உத்திரப்பிரதேச பள்ளி இறுதித்தேர்வில் எட்டு லட்சம் பேர் இந்தி மொழிப்பாடத்தில்  தோல்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 6, 2020

உத்திரப்பிரதேச பள்ளி இறுதித்தேர்வில் எட்டு லட்சம் பேர் இந்தி மொழிப்பாடத்தில்  தோல்வி

லக்னோ, ஜூலை 6 உத்திரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தேர்ச்சி விகிதம் வெறும் 74 விழுக்காடு மட்டுமே! அதிலும் தாய் மொழி என்று அவர்கள் மீது திணிக்கப்பட்ட இந்தியில் 8 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.


சுமார் 56 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் மொழிப் பாடத்தில் மட்டும், அதாவது தாய் மொழியான ஹிந்தி பாடத்தில் மட்டும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 95 ஆயிரம் மாணவர்கள் தாய்மொழி பாடத்தில் தோல்வி அடைந்தது அம்மாநில கல்வித் துறைக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.


மேலும் இந்தி தேர்வை சுமார் 2 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் எழுதவே இல்லை என்ற தகவலையும் மாநில தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.  இந்த ஆண்டு  தேர்வு எழுதுவோர் எண்ணிக்கையும் மிகவும் குறைந் துள்ளது. அதாவது கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவு அதிகரித்துள்ளது.


இந்தியாவின் மிகபெரிய மாநிலமான உத் திரப்பிரதேசத்தில் மக்கள் மூன்று மொழிகளில் பேசுகின்றனர். மத்திய உத்திரப்பிரதேசத்தில் கான்பூரி மொழி. தெற்கு மற்றும் பீகாரை ஒட்டிய கிழக்கு எல்லையில் போஜ்பூர் மற்றும் வடக்கே கடிபோலி என்னும் பழைய இந்துஸ் தானி மொழி.  இன்றும் இந்த மொழியில் தான் பேசிக்கொள்வார்கள் இந்த மொழிகளில் திரைப்படங்களே எடுக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.


டில்லி பாஜக முன்னாள் தலைவர் மனோஜ் திவாரி போஜ்பூரி, கான்பூரி மொழித்திரைப் படங்களில் வரும் நாயகன் ஆவார். உத்திரப் பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத்தின் கோரக்பூர் வடக்கு உத்திரப்பிரதேசத்தில் வருகிறது. இப்பகுதியில் வரும் நாளிதழ்கள் இந்தியில் இருந்தாலும் அதில் எழுதப்படும் பெரும்பாலான வார்த்தைகள் கடிபோலி இந்துஸ்தானியாகவே இருக்கும். இந்த நிலையில் ஒட்டுமொத்த உத்திரப்பிரதேச மாணவர்களுக்கு சற்றும் தொடர்பே இல்லாத இந்தியை படிக்க வைத்த காரணத்தால் 8 லட்சம் பேர் தோல்வியடைந்தனர்.  கடந்த ஆண்டு 13 லட்சம் பேர் இந்தித் தேர்வில் தோல்வி அடைந்தனர். கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகையால், தோல்வி அடைந்தவர்களும் அதிகம் இருந்தனர்.


 2018 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச அரசு காப்பியடிப்பதை தடுக்க பல நடைமுறை களைக் கொண்டுவந்தனர். அந்த ஆண்டு 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதவே வரவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு காப்பியடிப்பதைத் தடுக்கும் கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கவில்லை. அப்படி இருந்தும் இந்தித் தேர்வில் கடந்த ஆண்டு 13 லட்சம் பேர் தோல்வியடைந்தனர். இந்த ஆண்டு அரசு நிர்வாகம் காப்பியடிப்பதை முற்றிலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இந்த நிலையில் கூட இந்தியில் 8 லட்சம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.


கடந்த மூன்று ஆண்டுகளாகவே உத்திரப் பிரதேசத்தில் பள்ளிப்படிப்பை பாதியில் விடும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. உத்திரப்பிரதேச அரசும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தத்தைக் கொண்டுவந்து பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி, சிறார்களை வேலைக்குச் செல்வதை சாமியார் அரசு ஊக்குவிக்கிறது.


 இந்த நிலையில் இதே இந்தியை இந்தியா முழுவதும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று மத்திய அரசை சேர்ந்த நபர்கள் தொடர்ந்து நீதிமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment