசு விளம்பர பிச்சை ஆசை  காரணமாக திட்டமிட்டே முக்கியத்துவம் தராது நடந்துகொள்ளும் ஒருதலைப்பட்சம்!

கேள்வி: தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?

- எஸ். பூபாலன், திண்டிவனம்.

பதில்: தற்போதைய தமிழக அரசில் இயல்பாக (Routine) நடைபெற வேண்டியவை கூட போராடி, அறிக்கைப் போர் நடத்தி, நீதிமன்றங்களுக்குப் படையெடுத்த பின்னரே நடைபெறும் நிலைக்கு இந்த ஒப்புதலும், ஓர் எடுத்துக்காட்டு. "கோப்புகள் பல மாதங்கள் ஊறுகாய் ஜாடியில் ஊறலாமா கவர்னர் மாளிகையில்?" மக்கள் கேள்வி இது! விடை அவர்களே தரும் காலம் நெருங்குகிறது!

கேள்வி: 2021 ஆம் ஆண்டும் புத்தாண்டுப் பலன் கேட்க ஜோதிடர்களை நோக்கி மக்களும், ஊடகங்களும் செல்லப் போகின்றனரா?

- ச.ஞானம், ஆலங்குளம்

பதில்: போதை அவ்வளவு எளிதில் தீராது! கரோனா தொற்று கொடிகட்டிப் பறந்து சாதனை வசூல் செய்தது டாஸ்மாக்தானே!

அதுபோல, ஊடகங்களும் மாதந்தோறும் பலன், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்று புதுப்புது அஸ்திரங்கள் விட்டு பிழைக்க வெட்கப்படவில்லை. பாடம் கற்க வேண்டியவர்கள் நிச்சயம் பாடம் கற்கமாட்டார்கள்!

கேள்வி: எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு மறைமுக மான பச்சைக்கொடியை உச்சநீதிமன்றம் காட்டியுள்ளது என்று புரிந்துகொள்ளலாமா?

- க.க.தென்றல், ஆவடி

பதில்: சரியாகப் புரிந்துகொண்டீர்கள்! ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. சட்டத்தைப் பணக்காரன் செய்கிறான்; சட்டம் ஏழைகளை ஆளுகிறது என்று. - அதுதான் இது - ஒரு புதிய வடிவம்!

கேள்வி:  நாடு இப்போது இருக்கும் நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அவசியமானதா?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. குடிப்பது கூழ்; கொப்பளிப்பது பன்னீர் - அதை நினைவூட்டுகிறது!

பழைய பார்லிமெண்டுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்று அடிக்கல் நாட்டு விழாவில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

கேள்வி: அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணைக் கமிஷன் வைத்ததே தவறு என்கிற ரீதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொதித்து எழுந்துள்ளாரே?

- அரு.விஜய், அம்பத்தூர்

பதில்: அவர் (கமல்ஹாசன்) கட்சி பெயர் மக்கள் நீதி மய்யம் - ஊழல் குற்றச்சாட்டு வந்தால், நீதிபதி விசாரணை கூட செய்யக் கூடாது! நானே வேஷம் கட்டி ஆடுவேன் என்று வீர வசனம் பேசுவது நகைமுரண் அல்லவா? விசார ணைக் கமிஷன் அறிக்கை வந்து எதிர் வழக்காடட்டும்!

கேள்வி:  நீதிக்கட்சி வெளியிட்ட வகுப்புவாரி ஆணையில் வழங்கப்பட்டிருந்த பார்ப்பனர்களுக்கான இட ஒதுக்கீடு எந்த ஆண்டு வரை தொடர்ந்தது? யாருடைய ஆட்சியில் நிறுத்தப்பட்டது?

- க.கருணாமூர்த்தி, முடப்பள்ளி, விருத்தாசலம்    பதில்: 1950 வரை நீடித்தது; என்றாலும்கூட 3 சதவிகித பார்ப்பனர்களுக்கு 16 சதவிகித இட ஒதுக்கீடு அதில் கிடைத்தது. அதையே போதாது; முழுவதும் தங்களுக்கே வேண்டும் என்றனர். நிறுத்தப்பட்டது - 1951 அரசமைப்புச் சட்டத்  திருத்தம் வருமுன் காங்கிரஸ் அரசு காலத்தில்.

கேள்வி: தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்ட ஊட்டி மலை ரயிலில் பயணிகள் கட்டணம் மூன்றாயிரம் ரூபாயாம். ரயில்வே தனியாரிடம் சென்றால் நிலைமை என்ன என்பதற்கு இது ஒரு சான்றா?

- கி.சாமிநாததுரை, மதுரை

பதில்: ஆம்! ஆம்! அரசே உணவகம் நடத்தி ரயில்வேயில் தண்ணீர் பாட்டில் கூட குறைந்த விலைக்குத் தந்தது காங்கிரஸ் ஆட்சியில் - லாலு போன்றவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்தது பொற்காலம். இப் போது ஒப்பிட்டுப் பாருங்கள், புரியும்.

No comments:

Post a Comment