ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

ஆசிரியர் விடையளிக்கிறார்

வன்னி அரசு,


துணைப் பொதுச் செயலாளர்,


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி



ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,


கேள்வி 1: 60 ஆண்டுகளாக காலத்துக்கும் மேலாக, மக்களைப் பகுத்தறிவுப் பாதைக்குக் கொண்டு செல்ல களமாடி வருகிறீர்கள். ஆனால் இன்றைய அரசியல் - சமூகச் சூழல் அதை நோக்கிப் பயணிக்கிறதா அய்யா?


கேள்வி 2: ஜாதிய - மதவாதத்துக்கு எதிராகச் சமரசமில்லாமல் அய்யா அவர்கள் களமாடிவருவது மகிழ்ச்சி! கடந்த காலங்களில் ஜாதிய - மதவாதிகளிடமிருந்து வந்த அச்சுறுத்தல்- ஆபத்துகளை எப்படி எதிர்கொண்டீர்கள் அய்யா?


பதில் 1: நன்றி தோழர் வன்னி அரசு அவர்களுக்கு!


எதிர்க்கொள்கையாளர்களின் கண்மூடித்தனமான செயல்களும் நடவடிக்கைகளும், மற்ற முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்து ஓரணியில் திரண்டு சரியான அரசியல் சமூகச் சூழலை உருவாக்க அதுவே 'பூமராங்' ஆகும். எதிர்க்க எதிர்க்க உணர்வுகள் விளையும். அதற்கு ஊடகங்கள் உதவ முடியும்.


இன்றைய சூழலில் மக்கள் இயக்கங்கள் முன்வந்தால். பிறகு ஊடங்களில் ஒரு பகுதி பின்வரும். நல்ல விளைவுகள் ஏற்படும் - பழைய வரலாறு திரும்பக்கூடும்.


நம்பிக்கையை ஒரு போதும் இழக்கக்கூடாது.


பதில் 2: இதுவரை 6 தடவைக்கு மேல் கொலை முயற்சி. பயப்பட்டோமா? கொள்கையாளர்களுக்கு இது சகஜம் தானே! அது பற்றி பெரிதும் கவலைப்படாமலே தொடர்ந்து பணியாற்றி வருவதுதான் முக்கியம். பாதுகாப்பு தேடுவதோ, பதுங்குவதோ, ஒதுங்குவதோ பெரியார் பாடம் அல்லவே! வெளியே வரும்போது செலவுக் கணக்கு எழுதி விட்டுதானே, நம்மைப் போன்றவர்கள் வருகிறோம். அப்புறம் எது வரினும், எந்த முடிவையும் எதிர்பார்ப்பதே எதிர்கொள்ளும் முறை!



கேள்வி: கொரானா வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசாங்கம் வழங்கும் இலவசப் பொருட்களை வீட்டுக்கு வீடு மொபைல் வண்டியில் கொடுக்க அரசு முன்வருமா?               - பி.சவுந்தர்ராஜன், சேலம்


பதில்: கொடுத்தால் மிக நன்மையாக இருக்கும். மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க இது நல்ல வழி. தமிழக  அரசின் உணவுத் துறை அமைச்சர் இந்த கரோனா ஊரடங்கு தொற்று அச்சம் நீங்கும் வரை செய்யலாம் - செய்ய வேண்டும்.


கேள்வி: 27% இட ஒதுக்கீட்டின் பயன் பற்றி, பிற்படுத்தப்பட்டோருக்குப் புரிதல் இல்லையே - ஏன்?                - வெங்கட.இராசா, ம.பொடையூர். 


பதில்: பழம் சாப்பிடுவோர் எத்தனை பேர் தோட்டக்காரனை நினைக்கிறார்கள்? பூ முடிக்கும் கூந்தல்காரப் பெண்கள் பூச்செடி வைத்தவரையோ, தண்ணீர் ஊற்றி வளர்த்து பூவாக்கிட நாளெல்லாம் பாடுபடும் இருபால் உழைப்பாளர்களை நினைக்கிறார்களா?அது இயற்கைதான்; நன்றி காட்டுவது நம்மின மக்களுக்கு நஞ்சு என்பது தானே பொது விதி. நன்றி - விதிவிலக்கு தானே என்றாலும், நம் பணியை நிறுத்த முடியாது!


கேள்வி: மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளை நேரடியாக நிர்வகிக்கும் பொறுப்பை மத்திய அரசு ஏற்றுள்ளதே? போகிற போக்கில், பேருந்து நிலையங்களில் உள்ள பொதுக் கழிவறைகளையும் மத்திய அரசு தன்னுடைய நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்துவிடும் போலிருக்கிறதே? கோல்வால்கரின் Bunch of Thoughts-ன் படி மாநிலங்களே இல்லாத நாட்டை உருவாக்க முனைப்புக் காட்டுவது பட்டவர்த்தனமாகத் தெரிகிறதே?                - செல்வம், பஹ்ரைன்


பதில்: கண்டனங்கள் மாநில அரசுகளிடமிருந்து மேலும் பலமாகக் கிளம்பி ஆக வேண்டும். வழமைபோல் தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பும், தமிழ்நாட்டு ஆளுங்கட்சியின் மென்மையான எதிர்ப்பும் தானே தெரிகிறது. எல்லா மாநிலங்களும் தங்கள் உரிமையை உணர வேண்டாமா?


கேள்வி: 100 நாள் வேலைக்கு, நாடு முழுவதும் மொத்தம் 35 இலட்சம்பேர் இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பித்திருப்பது எதனைக் காட்டுகிறது?


- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.


பதில்: நாட்டில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாகவும், 15 லட்சத்தைப் வங்கியில் போடுவதாகவும் கூறி, ஒரு முறை அல்ல இரு முறை பதவிக்கு வந்த பிரதமர் ஆட்சிக்கு ஏற்பட்ட சவால்! வேலையில்லா திண்டாட்டம் வெளிச்சம்!


கேள்வி: நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தை அய்யா தொடங்கினார் என்பது தெரியும். சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தைத் தாங்கள் தொடங்கியதன் தேவையும், சூழலும் என்ன? அந்தச் சிந்தனை எப்படி வந்தது? அதற்கு கைவல்ய சாமியார் பெயர் வைக்கப்பட்டது ஏன்?            - தென்றல் மணியம்மை, ஆவடி


பதில்: நாட்டின் வயதான முதியோர்களை அவர்களால் பயன் பெற்றவர்களே சரியான பராமரிக்காமல் சுடு சொற்களைக் கூறுவதாலும், விடுதியின்மையாலும் கஷ்டப்படும் முதியோர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதும், அதிலும் முன்னுரிமையாக இயக்கக் குடும்பத்தவர், இயக்கத் தியாகிகள் (மற்றவர்களை மறுப்பதில்லை) இவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் உதயமானது முதியோர் இல்லம்.


சாமி கைவல்யம் தந்தை பெரியாரை ஒரு சிந்தனைத் தோழர் - ஆய்வாளர், தன்னிறைவுடன் கடைசி காலத்தில் குடிஅரசு அலுவலகமே குடும்பமாகக் கொண்டவர். அநத் சுயமரியாதை அறிவுச் சுடரொளியை மரியாதை செய்யவே அப்பெயர் தேர்வு செய்யப்பட்டது.


கேள்வி: மூன்று மாதத்துக்கு முன்பு ரூ.1000 தந்தவர்கள், மீண்டும் அண்மையில் தான் ரூ.1000 தந்தார்கள். அதை வைத்து எத்தனை நாள் குடும்பம் நடத்த முடியும்? மாதம் 5000 பணமோ அல்லது தேவையான பொருள்களையோ தந்து வீட்டிலேயே இருக்கச் சொன்னால் இருப்போம். அதை விட்டு வெளியே போகாதீர்கள் என்று மட்டும் சொன்னால், ஏழைகள் என்ன அய்யா செய்ய முடியும்?       - தென்றல், பெரம்பூர்


பதில் 6: 7500 ரூபாய் ரொக்கம் தருவதுதான், நியாயமாக ஏழைகளை ஊரடங்கில் வாழ வைப்பதோடு, பொருளாதாரத் தேக்கத்தையும் உடைத்து, ஒரு மாற்றத்தை உருவாக்க உதவும்.


கேள்வி: முற்போக்கு, பெண்ணுரிமை பேசும் பெண்களிடம்கூட, கிசுகிசு பேசும் பழக்கமும், அடுத்தவர் தனிவாழ்வில் தலையிடும் பழக்கமும் இருக்கிறதே! இது பற்றி உங்கள் பார்வை?  - இளவெயினி, பாண்டிச்சேரி


பதில்: எந்த மனிதரிடம்தான் குறைபாடுகள் இல்லை? எங்கிருந்தாலும் மக்கள் மக்களே என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு - எவராயினும் மக்களே! மனித குல பலவீனங்கள் இருப்பது இயல்பு தானே! உங்கள் கேள்விக்குப் பிறகாவது அப்படி யாராவது இருப்பவர்கள் மாறினால் மகிழ்ச்சி - நம் அனைவருக்கும்!


கேள்வி: 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆறு பாடங்களை, அய்ந்து பாடங்களாகக் குறைக்கிறோம் என்று தமிழக அரசு செய்துள்ள மாற்றங்கள், மாணவர்களின் மேற்படிப்புக்கு ஆபத்தாக முடியும் என்று சொல்லப்படுகிறதே அய்யா? - இளையராசா, பிலாக்குறிச்சி


பதில்: வெறும் அதிகாரிகளை மட்டும் கொள்ளாமல் கல்வியாளர்களைக் கொண்ட சிறந்த குழு அமைத்து, தமிழ்நாடு தழுவிய அளவில் கல்வியாளர்களிடம் கலந்துரையாடல் நடத்தி கருத்துகளைப் பெற்று, குழுவிடம் அறிக்கை தரச் சொல்லி, சரியான முடிவு எடுப்பது அவசியம்! பாடப் பிரிவுகளில் குழப்பம் இருப்பதாக செய்தி வருகின்றது. இப்படி ஆபத்து வரக்கூடிய வாய்ப்புள்ள இதில் நிதான, நீக்குப் போக்கு கொண்ட முறை அவசியம் - மாணவர்கள் கல்வியில் அரசியல் விளையாட்டு கூடாது!


No comments:

Post a Comment